அரசியல் கைதிகளின் விவகாரம் குறித்து ஆராயப்படுமா ?

32

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று பாதுகாப்பு அமைச்சின் குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்தக் கூட்டம் இடம்பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக் கூட்டத்தில் பங்கேற்குமாறு வடக்கு கிழக்கைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இக் கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாகவும், வடக்கு கிழக்கு நிலவரம் குறித்தும் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடந்த புதன்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சந்தித்து பேசியபோது 17ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சின் குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அதில் இவ்விடயம் குறித்து ஆராய்ந்த பின்னர் முடிவிடினை அறிவிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்ததாக கூட்டமைப்பினர் கூறியிருந்தனர்.

இந் நிலையிலேயே இன்றைய தினம் இக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இக்கூட்டத்தில் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பிலும் ஆராயப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE