02:00 என்ற கோல் கணக்கில் வென்று வடக்கின் கில்லாடியானது பாடும்மீன் அணி. மூன்றாவது முறை வடக்கின் கில்லாடியாகவும் கிண்ணத்தைக் கைப்பற்றி குருநகர் பாடும்மீன் அணி சாதனை படைத்தது.
அரியாலை சரஸ்வதி விளையாட்டுக்கழகம், தமது நூற்றாண்டு விழாவையொட்டி ‘வடக்கின் கில்லாடி யார்’ என்னும் கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியொன்றை அரியாலை கால்ப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் நடத்தி வந்தது.
வருடாவருடம் யாழின் கில்லாடி என நடத்தப்பட்டு வந்த இந்தச் சுற்றுப்போட்டியானது, இந்த வருடம் வடக்கின் கில்லாடியாக மாற்றப்பட்டு, வடமாகாணம் தழுவிய வகையில் மொத்தம் 32 அணிகள் இந்தச் சுற்றில் பங்குபற்றின.
இந்தச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு, இரண்டு முறை சம்பியனாகிய குருநகர் பாடும்மீன் அணியும் இளவாலை யங்ஹென்றிஸ் அணியும் தகுதி பெற்றன.
இறுதிப்போட்டி 11 ஆம் திகதி வியாழக்கிழமை அரியாலை கால்ப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் நடைபெற்றது.
45 ஆவது நிமிடத்தில் பாடும்மீன் அணியின் விசோத் அபாரமாக தலையால் மோதி கோல் ஒன்றை அடித்தார். முதற்பாதியாட்டம் அந்தக் கோலுடன் நிறைவுக்கு வந்தது
இரண்டாம் பாதியாட்டத்தில் ஹென்றிஸ் அணிக்கு, 51 மற்றும் 60 ஆவது நிமிடங்களில் கிடைத்த பிறி கிக் வாய்ப்பை அவ்வணி வீணடித்தது. 62 ஆவது நிமிடத்தில் மிக இலகுவான வாய்ப்பும் ஹென்றிஸ் அணிக்கு கைநழுவிப் போனது.
65 ஆவது நிமிடத்தில் ஞானரூபன் அடித்த அருமையான பந்தொன்று கோல் கம்பத்துக்கு மேலால் சென்றது.
67 ஆவது நிமிடத்தில் சாந்தன் அடித்த மிக நேர்த்தியான அடியை, ஹென்றிஸ் கோல் காப்பாளர் அமல்ராஜ், அசாத்தியமாக பிடித்து கோலைத் தடுத்தார்.
77 ஆவது நிமிடத்தில் பாடும்மீன் அணியின் சாந்தன் மிகவும் அபராமாக டைவ் அடித்து அடித்த பந்து கோலாக மாறியது. அந்தக் கோலுடன் பாடும்மீன் அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.