பெண்ணின் தங்கச்சங்கிலியை அறுத்த நபர் விளக்கமறியலில்

34

திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் பெண்ணொருவரின் மூன்று பவுனுடைய தங்கச்சங்கிலியை அறுத்துச் சென்ற நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபரை இம்மாதம் 31ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதவான் துசித்த தம்மிக்க இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அட்டாளைச்சேனை, அல் ஜின்னா வீதி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த சந்தேகநபரும், மற்றொருவரும் இணைந்து தம்பலகாமம் பகுதியில் கடைக்குச் சென்ற பெண்ணொருவரின் மூன்று பவுனுடைய தங்கச்சங்கலியை மோட்டார் கைக்கிளில் சென்று, அறுத்துக் கொண்டு சென்றபோது, பொதுமக்கள் ஒன்றிணைந்து சந்தேகநபர்களை பிடித்துள்ளனர்.

இதில் மற்றுமொருவர் தப்பி ஓடியுள்ளார். மேலும், தப்பி ஓடிய நபரை பொலிஸார் கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பொலிஸார் விசாரணைகளின் பின்னர் குறித்த நபரை கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE