ஆப்கானிஸ்தானை கடுமையாக வாட்டும் வறட்சி!

23
அழகிய இயற்கை வனப்பையும், செழுமையையும் கொண்டிருந்த ஆப்கானிஸ்தான் இன்று வறண்ட கரடு முரடான தளத்தை உரிமையாக்கிக் கொண்டிருக்கின்றது.

மோசமான வறட்சி ஆப்கானிஸ்தானில் பலரின் வாழ்க்கையை, அவர்களின் எதிர்காலத்தை மிக மோசமாக சிதைத்திருக்கிறது, குறிப்பாக பலரை இடம்பெயரச் செய்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களிடையே பெரும் மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

அரச தரப்பினருக்கும், தலிபான்களுக்கும் இடையேயான யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்தவர்களை விட வறட்சியின் காரணமாக தங்களின் வசிப்பிடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்றவர்களே அதிகமாக உள்ளனர். கடந்த பல ஆண்டுகாலம் நிலவும் கடுமையான யுத்தத்தை வறட்சி வென்றிருக்கின்றது.

அங்கு நிலவும் வறட்சி மக்களின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அங்கு நிலைகொண்டுள்ள சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகிறார்.

ஆப்கானிஸ்தானின் மாகாணங்களில் ஒன்றான ஹிராத்திற்கு சென்றுள்ள அவர், அங்கு தற்போது மக்கள் முகம் கொடுக்கும் வன்மையான நிலைமை குறித்த தகவல்களை திரட்டி வருகிறார்.

இந்தநிலைமையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் பசி, பட்டினியால் அல்லலுருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் பெரும்பாலும் சிறார்களும், வயோதிபர்களும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

வடக்கு மற்றும் மேற்கு ஆப்கானிஸ்தானில் வறட்சியின் காரணமாக ஏறத்தாழ 260,000 பேர் தங்கள் வசிப்பிடங்களிலிருந்து வெளியேறி வேறிடங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

சர்வதேச படைகள் போர் நடவடிக்கையை நிறுத்திய பின்னர், 2014 ஆம் ஆண்டுக்குப் பின் ஆப்கானிஸ்தானில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் துயரத்தில் உள்ள மக்களின் வாழ்வில் இந்த வறட்சியும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

2001 ஆம் அண்டு அமெரிக்கா தலைமையிலான படைகள் ஆப்கானில் ஊடுருவி, தாலிபன்கள் வசமிருந்த பல பகுதிகளை கைப்பற்றியது. இந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மீண்டும் தலிபான்களால் பல பகுதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையில் ஏற்பட்ட போரால் இடம்பெயர்ந்தவர்களை விட வறட்சியின் காரணமாக பலர் இடம்பெயர்ந்திருக்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட 2.2 மில்லியன் மக்களுக்கு உதவ 34.6 மில்லியன் டொலர் நிதியை ஐக்கிய நாடுகள் சபை ஒதுக்கியுள்ளது. தற்சமயம் உணவை கொள்வனவு செய்வதற்காக ஐ.நாவின் சர்வதேச உணவு திட்டம் நிதி வழங்கி வருகின்றது. இதில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்வதற்காக துயரத்துடன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றார்கள்.

SHARE