வவுனியா வைத்தியசாலையில் போராட்டம்

11

வவுனியா பொது வைத்தியசாலை சுகாதாரத்துறை தொழிற்சங்கம் ஒன்றிணைந்து இன்று மதியம் 12 மணியிலிருந்து ஒரு மணிவரையான மதிய நேர இடைவேளையின் போது கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து வைத்தியசாலையின் தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கும்போது, நிலுவையிலுள்ள அனைத்துக்கொடுப்பனவுகளையும் உடனே வழங்குமாறு கோரி வவுனியா பொது வைத்தியசாலையில் பணிபுரிகின்ற அனைத்து சுகாதார சேவைகள் பணியாளர்கள் இணைந்து ஒரு எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்கள்.

எங்களுடைய உணவு இடைவேளையின் போது நோயாளர்களின் மருத்துவத்திற்கு எவ்வித பாதிப்புக்களும் இன்றி இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளோம். கடந்த மூன்று வருடங்களாக வருட இறுதியின்போது எங்களுடைய மேலதிக நேரக்கொடுப்பனவுகளும் ஏனைய கொடுப்பனவுகளும் இடை நிறுத்தப்படுகின்ற ஒரு நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.மாகாணசபைக்கு ஒதுக்கப்படுகின்ற நிதி போதாது என்பதை ஒரு காரணமாக வைத்து இச்சம்பவம் இடம்பெற்று வருகின்றது.

வடமாகாணத்தில் மட்டும் தான் இவ்வாறான பிரச்சினைகள் நிலவுகின்றது.
ஏனைய மாகாணங்களில் பெரும்பாலும் கொடுப்பனவுகள் உரிய முறையில் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு வருடமும் குறித்த பிரச்சினைகள் வருகின்றபோதும் இது வராமல் தடுப்பதற்கான எவ்வித பொறிமுறைகளும் இதுவரைக்கும் ஏற்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.

எனவே முன்கூட்டியே திட்டமிடுகின்றபோது இதனைத்தடுத்திருக்க முடியும். மூன்றாவது வருடமும் இதனை நாங்கள் எதிர்கொள்கின்றபோதும் இனிவரும் காலங்களில் இவ்வாறான பிரச்சினைகள் வரக்கூடாது அதற்குரிய முன்கூட்டி திட்டமிடும் நடவடிக்கைகளை அதிகாரிகள் உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தியும் எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னதாக நிலுவையிலுள்ள அனைத்துக்கொடுப்பனவுகளும் உடனே வழங்கவேண்டும் என்று கோரியும் இன்றைய எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளோம்.

வடமாகாணத்தில் வைத்தியர்களுக்கு வைத்திய நிபுணர்களுக்கும் பாரிய பற்றாக்குறை ஒன்று நிலவி வருகின்றது. இப்பகுதிக்கு எவரும் கடமைக்கு வருவதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை.

எனவே அப்பிரச்சினை இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் மேலும் மேலும் தீவிரமடையும்.

இதனைக்கருத்திற்கொண்டு உடனடியாக இதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் எதிர்காலத்தில் எங்களுடைய கொடுப்பனவுகளை கிரமமின்றி வழங்கி வைத்தியர்கள், வைத்திய தாதிகள் வைத்தியர்கள், ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர்கள், ஏனைய அனைத்து சுகாதார சேவைகள் தொழிற்சங்கம் இணைந்து இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

25ஆம் திகதிக்கு முன்னர் எமது கொடுப்பனவுகள் வழங்கப்படாவிட்டால் வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றினை மேற்கொள்வுள்ளோம் என்பதை முன்கூட்டியே தெரிவித்து இதன் மூலம் நோயாளர்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்களுக்கு மன்னிப்பைக் கோருகின்றோம் என்று மேலும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எதிர்ப்பு சுலோகங்களைத் தாங்கியவாறு போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

SHARE