சம்மந்தனும் சுமந்திரனும் புலிகளை விமர்சித்தால், சிறிதரனோ புலிகளை ஆராதிப்பதாகக் காட்டிக் கொள்வார்.ஒரு பச்சையான அரசியல் நாடகம்.

24

 

கூட்டமைப்பின் தலைமைப்பீடம் அரசாங்கத்தோடு இணைந்தும் கலந்தும் பிணைந்தும் கூடிக் குலாவுகிறது என்றால் சிறிதரன் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சிப்பார். அரசாங்கத்துக்குச் சவால் விடுவார்.

சம்மந்தனும் சுமந்திரனும் புலிகளை விமர்சித்தால், சிறிதரனோ புலிகளை ஆராதிப்பதாகக் காட்டிக் கொள்வார்.

போர்க்குற்ற விசாரணையிலிருந்தும் சர்வதேச நெருக்கடியிலிருந்தும் அரசாங்கத்தைக் கூட்டமைப்புக் காப்பாற்றுகிறது என்றால், சிறிதரனோ ஜெனிவாவில் போய் நின்று கொண்டு அரசாங்கத்தை உள்ளே தள்ள வேண்டும் என்பார்.

எதிலும் கூட்டமைப்பு மென்போக்கைக் கடைப்பிடிக்குமென்றால், சிறிதரன் வன்போக்கைப் பிரதிபலிப்பார்.

இதைப்பார்க்கும்போது “சிறிதரன் மிகத் துணிச்சலானவர், இனப்பற்றோடு செயற்படுகிறவர், அரசாங்கத்தை எதிர்ப்பவர், புலிகளைப் பின்பற்றுகின்றவர் என்று சிலருக்குத் தோன்றும்.

இப்படி ஒரு எண்ணத்தைச் சனங்களிடம் உருவாக்குவதே அவருடைய நோக்கமும் கூட. இதில் அவருக்குக் கணிசமான வெற்றியும் கிடைத்திருக்கிறது.

ஆனால், இதைச் சரியாகப் புரிந்து கொள்ளக்கூடியவர்கள் இதையிட்டுச் சிரிப்பார்கள். ஆத்திரப்படுவார்கள்.

உண்மையிலேயே சிறிதரனுடைய நிலைப்பாடு தீவிரத் தமிழ்த்தேசியமே என்றால், புலிகளின் வழிமுறையையே அவர் பின்பற்றுகிறார் என்றால் அவர் சேர்ந்திருக்க வேண்டிய இடம் கூட்டமைப்போ தமிழரசுக் கட்சியோ இல்லை. சம்மந்தன், சுமந்திரன் போன்றோரைத் தலைமையாக ஏற்றுக் கொண்டிருக்கவும் முடியாது. கூட்டமைப்பின் நிபந்தனையற்ற அரசு சார்ப்புக்கும் அரசுடன் ஒத்தோடுவதற்கும் இடமளிக்க இயலாது. தமிழரசுக் கட்சியின் இழுபறிகளில் எல்லாம் ரப்பரைப்போல இழுபட்டுக் கொண்டிருக்க மாட்டார்.

இப்படிச் சொல் ஒன்றாகவும் நடைமுறை இன்னொன்றாகவும் இருக்கவே ஏலாது. புலிகள் அப்படி இருந்ததில்லை.

இந்த நிலையில் நிச்சயமாக கூட்டமைப்போடு சிறிதரன் முரண்பட்டிருக்க வேண்டும். சுமந்திரனையும் சம்மந்தனையும் எதிர்த்து வெளிநடப்புச் செய்திருக்க வேண்டும். கண்டனங்களை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அல்லது தமிழரசுக் கட்சியிலிருந்தும் கூட்டமைப்பிலிருந்தும் முற்றாகவே விலகியிருக்க வேண்டும்.

பதிலாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அல்லது தமிழ் மக்கள் பேரவையிணைந்திருக்க வேண்டும். அல்லது முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் அணியோடிருந்திருக்க வேண்டும்.

ஆனால் அங்கேயெல்லாம் அவர் செல்லவில்லை. அப்படிச் செல்லப்போவதுமில்லை. அதாவது கூட்டமைப்பை விட்டும் சம்மந்தன், சுமந்திரன் தலைமையை விட்டும் வெளியேறப்போவதில்லை.

இதிலிருந்தே தெரிகிறது இது
ஒரு பச்சையான அரசியல் நாடகம்.

SHARE