கழிவு இறக்குமதியை நிறுத்தியது சீனா!

46

வெளிநாடுகளில் கழிவுப் பொருட்களை இறக்குமதி செய்வதை சீனா தடைசெய்துள்ள நிலையில், அது பிரித்தானியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏனைய நாடுகளும் இந்த நடைமுறையை விரைவில் மேற்கொள்ளுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கழிவுப் பொருட்களை மீள்சுழற்சி செய்வதற்கான செலவு பிரித்தானிய உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகரித்துள்ளது.

குறிப்பாக பிளாஸ்டிக் மற்றும் கலப்பு கடதாசிகளின் இறக்குமதியை சீனா தடைசெய்தமை, நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றதென உள்ளூராட்சி மன்றங்கள் குறிப்பிட்டுள்ளன.

உள்ளூராட்சி மன்றங்களின் சங்கத்தின் கருத்துக்கணிப்பின் பிரகாரம், கடந்த வருடத்தில் மாத்திரம் மீள்சுழற்சிக்கான செலவீனம் 500,000 பவுண்களாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. மீள்சுழற்சிக்கு கடினமான பொருட்களின் உற்பத்தியே செலவீன அதிகரிப்பிற்கு காரணமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி பொருட்கள் தொடர்பில் சிரத்தைகொள்ள வேண்டுமென உள்ளூராட்சி மன்றங்களில் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக கறுப்பு பிளாஸ்ரிக் தட்டுகள் போன்ற மீள்சுழற்சிக்கு கடினமான பொருட்களை உற்பத்திசெய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் இத்தடையைத் தொடர்ந்து, மூன்று மாதங்களுக்கு பிளாஸ்ரிக் பொருட்களின் இறக்குமதிக்கு மலேசியா தடைவிதித்துள்ளது. இத்தடை தொடர்பாக வியட்னாமும் தற்போது கவஞ்செலுத்தியுள்ளது.

இந்நிலையில், மீள்சுழற்சிக்கான செலவீனம் அதிகரிக்கும் பட்சத்தில் வரித்தொகை அதிகரிக்கப்பட்டு அதனால் வரிசெலுத்துவோரும் பாதிப்படைவர்.

இந்நிலையை கவனத்திற்கொண்டு உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திப் பொருட்கள் தொடர்பாக அதிக கவனஞ்செலுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சூழலுக்கு பாதிப்பற்ற மற்றும் விரைவில் மீள்சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய பொருட்களை உற்பத்திசெய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE