அரச ஊழியர் மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு

15

மாத்தறை, ஊருபொக்க பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அரச அலுவலர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவிக்கின்றது.

பஸ்கொட பிரதேச செயலாளர் காரியாலயத்தில் கடமையாற்றும் 44 வயதுடைய ஈ.எச்.சமிந்த தயாரத்ன என்பவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணித்துள்ளார்.

இவர் இன்று காலை 9.25 மணியளவில் அகுரஸ்ஸ தோட்டம் வலஸ்முல்ல பகுதியிலுள்ள தனது வீட்டிலிருந்து அலுவலகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணமாகியுள்ளார். இவ்வாறு சென்றவர் மீது ஊருபொக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உலங்கந்த தம்பஹல வீதியில் வைத்து பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் காயமடைந்தவரை பிரதேசவாசிகள் ஹீகொட ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி மரணித்துள்ளார்.

இதனையடுத்து இவரது சடலமானது மரண பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதவர்கள் இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில் எவரும் கைதுசெய்யப்படவில்லை என்பதினால் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணமும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

எனினும் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஊருபொக்க பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

SHARE