வவுனியா வளாகத்தை வன்னிப்பல்கலைக்கழகமாக மாற்ற நடவடிக்கை – மஸ்தான் உறுதி!

36
வவுனியா வளாகத்தை வன்னிப்பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு அரசியல் ரீதியான உயர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார்.

வவுனியா வளாகத்தை வன்னிப்பல்கலைக்கழகமாக மாற்றுவது தொடர்பில் வவுனியா வளாக முதல்வர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் தலைமையில் பொது அமைப்புக்கள், கல்விமான்கள் உடனான கலந்துரையாடல் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வவுனியா வளாகத்தை வன்னிப்பல்கலைக்கழகமாக மாற்றுவது தொடர்பாகவே கலந்துரையாடியிருந்தோம்.

இது தொடர்பிலான கோரிக்கைகள் முன்பும் எனக்கு கிடைக்கப்பெற்று சம்மந்தப்பட்ட அமைச்சருடன் கலந்துரையாடியிருந்த போதும், இது தொடர்பான வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவே கூறினார்.

2017ம் ஆண்டு உயர் கல்வி அமைச்சர் வவுனியா வளாகத்திற்கு வருகை தந்த போது வவுனியா வளாகத்தை வன்னிப்பல்கலைக்கழகமாக மாற்றித்தருவதாக கூறியிருந்தார்.

இருந்த போதும் இந்த வேலைத்திட்டங்கள் நடைபெறுவதில் தாமதம் காணப்படுகின்றது. 1991ம் ஆண்டிலிருந்து வவுனியா வளாகம் இயங்கி வருவதுடன் வன்னிப்பல்கலைக்கழகமாக இயங்குவதற்குரிய அனைத்து வசதிகளும் காணப்படுகின்ற போதும் ஏன் இந்த காலதாமதம், இழுத்தடிப்பு என்று தெரியவில்லை.

எனவே இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அமைச்சருடன் நேரடியாக கதைத்து அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்ற முடிவெடுக்கப்படும்.

இலங்கை வரவு செலவுத்திட்ட அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன்பே இதற்கான அரசியல் ரீதியான உயர்நடவடிக்கை எடுக்கப்படும்“ என தெரிவித்துள்ளார்.

SHARE