பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-
“நாட்டில் அந்நியரின் ஆட்சி நிலவிய காலத்தில் தேயிலை செய்கையை நாட்டில் மேற்கொள்வதற்காக மலைநாட்டுப் பகுதிகளுக்கு இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட எமது உறவுகளே மலையகத் தமிழராவர்.
இவர்கள் வாழும் இடம் வேறாக இருந்தாலும் கலை, கலாசாரம், மொழி மற்றும் வாழ்வியல் பண்புகளில் இலங்கைத் தமிழர்களே ஆவர்.
வடக்கு கிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்களை எப்படி அரசியல் அடிமைகளாக வாழ வேண்டுமென்று நினைத்தார்களோ, அதேபோன்று மலையகத் தமிழ் மக்களும் பொருளாதார அடிமைகளாக வாழ வேண்டுமென்பதே பெரும்பான்மை ஆட்சியாளர்களின் சிந்தனையாகவுள்ளது.
ஆரம்ப காலம் முதலே மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுக்க அங்குள்ள கட்சிகள், தொழிற்சங்கங்கள் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒற்றுமையாக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வந்தாலும் அரசாங்கம் அவற்றினை கண்டுகொள்ளாமல் இருப்பது கவலையளிக்கிறது.
கடும் குளிர் மற்றும் மழை என பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது ஜீவனோபாயத்திற்காக மலைக்காடுகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைப்பதில்லை.
அந்தவகையில் காலம் காலமாக ஏற்படும் சம்பளப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக உருவாக்கப்பட்ட கூட்டு ஒப்பந்தம் காலாவாதியாகியுள்ள நிலையில், அம்மக்கள் தமக்கான சம்பளத்தை நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தரும்படி போராடி வருகின்றார்கள்.
இவர்களது போராட்டம் நியாயமானது. ஆகையால் அதனை நிறைவேற்ற அரசாங்கம் முன்வர வேண்டும்” என அவ்வறிக்கையில் சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.