தேசியத் தலைவரால் பெற்றுதர முடியாத ஈழத்தை எந்த தலைவராலுமே பெற்றுக்கொடுக்க முடியாது

42

தேசியத் தலைவரால் பெற்றுதர முடியாத ஈழத்தையோ எந்த உரிமையையோ  சம்பந்தனாலோ விக்னேஸ்வரனாலோ வேறு எந்த தலைவராலுமே தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியாது என தமிழர் விடுதலை கூட்டணியின் சிரேஷ்ட உபதலைவரும் மட்டும் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து கிருஷ்ணப்பிள்ளை தெரிவித்தார்.

தமிழர்களும் முஸ்லிம்களும் இந்நாட்டின் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றே பெரும்பான்மையினர் கருதுகின்றனர். அவ்வாறு இருக்கையில் இனங்கள், மதங்களுக்கிடையிலான முரண்பாடுகளை ஏற்படுத்துவோர் அரசியலில் இருந்து விடுபட வேண்டும். முரண்பாடுகள் களையப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள அவரது வீட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஈழம் பெற்றுத் தருவோம் அரசியல் தீர்வு கிடைக்கும் என பொதுமக்களை ஏமாற்றாது அபிவிருத்தியினை முன்னெடுப்பவர்களாக தமிழ்த் தலைமைகள் செயற்பட வேண்டும். வடக்கு கிழக்கு மட்டுமல்லாது பொலன்னறுவை, அநுராதபுரம் உட்பட கண்டி இராச்சியத்தை ஆண்ட பரம்பரையினைச் சேர்ந்த நாங்கள் இன்று நிம்மதியாக இருப்பதற்கு இடமில்லாத, நாடில்லாத சூழ்நிலைக்கு ஆளாக்கப்படுத்தியது நமது தமிழ்த் தலைமைகளே. இதை அனைவரும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

வடக்கு கிழக்கு இணைப்பை பாதுகாக்காத நமது தலைமைத்துவம் அதனை பிரிக்கின்ற வேளையிலும் அதற்காக குரல் கொடுக்காத

சட்டமா மேதைகள் நிறைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம்  வடகிழக்கை இணைக்க வேண்டும் என்று வழக்கு வைத்ததுமில்லை, வாதாடியதுமில்லை.

ஆகவே தேசியம் பேசி பொதுமக்களை படுபாதாளத்தில் தள்ளிவிடாது தமிழ் மக்களுக்கான அடிப்படை தேவைகளை பேரம் பேசி நிறைவேற்றிக் கொடுக்க வேண்டியது தமிழ்த் தலைமையின் கடப்பாடாகவும் பொறுப்பாகவும் இருக்க வேண்டும்.

கடந்த காலத்தில் அனைத்தையும் இழந்துவிட்டோம். எந்த அரசாங்கம் வந்தாலும் பேரம் பேசி இருப்பதை பாதுகாத்து எமது மக்களை வாழ வைக்க வேண்டுமே தவிர பிரிவினைவாதத்தை ஏற்படுத்துவோரை ஒதுக்கி வைக்க வேண்டும்.

கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக இயங்கிக்கொண்டிருக்கும் கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகத்தை நிரந்தரமாக தரமுயர்த்திக் கொடுக்காத தலைமைத்துவமாகவே கூட்டமைப்பு இருக்கின்றது.

தமிழர்களும் முஸ்லிம்களும் இந்நாட்டின் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றே பெரும்பான்மையினர் கருதுகின்றனர். அவ்வாறு இருக்கையில் இனங்கள், மதங்களுக்கிடையிலான முரண்பாடுகளை ஏற்படுத்துவோர் அரசியலில் இருந்து விடுபட வேண்டும் என்றார்.

SHARE