அடிக்கடி காயமடைவதை கருத்தில் கொண்டே அவரை அணியில் சேர்க்கவில்லை

35

மேற்கிந்திய அணியுடனான அடுத்த மூன்று போட்டிகளிற்குமான இந்திய அணியில் தனக்கு இடமளிக்கப்படாதது குறித்து சகலதுறை வீரர் கேதார் யாதவ் ஆச்சரியம் வெளியிட்டுள்ளார்.

இந்திய அணிக்காக என்னை ஏன் தெரிவு செய்யவில்லை என்பது எனக்கு தெரியமாலுள்ளது என குறிப்பிட்டுள்ள கேதார் யாதவ் நான் அனைத்து உடற்தகுதி பரிசோதனைகளிலும்  என்னை நிரூபித்துள்ளதுடன்  இந்திய ஏ அணிக்கான போட்டியிலும் விளையாடியுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு என்னை தெரிவு செய்யாவிட்டால் நான் ரஞ்சி போட்டிக்கான அணியில் சிறப்பாக விளையாடுவது குறித்து கவனம் செலுத்துவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய தெரிவுக்குழுவின் தலைவர் எம்எஸ்கே பிரசாத் கேதார் யாதவ் அடிக்கடி காயமடைவதை கருத்தில் கொண்டே அவரை அணியில் சேர்க்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்

நாங்கள் அவர் விடயத்தில் அவசரப்படவில்லை,ஒவ்வொரு முறை அணியில் சேர்க்கப்பட்ட பின்னரும் அவர் காயமடைகின்றார்,அவர் தனது உடல்நிலையை உறுதி செய்வதற்காக கால அவகாசத்தை வழங்க விரும்புகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஒரு பகுதியாக அவர் காணப்படுகின்றார்,அவர் அணிக்கு மீண்டும் திரும்புவார் அவரது திறமை குறித்து எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்துள்ள தெரிவுக்குழுவின் தலைவர் நான் அவரை தொடர்பு கொண்டு அவரை எவ்வாறு கையாளவுள்ளோம் என்பதை தெளிவுபடுத்துவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய தேசிய அணியில் விளையாடிய வீரர்களுடன் தெரிவுக்குழுவினர் உரிய முறையில் தொடர்பாடல்களை பேணவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையிலேயே கேதார் யாதவ் குறித்த  சர்ச்சையும் எழுந்துள்ளது.

முரளி விஜய் உட்பட அணியிலிருந்து நீக்கப்பட்ட சில வீரர்கள் தெரிவுக்குழுவினர் தங்களுடன் தொடர்புகொள்ளவில்லை என தெரிவித்துள்ளனர்.

SHARE