நாலக டி சில்வா கைது..!

39

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் தலைவரான, முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வா நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.

முக்கிய பிரமுகர்களைப் படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

ஜனாதிபதி , முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்புச் செயலர் உள்ளிட்டவர்களைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டினார் என்று, நாலக டி சில்வா மீது நாமல் குமார குற்றம்சாட்டியிருந்தார்.

இதுதொடர்பாக, நாலக சில்வாவுக்கும் நாமல் குமாரவுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் குறித்த 124 ஒலிப்பதிவுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. இதில் 123 ஒலிப்பதிவுகளில் உள்ள குரல்கள், இவர்கள் இருவரது குரல் மாதிரிகளுடன் ஒத்துப் போவதாக நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.

இந்த நிலையில், மேற்படி சதித் திட்டம் தொடர்பாக, நாலக டி சில்வா நேற்று ஐந்தாவது நாளாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்காக முன்னிலையாகியிருந்தார்.

இந்த விசாரணைகளின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டு நேற்றிரவு கோட்டே நீதிவான் லங்கா ஜெயரத்ன முன்னிலையில் நிறுத்தப்பட்டார். அதையடுத்து அவரை, நொவம்பர் 7ஆம் நாள் வரை தடுத்து வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

SHARE