அரசியலமைப்பு ரீதியாக நானே பிரதமர்; ஜனாதிபதி மைத்திரிக்கு ரணில் கடிதம்!

76

 

அரசியலமைப்பு ரீதியாக நானே பிரதமர்;
ஜனாதிபதி மைத்திரிக்கு ரணில் கடிதம்!

அரசியலமைப்பு ரீதியாக தாமே சிறிலங்காவின் பிரதமராக இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, ரணில் விக்கிரமசிங்க நேற்று இரவு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து, நீக்கியுள்ளதாக, சிறிலங்கா அதிபர், நேற்றிரவு கடிதம் அனுப்பியதை அடுத்தே, இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதில்,“ இலங்கை அரசியலமைப்பின் படி நியமிக்கப்பட்ட பிரதமர் நானே என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். தொடர்ந்தும் பதவியில் இருக்கிறேன். அரசியலமைப்பின் (42)4 பிரிவின் கீழ், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைக் கொண்டிருக்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்று அதில் ஒப்பமிடப்பட்டுள்ளது.

அதேவேளை, நேற்றிரவு அலரி மாளிகையில் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடந்திய ஆலோசனைக்குப் பின்னர், கருத்து வெளியிட்டிருந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,

“நான் தான் சிறிலங்காவின் பிரதமராக இருக்கிறேன். எனக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ளது. நான் தொடர்ந்தும் பிரதமராகப் பணியாற்றுவேன். அரசியலமைப்பின் படி வேறு யாரையும் பிரதமராக நியமிக்க முடியாது.

இப்போது எல்லாம் நாடாளுமன்றத்தின் கையில் தான் உள்ளது. நாடாளுமன்றம் தான் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும். நான் நம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடித்திருந்தேன்.

அவர்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்து பெரும்பான்மை பலத்தை நிரூபித்திருக்க வேண்டும். மக்கள் ஒரு ஆணையை வழங்கியுள்ளனர். நாம் கலந்துரையாடி அடுத்த கட்டம் குறித்து முடிவு செய்வோம்.

கூட்டு அரசாங்கத்தில், ஐக்கிய தேசிய முன்னணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பன இடம்பெற்றிருந்தன. இப்போது ஒரு கட்சி தான் வெளியேறியிருக்கிறது.

அரசியலில் இது போன்ற எதற்கு எப்போதும் தயாராகத் தான் இருக்க வேண்டும். எவருடனும் இணைந்து பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன்.

ஆட்சியை நடத்த எமக்கு 2015இல் அளிக்கப்பட்ட மக்கள் ஆணை இன்னமும் இருக்கிறது. ராஜபக்சவின் நியமனத்தினால், எந்த உறுதியற்ற நிலையும் தோன்றிவிடவில்லை.“ என்றும் தெரிவித்தார்.

 

தனக்கே அதிக பெரும்பான்மை இருப்பதாகவும், உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். தற்போது அலரி மாளிகையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் இணைந்து தற்போது அலரி மாளிகையில் விஷேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர். அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளவரே பிரதமர் என்றும், அந்தப் பெரும்பான்மை தனக்கு இருப்பதாகவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

இந்த ஊடக சந்திப்பில், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஹெல உறுமயவின் தலைவர் பாட்டளி சம்பிக்க ரணவக்க உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

SHARE