கிண்டல் செய்ததால் பேட்டிங்கின்போது பாதியில் வெளியேறிய வார்னர்! திரும்பி வந்து மிரட்டல் சதம் விளாசல்

140

உள்ளூர் கிளப் போட்டியின்போது கிண்டல் செய்ததால் கோபமடைந்த டேவிட் வார்னர், பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது பாதியில் வெளியேறினார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு, ஓர் ஆண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது.

எனினும், உள்ளூர் போட்டிகளில் விளையாட அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்ததால், அவுஸ்திரேலியாவில் நடைபெறும் தொடரில் ராண்ட்விக் பீட்டர்ஷாம் அணிக்காக வார்னர் விளையாடி வருகிறார்.

இந்நிலையில், சிட்னியில் நடந்த வெஸ்டர்ன் சபர்ப்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வார்னர் விளையாடினார். அவர் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, எதிரணி வீரரான ஜேசன் ஹியூக்ஸ் வார்னரை கிண்டல் செய்துள்ளார்.

ஆனால், அவர் என்ன கூறினார் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. எனினும், அவர் பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக தான் வார்னரை விமர்சித்து இருப்பார் என்று கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, ஹியூக்ஸின் கிண்டலால் கோபமடைந்த வார்னர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார். அப்போது அவர் 35 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

பின்னர், சக வீரர்கள் அவரை சமாதானப்படுத்தி திரும்ப விளையாட வருமாறு அழைத்ததைத் தொடர்ந்து, சில நிமிடங்களில் களம் கண்ட வார்னர் சதம் விளாசினார்.

அதன் பின்னர் 157 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். இச்சம்பவம் குறித்து வார்னர் உட்பட பலரும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

SHARE