மஹிந்த ராஜபக்ஷவின் மீள்வரவு 05ம் கட்ட ஈழப்போருக்கான சமிக்ஞைகளா?

143

ஒரு நாட்டில் ஜனநாயக வழிமுறைகளுக்கேற்ப அதனது பாராளுமன்றம் செயற்பட வேண்டும். குறித்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பொறுப்புக்கூறவேண்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களே ஒரு சதிப் புரட்சியை ஏற்படுத்தி இலங்கைத் திருநாட்டை ஒரு குழப்ப சூழ்நிலைக்குள் தள்ளிவிட்டிருக்கின்றார். கடந்த 35 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டு யுத்தம் கூட்டு அரசாங்கம் என்ற போர்வையில் ஒரு நிலைப்பாட்டை எட்டியிருந்தவேளை மீண்டும் அதனைக் குழப்பும் நோக்கில் தமிழ் மக்களுக்கானத் தீர்வுத்திட்டங்கள் எதனையும் வழங்கக்கூடாது என்கிற சதித்திட்டங்களோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இனப்படுகொலையாளி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக்கியது தமிழினத்தை 05ம் கட்ட ஈழப்போருக்கு இழுத்துச் செல்கின்றது என்றே கூறவேண்டும்.
மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் மாத்திரம் 35 ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் போயுள்ளனர். அத்துமீறி ஊடக நிறுவனங்களுக்குள் சென்று குண்டர்கள் தாக்குதல்களை மேற்கொண்டனர். இதில் தமிழ் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். யாழில் உதயன் பத்திரிகை நிறுவனம், வவுனியாவில் தினப்புயல் பத்திரிகை நிறுவனம் என்பன மஹிந்த ராஜபக்ஷவினது தாக்குதலுக்கு இலக்கானது. கடத்தப்பட்டுக் காணாமல் போனோருக்கான போராட்டங்கள் தொடர்ந்தும் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இப்போராட்டங்களின் எதிர்கால நிலைமைகள் எவ்வாறமையப்போகின்றது என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விட்ட தவறுகள் இடைக்கால நிர்வாகம் விடுதலைப்புலிகளது கையில் 2004ல் கையளிக்கப்பட்டபோது அதனைக் குழப்பியது. மாவிலாறு போரை திட்டமிட்ட வகையில் நடத்தி விடுதலைப்புலிகளுக்கும் சிங்களத் தேசத்திற்கும் இடையில் இருந்த நட்புறவினை பிரித்தாளும் தந்திரங்களைக்கொண்டு மீண்டும் போரை ஆரம்பித்தது. ஊடகவியலாளர்கள் கடத்தல், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், வியாபாரிகள் கடத்தல், கப்பம், பாலியல் துஷ்பிரயோகம் போன்றனவும் இவரது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்று வந்தது.

இதைவிடவும் தமிழினத்திற்கான வட-கிழக்கு இணைப்பு மற்றும் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படாத நிலையில் கூட்டாட்சி என்று கூறிக்கொண்டு தமிழினத்தின் விருப்பங்களுக்கு எதிராகச் செயற்படத் தொடங்கியது. இதற்கிடையில் 2009ஆம் ஆண்டு ஈழப்போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளதுடன் கொலை செய்யப்பட்டனர். இதைவிட பல்லாயிரக்கணக்கானோர் மஹிந்தவின் திட்டமிடலுடன் கொலை செய்யப்பட்டனர். இலங்கை சுதந்திரமடைந்த 1948ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை தமிழினத்திற்கான சுதந்திரம் எதுவும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தான் மீண்டும் இனவாத அரசாங்கத்தை கொண்;டுவருவது ஒரு ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடாக அமைகின்றது.

டட்லி – மைத்திரிபால சிறிசேன வரை இலங்கையை ஆட்சிபுரிந்த ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கான தீர்வுகள் தொடர்பில் அக்கறை கொள்ளவில்லை. அடக்குமுறைகளின் நிமித்தமே ஆயுதப்போராட்டம் வெடித்தது என்பது உண்மையானதொன்று. இவ்வாறான வரலாற்றுத் தவறுகள் மீண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள். மீண்டும் அடக்குமுறைகள் தோற்றுவிக்கப்படுமாகவிருந்தால் ஆயுதப்போராட்டங்கள் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. இந்தியா அல்லது அமெரிக்கா, வீட்டோ அதிகார நாடுகள் அதனைச் செய்வதற்குத் தயாராக இருக்கிறார்கள். ஜனநாயக ரீதியாக இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண நிலைமைகள் சீராக நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.

மஹிந்த ராஜபக்ஷ அரசினால் செய்யப்பட்ட படுகொலைகள் ஏராளம். கடந்த கால அரசாங்கங்களும் தமிழின இனப்படுகொலையினை மேற்கொண்டன. ஆனால் அதனைவிட மஹிந்த அவர்கள் மேற்கொண்ட படுகொலைகள் ஏராளம். தொடர்ந்தும் தமிழர்கள் மீது இனப்படுகொலைகள் இடம்பெறுகிறது. வட-கிழக்கில் பாற்சோறு பொங்கி கொலைகார மஹிந்தவிற்கு ஆதரவு தெரிவிக்கின்ற தமிழ் சமூகத்தினர் அரோசிக்கத்தவர்கள். சிங்கள தேசத்தில் பிரச்சினைகள் தோற்றுவிக்கப்படும்போது நாம் வேடிக்கை மட்டும் பார்க்கவேண்டும். தமிழர்கள் போரில் இறக்கும் போது சிங்களக் கட்சிகள் என்ன செய்தது. சிந்திக்கவேண்டிய நேரத்தில் நீங்கள் வெடிகொழுத்தி ஆதரவு தெரிவிக்கின்றீர்கள். அபிவிருத்தி என்பது வேறு. தமிழ் மக்களது உரிமை என்பது வேறு. இச்சந்தர்ப்பத்தில் அனைத்து தமிழ் தரப்பும் ஒன்றிணைந்து செயற்படுவது காலத்தின் தேவையாக இருக்கின்றது.

மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் எந்தவொரு தமிழனும் தமிழ்த் தாய்க்கு பிறந்திருக்கமாட்டான் என்பதையே இவர்களது செயற்பாடுகள் எடுத்துக்காட்டுகிறது. சிந்திப்போம் – செயற்படுவோம்.

இரணியன்

SHARE