நல்லிணக்க முயற்சிக்கு சவால் விடுத்துள்ள கனகராயன்குளம் தாக்குதல் சம்பவம்

142
கனராயன்குளத்தில் முன்னாள் போராளி ஒருவர் மீது பொலிசார் நடத்தியுள்ள தாக்குதல் அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளது.
காணி பிரச்சினை காரணமாக பொலிசார் பக்கசார்பாக நடந்து கொண்டதுடன், காணி உரிமையாளராகிய முன்னாள் போராளி மீதும், அவருடைய குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்தியதாக முறையிடப்பட்டிருக்கின்றது.
வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் கடந்த பல தசாப்தங்களாக நிம்மதியற்ற வாழ்க்கையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் தமிழ் மக்களையும் அவர்கள் சொத்துக்கள் வளங்கள் மற்றும் உயிர்களையும் சின்னாபின்னப்படுத்தியுள்ளது.
இலங்கையில் இறுதியுத்தம் நடைபெற்ற 2009 ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் தமிழ் மக்கள் தங்கள் சொந்த நிலங்களில் மீள் குடியேறிய பொழுதிலும் ஒன்பது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் கூட அம்மக்களின் மீள் குடியேற்றம் முழுமை பெறவில்லை.
ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டு நல்லாட்சி அரசாங்கம் தமிழ் அரசியல் தலைமைகளின் முண்டு கொடுப்பிற்கு அமைவாக ஏற்படுத்தப்பட்ட நிலையிலும் தமிழ் மக்களின் நிலங்;கள் திட்டமிட்ட வகையில் ஏமாற்றி பறிக்கப்படுவதும் அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்படுவதும் பொலிஸ் அதிகாரம் அரசியல் செல்வாக்கு என்பவற்றை பயன்படுத்தி எதிர்ப்பவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் இந்த நல்லாட்சியில் நடைபெற்று வருகிறது.
அரசியல் அதிகாரத்தின் முன் இலங்கையின் சட்டங்கள், அதிகாரங்களை கொண்டுள்ள சபைகள் நிறுவனங்கள் மௌனித்;துள்ளனவா என்ற கேள்வி வவுனியா மாவட்டத்திற்குட்பட்ட கனகராயன்குளம் பகுதியில் ஏ9 வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள ‘தாவூத்’ என்ற உணவு விடுதி அமைந்துள்ள நிலத்தை அபகரிப்பதற்காக அந்த நிலத்தின் உரிமையாளராகிய முன்னாள் போராளி பேரம்பலம் வசந்தகுமார் மற்றும் அவரது குடும்பத்தவர்கள் மீது பொலிசார் மேற்கொண்ட தாக்குதலும், அதனை தொடர்ந்து அக்குடும்பத்தினர் மீது பொலிசார் பல வழக்குகளை தாக்கல் செய்துள்ளமையும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஒப்பந்தம் எழுதப்பட்டு வாடகைக்கு வழங்கப்பட்ட நிலம் ஒப்பந்த காலம் நிறைவடைந்த பின்னரும் உரிமையாளரிடம் வழங்கப்படாமல் அடாத்தாக ஆக்கிரமிப்பு முயற்சி மேற்கொள்ள முயற்சிப்பது ஏன்? கனகராயன்குளம் பொலிஸ் அதிகாரி உணவு விடுதி உரிமையாளருக்கு ஆதரவாக செயற்பட்டு நில உரிமையாளரின் குடும்பத்தினர் மீது தாக்குதல் மேற்கொண்டது ஏன்? இந்த தாக்குதல் ஏற்கனவே திட்டமிடப்பட்டதா? நில உரிமையாளருக்கும் உணவு விடுதி உரிமையாளருக்கும் தகராறு ஏற்பட என்ன காரணம்? கனகராயன்குளம் பிரதேசத்திற்கு சம்பந்தமே இல்லாத ஒரு நபருக்கு வாடகைக்கு நிலம் வழங்கப்படடதன் பின்னணி என்ன? என்ற பல கேள்விகள் எழுகின்ற போதும் அதற்கான விடைகளை தேடி அலசுகிறது இக்கட்டுரை.
இறுதியுத்தம் நடந்தேறியதன் பின்னர் வடக்கு மக்களின் வாழ்க்கையில் பல அவலங்கள் நடந்தேறியிருந்தது. முள்வேலியில் அடைக்கப்பட்ட மக்கள் விடுதலைப்புலிகளுக்கு எதிரானவர்கள் அனைவராலும் பழி வாங்கப்பட்டனர். குற்றுயிரும் குலையுயிருமாக விடுதலை செய்யப்பட்ட மக்கள் தங்கள் நிலங்களை தேடியும் வீடுகளை தேடியும், உறவுகளை தேடியும் ஓடினர். முள்ளிவாய்க்காலில் கைது செய்யப்பட்டு முள்வேலியில் அடைக்கப்பட்ட தமிழ் மக்கள் விடுதலையின் பின் பூச்சியத்திலிருந்து தங்கள் வாழ்க்கையை கட்டியெழுப்ப ஆரம்பித்தனர்.
விடுதலைப்புலிகள் உறுப்பினர்களைப் பொறுத்தவகையில் கொல்லப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் புனர்வாழ்வு என்றும் அரசியல் கைதிகள் என்றும் அனுப்பப்பட்டனர் சிலர் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடினர். அந்த வகையில் கனகராயன்குத்தைச் சேர்ந்த முன்னாள் பேராளியான பேரம்பலம் வசந்தகுமார் ஐந்து வருடங்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுவதற்காக சிறையில் அடைக்கப்படுகிறார்.
விடுதலைப்புலிகள் இலங்கை அரசால் வெற்றிகொள்ளப்பட்ட நிலையில் அது தமிழ் மக்களின் தோல்வியாகவும் பெரும்பான்மையினரின் மாபெரும் வெற்றியாகவும் அந்த வெற்றியில் முஸ்லிம் அரசியல்வாதிகள் நேரடியாக பங்கெடுத்தவர்களாகவும் காணப்பட்டனர். வடபகுதியில் புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட தங்கத்தையும், பணத்தையும் தேடி ஒரு குழுவினரும் முள்வேலியிலிருந்து கையில் ‘சொப்பிங் பையுடன்’ விடுதலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நிலங்களை சொத்துக்களை வஞ்சகமாக அபகரிக்கும் திட்டத்துடன் ஒரு குழுவினரும் களமிறங்கியிருந்தனர்.
இந்நிலையிலேயே பேரம்பலம் வசந்தகுமாரின் மனைவி சர்மிளா தனது பிள்ளைகளுடன் ஏ9 வீதியில் அமைந்துள்ள தனது நிலத்தில் மீள்குடியேறுகிறார். யுத்தத்தின் காரணமாக தங்களது சொந்த வீடுகள் தரை மட்டமான நிலையில் கையில் பணம் இல்லை கணவரோ சிறையில் இரண்டு பிள்ளைகளை வைத்துக் கொண்டு தவித்துக்கொண்டிருந்த நேரத்தில் சர்மிளாவின் தந்தையின் அறிமுகத்துடன், வசந்தகுமாரை சிறையிலிருந்து விடுதலை செய்து தருவதாக தெரிவித்து சர்மிளாவை அணுகுகிறார். ‘முகமட் சறீப் தாவூத் நஜீப்’
யார் இந்த ‘முகமட் சறீப் தாவூத் நஜீப்’ அனுராதபுரம் பிரதேசத்தில் புதிய நகரம் நாச்சதுவ (நாச்சியார் தீவு) என்ற இடத்தை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கையின் பிரபலமான முஸ்லிம் கட்சி ஒன்றைச் சேர்ந்தவர் என்பதுடன் அக்கட்சியின் தலைவரும் அமைச்சு பதவி ஒன்றை வகிப்பவருடன் நெருங்கிய தொடர்புடையவர் பல வியாபாரங்களை செய்துவரும் இவர் கனகராயன்குளம் ஏ9 வீதியில் அமைந்துள்ள பேரம்பலம் வசந்தகுமாரின் நிலத்தை வஞ்சகமாக அபகரிக்கும் நோக்கத்துடன் திட்டமொன்றை தீட்டியிருக்கிறார்.
அதன் பிரகாரம் ‘முகமட் சறீப் தாவூத் நஜீப்’முன்வைத்த திட்டங்கள் தான் முன்னாள் போராளியான பேரம்பலம் வசந்தகுமாரை தனது அரசியல் செல்வாக்கின் மூலம் சிறையிலிருந்து விடுதலை செய்வது. அத்துடன் ஏ9 வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள இரண்டு ஏக்கர் காணியில் ஒரு ஏக்கர் காணியை உணவு நிலையம் அமைக்க வாடகைக்கு வழங்குவதன் மூலம் சர்மிளாவிற்கும் குடும்பத்தினருக்கும் வருமானத்தை ஏற்படுத்துவது, அத்துடன் வசந்தகுமாரின் நிலத்தில் கட்டப்படும் கட்டிடத்தை ஒப்பந்தகாலம் முடியும் போது அவர்களுக்கே வழங்குவது ஏன்ற திட்டத்தின் அடிப்படையில் பொருளாதார கஸ்டத்திலும் எந்தவிதமான வருமானமும் இல்லாத நிலையிலும் தனது நிலத்தை வாடகைக்கு வழங்குவதன் மூலம் பொருளாதார கஸ்ரம் ஓரளவு நீங்குவதுடன் தனது கணவரும் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பில் நடக்கப்போகும் பயங்கரம் பற்றி அறியாமல் நிலத்தை மாதாந்தம் 10 ஆயிரம் ரூபா வாடகைக்கு விட ஒத்துக்கொண்ட சர்மிளா சமாதான நீதிவானாகிய செல்லையா கிருஸ்ணப்பிள்ளை முன்னிலையில் 10-03-2010 அன்று வாடகை ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடுகிறார்.
‘முகமட் சறீப் தாவூத் நஜீப்பின் திட்டத்தின் பிரகாரம் அனைத்து வேலைகளும் விரைவாக நடைபெறுகிறது, உணவு விடுதி அமைக்கப்பட்டு வியாபாரம் அமோகமாக நடைபெறுகிறது. சர்மிளாவின் கணவர் விடுதலை தள்ளி போகிறது. சிறையில் வாடும் தனது கணவர் விடுதலை செய்யப்படுவார் என்கிற நம்பிக்கையில் மீண்டும் நில வாடகை ஒப்பந்தம் 10-03-2012 அன்று புதுப்பிக்கப்படுகிறது.
தாவூத் நஜீப்பின் திட்டத்தின் பிரகாரம் அனைத்து வியங்களும் நடைபெற்றாலும் சர்மிளாவால் எழுதிக்கொடுக்கப்பட்ட ஒப்பந்தத்தை வைத்து காணியை தனதாக்கிகொள்ள முடியாமல் போனதற்கு காரணம் அக்காணியின் உரிமம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வசந்தகுமாரின் பேரில் இருந்ததால் அந்த ஒரு விடயத்தில் அவனது திட்டம் பலிக்காமல் போனது.
புனர்வாழ்வு என்ற பெயரில் சிறையில் வாடிய வசந்தகுமாரை எடுப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாத தாவூத் நஜீப் காணியின் வாடகை ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கு உங்கள் நிலத்தில் கட்டப்படும் கட்டிடத்தை ஒப்பந்தகாலம் முடியும் போது உங்களுக்கே தருவேன் என ஆசை வார்த்தை கூறியதுடன் ஒப்பந்தத்திலும் அதை குறிப்பிட்டுள்ளார்.
2009 ஆம் ஆண்டு சிறை சென்ற வசந்தகுமார் 2013 ஆண்டு விடுதலையாகி வந்தபின்னர் மீண்டும் வாடகை ஒப்பந்தம் 18-02-2016 இல் வசந்தகுமாரால் புதுப்பிக்கப்படுகிறது. வசந்தகுமார் தனது நிலத்தில் அமைந்துள்ள உணவு விடுதியின் போக்கை அவதானித்து வாடகை ஒப்பந்தத்தில் சட்டத்தரணியின் மூலம் ஒப்பந்தம் ஒன்றை போடுகிறார் அதாவது சரத்து 10 இன் பிரகாரம் காணியில் உரிமையாளரின் அனுமதியின்றி அபிவிருத்தி எதனையும் மேற்கொள்ள முடியாது என்கின்ற சரத்தானது நிலத்தை அபகரிக்க முயற்சிகளை மேற்கொண்டிருந்த தாவூத் நஜீப்பிற்கு எரிச்சலை உண்டுபண்ணியுள்ளது.
வசந்தகுமாரை கைக்குள் போட்டு நிலத்தை எப்படியாவது வழைத்து போட்டுவிடலாம் என கணக்குபோட்ட தாவூத் நஜீப்பிற்கு வசந்தகுமர் புத்திசாலித்தனமாக வழக்கறிஞரை வைத்து ஒப்பந்தங்களை போட்டு கிடிக்கிப்பிடி போட்டதன் காரணமாக தனது திட்டம் கண்முன்னே நிறைவேறாமல் போவதை தாவூத் நஜீப்பால் உணர முடிந்தது.
அதன் பின்னர் வசந்தகுமாரின் காணியில் அமைந்துள்ள தாவூத் உணவகத்தின் அபிவிருத்தியை ஒருதலைப்பட்சமாக ஒப்பந்தத்தை மீறி தாவூத் நஜீப் செய்ய முற்பட்ட போது இருவருக்குமிடையில் பிரச்சனை ஆரம்பிக்கிறது.
இருவருக்குமிடையில் ஏற்பட்ட பிரச்சனையின் உச்சகட்டத்;தில் வசந்தகுமார் வாடகை ஒப்பந்தத்தின் பிரகாரம் இரண்டு மாதத்தில் நிலத்தை ஒப்படைத்துவிட்டு வெளியேறுமாறு நோட்டீஸ் அனுப்புகிறார். அதை அசட்டை செய்த தாவூத் நஜீப் மீது தனது காணியை அடாத்தாக ஆக்கிரமித்துள்ளதாக வழக்கொன்றை வவுனியா நீதிமன்றில் தாக்கல் செய்கிறார் அதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டுக்கான வியாபார உரிமத்தை தாவூத் நஜீப்பிற்கு நிறுத்தி வைக்குமாறு தெரிவித்து 27-11-2017 அன்று வவுனியா புளியங்குளம் சுகாதாரப் பரிசோதகருக்கும், நெடுங்கேணி பிரதேச செயலாளருக்கும், நெடுங்கேணி பிரதேச சபையின் செயலாளருக்கும் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இப்பிரச்சனைகள் தொடர்பாக வசந்தகுமாரால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு ஏன் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்கிற கேள்வி எழுகிறது அரசியல் அழுத்தம் காரணமா? ஏன்கின்ற சந்தேகம் பலமாகவே எழுகின்றது. காரணம் தாவூத் உணவகத்தின் உரிமையாளர் மின்சாரப்பட்டியல் செலுத்தாத காரணத்தால் 27-12-2017 அன்று மின்சாரத்தை துண்டிக்குமாறு வசந்தகுமார் சர்மிளாவால் மாங்குளம் மின்சாரசபை பொறியியலாளருக்கு முறைப்பாட்டு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டள்ளது. ஆனால் மாங்குளம் மின்சாரசபையால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத காரணத்தினால் தாவூத் உணவகத்தின் மின்சாரப்பட்டியல் இலட்சங்களை தாண்டி சென்றுகொண்டிருந்த நிலையில் மீண்டும் 03-01-2018 இல் வசந்தகுமார் தனது வழக்கறிஞர் ஊடாக மாங்குளம் மின்சாரசபைக்கு கோரிக்கை கடிதம் ஒன்றையும் அதன் பிரதி ஒன்றை வட மாகாண பிரதான மின் பொறியியலாளருக்கும் அனுப்பியுள்ளார்.
இதில் கேள்வி என்னவென்றால் சில மாதங்கள் மின் பட்டியல் செலுத்தாவிட்டால் பாமர மக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் மின்சாரசபை ஏறக்குறை நான்கு இலட்சங்கள் வரை மின்சாரப்பணம் செலுத்தாமல் உணவகம் நடத்தவதற்கு எவ்வாறு அனுமதி வழங்கியது என்பதுடன் முறைப்பாடுகள் அனுப்பப்பட்டும் தாவூத் உணவகத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்படாமைக்கு காரணம் என்ன? மின்சார சபையினரிடம் உணவகங்களுக்கு பல ஆண்டுகள் பணம் பெறாமலே மின் இணைப்ப வழங்கலாம் என சட்டம் இயற்றப்பட்டுள்ளதா, அல்லது எந்தவிதமான சலுகையின் அடிப்படையில் மின்சாரம் வழங்கப்படுகிறது என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
இதில் ஒரு விடயம் உள்ளக்கை நெல்லிக்கனியாக தெரிகிறது மின்சாரம் தொடர்ச்சியாக நுகரப்பட்டு பல இலட்சங்கள் தாண்டும் நிலையில் மின்சாரப்பட்டியலில் பெயருள்ளவரே அதை செலுத்த நேரிடும் ஆகவே வசந்தகுமார் அந்தப்பணத்தை செலுத்த வேண்டும் அல்லது சிறை செல்ல நேரிடும் இது தொடர்பாக கிளிநொச்சி மின்சாரசபையின் பொறியியலாளர் முகமட் பர்சாட் என்பவர் வசந்தகுமாரிடம் மின் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதால் நீங்கள் தான் பணத்தை மின்சார சபைக்கு செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இப்பிரச்சனைகள் தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்த வசந்தகுமார் பொலிசார் அதற்கான நடவடிக்கை எதனையும் மேற்கொண்டிருக்காத காரணத்தினால் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபரை அணுகி தனது நிலைமையை எடுத்து கூறிய நிலையில் கனகராயன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டின் மீது நடவடிக்கை எடுக்காமல் உணவு விடுதி உரிமையாளருக்கு ஆதரவாக செயற்பட்ட சார்ஜன் தரத்திலான பொலிஸ் அதிகாரி ஒருவர் உடனடியாகவே இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
வசந்தகுமாரின் சட்ட நடவடிக்கைகள், வழக்கறிஞர் மூலமாக கடிதங்கள் அனுப்பும் செயற்பாடுகள் தாவூத் உணவு விடுதி உரிமையாளருக்கு நிலத்தை அபகரிக்கும் திட்டம்  கை கூடாமல் பேவதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் பொலிசாரின் மூலமாக திடடம் ஒன்றை தீட்டியுள்ளதாகவே நம்பத் தோன்றுகிறது.
ஏந்தவிதமான காரணங்களும் இல்லாமல் வசந்தகுமாரின் வீட்டு வேலி ஓரமாக நின்று வசந்தகுமாரை கூப்பிட்ட கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி வசந்தகுமாரையும் அவரது மனைவி பிள்ளைகளையும் இரக்கமின்றி தாக்கியுள்ளார். இதில் பொலிசார் மிக அவதானமாக திட்டத்தை தீடடியுள்ளனர். எக்காரணம் கொண்டும் பொலிசார் வசந்தகுமாரின் வீட்டு வளவிற்குள் செல்லவில்லை தாவூத் உணவு விடுதிக்கும் வசந்தகுமாரின் வீட்டிற்கும் இடையில் அமைந்துள்ள வேலிஓரமாக நின்றே கனகராயன்குளம் பொலிசார் குறிப்பிட்ட தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக பொலிசார் தாவூத் உணவு விடுதியின் உரிமையாளர் முன்பாக வைத்து வசந்தகுமார் மீது கடுமையான தாக்குதல் மேற்கொண்டதுடன் அவரை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று பொலிசார் கடுமையாக தாக்கியுள்ளனர். அதன்பின்னர் கடும் காயத்திற்குள்ளாகி வசந்தகுமார் இரத்தவாந்தி எடுத்த நிலையில் அவரது மனைவியின் முயற்சியால் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மீண்டும் மேலதிக சிகிச்சைக்காக கிளிநோச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து பொலிசாரால் வசந்தகுமார் அவரது தம்பி தனபாலசிங்கம் தவநீதன் மீது முன்று வழக்குகள் பதிவு செய்து கைது செய்திருந்தனர்.
முதலாவது அத்துமீறி தாவூத் உணவு விடுதிக்குள் நுழைந்தது, இரண்டாவது அந்த உணவ விடுதியில் இருந்த தளபாடங்களை சேதப்படுத்தியது, மூன்றாவது பொலிசாரை தாக்க முயற்சி செய்தது என்ற காரணங்களின் அடிப்படையில் பொலிசாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இக்காரணங்களிலிருந்து ஒரு விடயம் நன்றாகத் தெரிகிறது வசந்தகுமார் உணவு விடுதிக்குள் அத்;துமீறி நுழைந்திருந்தால் அல்லது உணவு விடுதியின் பொருட்களை சேதப்படுத்தியிருந்தால் அவரை மிருகத்தனமாக தாக்க வேண்டிய தேவை இல்லை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருக்கலாம், இரண்டு வசந்தகுமாரின் தம்பி உட்பட குடும்பத்தினர் அனைவர் மீதும் பொலிசார் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் அதற்கு காரணம் வசந்தகுமார் பொலிசாரால் தாக்கப்படும்; போது அவரை காப்பாற்ற சென்ற குடும்ப உறுப்பினர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதல் மூலம் பொலிசார் எதனை சாதிக்க முனைந்தள்ளனர் என்ற கேள்வி பலமாக எழுகிறது! இரத்தவாந்தி எடுக்கும் அளவிற்கு பொலிசார் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் என்றால் அவரை ஊனமாக்க அல்லது கொலை செய்ய முயற்சித்துள்ளார்களா? என்ற சந்தேகம் எழுகிறது. தாவூத் உணவு விடுதி உரிமையாளர் நிலத்தை அபகரிக்க பல முயற்சிகளை மேற்கொண்ட போதும் வசந்தகுமாரின் சாதுரியமான நடவடிக்கை அதற்கு இடைஞ்சலாக இருந்துள்ளது. அத்துடன் வசந்தகுமாரின் முறைப்பாட்டையடுத்து பிரதிபொலிஸ் மா அதிபரினால் கனகராயன்குளம் பொலிஸ் அதிகாரிக்கு வழங்கப்பட்ட இடமாற்றமும் பொலிசார் வசந்தகுமார் மீது பகை கொள்ள காரணமாயிருந்துள்ளது.
நல்லாட்சி அராங்கத்தின் ஆட்சியில் வடக்கில் பொலிசார் பொதுமக்களுடன் நல்லிணக்கத்தை கட்டி வளர்க்க முயற்சித்துள்ள நிலையில் கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி முன்னாள் போராளியான வசந்தகுமார் குடும்பத்தினர் மீது மேற்கொண்ட தாக்குதல் பொலிசார் மீது தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இன்மையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் தாவூத் உணவ விடுதியின் உரிமையாளரின் நில அபகரிப்பு முயற்சியானது அவர் சார்ந்துள்ள சமூகத்தினுடனான நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான வசந்தகுமாரின் குடும்பத்தினருக்கு நீதி வழங்கப்படுவதுடன் இத்திட்டமிட்ட தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிசார் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். தாவூத் உணவு விடுதி உரிமையாளர் வசந்தகுமாரின் காணியை ஒப்படைக்க அவர் சாந்த சமூகத்தின் அரசியல்வாதிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அவ்வாறு நீதியும் சட்டமும் செயற்படாதவிடத்து இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கமும் கேள்விக்குறியாகவே இருக்கும்.

செந்தீ குணா

SHARE