வாசிப்பு மாதத்தை முன்னிட்டு இடம்பெற்ற கண்காட்சி

60

மட்டக்களப்பு மாநகரசபைக்கு 3000 புத்தகங்களை சிங்கப்பூர் அரசாங்கம் வழங்குதற்கு உறுதியளித்துள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபையினால் முன்னெடுக்கப்பட்டுவந்த தேசிய வாசிப்பு மாத நிகழ்வின் இறுதி நிகழ்வாக கல்லடி பொதுநூலகத்தின் ஏற்பாட்டில் புத்தக கண்காட்சி இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

கல்லடி பொதுநூலகமும் நூலகத்தின் வாசகர் வட்டமும் இணைந்து இந்த புத்தக கண்காட்சியை ஏற்பாடுசெய்திருந்தது. கல்லடி பொதுநூலக நூலகர் வாமதி சதாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,மாநகர பிரதி ஆணையாளர் நா.தனஞ்செயன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் முன்னாள் அதிபர் திலகவதி ஹரிதாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இனங்களிடையில் புரிந்துணர்வினை ஏற்படுத்துவதற்கான வாசிப்பு என்னும் தலைப்பில் இம்முறை தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இதன் போது நூல் கண்காட்சி திறந்துவைக்கப்பட்டதை தொடர்ந்து வாசிப்பு மாத நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், வாசகர் என பெருமளவானோர் கலந்துகொண்டதுடன் வாசகர்களினால் நூலகத்திற்கான புத்தகங்களும் அன்பளிப்பு செய்யப்பட்டன.

இந்த நிகழ்வில் உரையாற்றிய மாநகர முதல்வர்,

தற்போதைய புள்ளிவிபரங்களின்படி நூலகத்திற்கு வந்து நூலகத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாகக் காணப்படுகின்றது. வயதானவர்கள் பத்திரிகை வாசிப்பதற்காக வருகின்றனர். பாடசாலை மாணவர்கள் வருவது குறைவாகவே காணப்படுகின்றது.

எங்களுடைய மாநகரசபையின் கீழ் இயங்குகின்ற பாலர் பாடசாலைகளை ஒரு நாளைக்கு ஒரு நூலகத்திற்கு கொண்டு சென்று அந்த நாள் முழுவதையும் அவர்கள் நூலகத்தில் கழித்து அவர்களின் வாசிப்புத் திறனை அதிகரிக்கச் செய்வதற்கான ஒரு திட்டத்தை இவ்வருடத்திலிருந்து அமுலுக்கு கொண்டுவர இருக்கின்றோம். அதன்படி ஒவ்வொரு நூலகத்திற்கும் எங்களுடைய பிள்ளைகள் போக முடியும்.

ஒவ்வொரு பாடசாலைகளிடமும் நான் கேட்டுக்கொள்வதாவது பாடசாலைகளில் நூலகத்திற்கென ஒரு பாடவேளையை ஒதுக்குங்கள்.அதை அமுலுக்கு கொண்டுவாருங்கள்.

பிள்ளைகளுக்கு வாசிப்பதில் ஆர்வம் மிகவும் குறைந்துகொண்டு செல்கின்றது. நூலகத்தை பயன்படுத்துவதன் மூலமே பல விடயங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

யாழ்ப்பாண நூலகமானது பலராலும் பயன்படுத்தப்பட்ட நூலகமாகும். கொழும்பு, களனியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்று அங்கு நூலகத்தை பயன்படுத்தி பயனடைந்தவர்கள் பலர் உள்ளனர்.

நூலகம் என்பது ஒரு வளமாகும் அந்த வளத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாநகரசபைக்கு வளங்களை ஒன்றுதிரட்ட வேண்டிய தேவை இருந்தது. அதனடிப்படையில் கல்வி இராஜாங்க அமைச்சர் மூலமாக பத்தாயிரம் புத்தகங்களுக்கான அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது.

மிக விரைவில் அவை எமக்கு கிடைக்கும். மேலதிகமாக சிங்கப்பூர் அரசாங்கம் எங்களுடன் தொடர்பு கொண்டதற்கு இணங்க மூவாயிரம் புத்தகங்கள் மிக விரைவில் எங்களுக்கு வரவிருக்கின்றது.

புத்தகங்களை சேர்த்துக்கொள்வதால் மட்டும் பயன் கிடைத்து விடப்போவதில்லை. அதனை பயன்படுத்துவதன் மூலமே பயனை அடைந்துகொள்ள முடியும்.

தேவையான புத்தகங்களை எம்மிடம் கோருவதன் மூலம் மாநகரசபை எதுவித தடையுமின்றி அதனை கொள்வனவு செய்து தரும்.

நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க நூலகத்திற்கு வர்ணம் பூசும் வேலை அடுத்தவாரத்திலிருந்து ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. எமது சமூகம் நூலகத்தை பயன்படுத்திக் கொள்வதன் மூலமாகவே எங்களுடைய செயற்பாடுகளுக்கு வெற்றி கிடைக்கும்.

 

 

 

 

 

 

 

 

SHARE