எதிர்பார்ப்பை குலைத்து 104 ஓட்டத்துக்குள் சுருண்ட மேற்கிந்திய அணி

49

இந்திய அணியின் பந்து வீச்சுகளுக்கு நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காமல் மேற்கிந்திய அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தமையினால் மேற்கிந்திய அணி 31.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 104 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் ஐந்தாவது போட்டியும் இறுதிப் போட்டியுமான இப் போட்டி திருவானந்தபுரத்தில் பிற்பகல் 1:30 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது வருகிறன்றது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய அணித் தலைவர் ஜோசன் ஹோல்டர் முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார். அதற்கிணங்க முதலில் களமிறங்கிய மேற்கிந்திய அணி 50 ஓட்டங்களை பெறுவதற்குள்ளே மூன்று விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.

அதன்படி ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய கிரேன் பவுல் எதுவித ஓட்டமின்றி புவனேஸ்வர் குமாரின் பந்து வீச்சிலும், ஷெய் ஹோப்பும் எதுவித ஒட்டமின்றி கலீல் அஹமட்டின் பந்து வீச்சிலும், சாமுவேல்ஸ் 24 ஓட்டத்துடன் ஜடேஜாவின் பந்து வீச்சிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் மேற்கிந்திய அணி 11.5 ஆவது ஓவரில் மூன்று விக்கெட்டுக்களை இழந்து 36 ஓட்டங்களை பெற்றது. தொடர்ந்து சிம்ரன் ஹேட்மேயரும், ரோவ்மன் பவுலும் துடுப்பெடுத்தாடி வர மேற்கிந்திய அணி 14.5 ஓவரில் 50 ஓட்டங்களை கடந்தது.

எனினும் அணியின் ஓட்ட எண்ணிக்கை 53 ஆன போது ஹேட்மேயர் 9 ஓட்டத்துடன் ஜடேஜாவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ.முறையில் ஆட்டமிழக்க, அடுத்தடுத்து ரோவ்மன் பவுல் 16 ஓட்டத்துடன் கலீல் அஹமட்டின் பந்திலும், பேபியன் அலன் 4 ஓட்டத்துடன் பும்ராவினுடைய பந்து வீச்சிலும், ஜோசன் ஹோல்டர் 25 ஓட்டத்துடனும், கிமோ பவுல் 5 ஓட்டத்துடன் குல்தீப் யாதவ்வின் பந்து வீச்சிலும் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து 8 ஆவது விக்கெட்டுக்காக தேவேந்திர பிஷோ மற்றும் கேமர் ரோச் ஜோடி சேர்ந்தாடிவர மேற்கிந்திய அணி 30.3 ஓவரில் 100 ஓட்டங்களை கடந்தது. எனினும் கேமர் ரோச் 5 ஓட்டத்துடனும் அடுத்து களமிறங்கிய தோமஸ் உஷ்மன் எதுவித ஓட்டமின்றியும் ஜடேஜாவின் பந்தில் ஆட்டமிழந்தனர்.

இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி 31.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 104 ஓட்டங்களை பெற்று, இந்திய அணிக்கு வெற்றியிலக்காக 105 ஓட்டங்களை நிர்ணயித்தது.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டுக்களையும், பும்ரா, கலீல் அஹமட், ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், புவனேஸ்வர் குமார் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

SHARE