இலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் நெருக்கடி காரணமாக குழப்பம் ஏற்பட்டு ரணிலின் பிரதமர் பதவி ஒரே இரவில் பறிக்கப்பட்டு மகிந்த ராஜபக்சவின் கைகளில் கொடுக்கப்பட்டதன் பின் இலங்கையில் முதலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஊடகவியலாளர் வவுனியாவை சேர்ந்த தினப்புயல் பத்திரிகையின் ஊடகவியலாளர் இ.தர்சன் என்பவர்.
வடக்கு கிழக்கில் தமிழ் ஊடகவியலாளர்கள் நெருக்கடியான காலகட்டத்தில் தங்கள் உயிரை துச்சமாக மதித்து சேவையாற்றி வந்தவர்கள். இதன் காரணமாக பலர் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளார்கள் அந்தவகையில் வவுனியா பிராந்திய செய்தியாளராகிய இ.தர்சன் ‘ஆவா’ குழுவினரின் துண்டு பிரசுரங்களை விநியோகித்திருந்தார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வவுனியா பொலிசாரினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் வவுனியா தேக்கவத்தை பகுதியில் புகையிரதக்கடவைக்கு அருகில் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருபவர்.
ஊடகத்துறையில் கடந்த எட்டு வருடங்களாக பணியாற்றிவரம் தர்சன் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாரினால் வெள்ளிக்கிழமை 02-11-2018 இரவு திட்டமிட்டு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த ஊடகவியலாளரை பார்வையிடச் சென்ற உறவினர்கள், சக ஊடகவியலாளர்கள் பொலிசாரினால் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டிருந்தனர். இரவிரவாக ஊடகவியலாளர் தர்சனை பார்வையிடுவதற்காக காத்திருந்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பியிருந்தனர்.
வவுனியா பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளரை ஒரு பயங்கரவாதி போன்றே பொலிசார் நடத்தியிருந்தனர். 03-11-2018 சனிக்கிழமை காலை முதல் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்ட தர்சனை பார்வையிட பொலிசார் அனுமதி வழங்கியிருக்கவில்லை. தனி சிறை கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளரை பார்வையிட அனுமதி கோரிய போதெல்லாம் நீங்கள் பார்வையிடலாம் பேச முடியாது குறிப்பிட்ட தூரத்தில் இருந்தே பார்வையிட வேண்டும் என்ற நிபந்தனைகள் பொலிசாரால் விதிக்கப்பட்டது.
அத்துடன் கைது செய்யப்பட்ட இ.தர்சன் கைவிலங்கிடப்பட்ட நிலையில் வவுனியா பொலிஸ் நிலையத்திலிருந்து நீதிமன்றம் வரை கண்டி வீதியில் நடத்தியே அழைத்து செல்லப்பட்டிருந்தார். குற்றஞ் செய்தவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் போது பொலிஸ் வாகனத்தில் அழைத்து வரப்பட்டே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவது வழமையான நடவடிக்கை. ஊடகவியலாளர் தர்சனை குற்றவாளி போன்று தெருவில் அழைத்து வந்தமை பொலிசார் தர்சனை குற்றவாளியாக தீர்மானித்துள்ளனரா? ஏன்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. ஒரு மனிதனை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும் கைவிலங்குடன் தெருவில் அழைத்து செல்ல முடியுமா? அது மனித உரிமை மீறல் அல்லவா? இவ்வாறான செயல்பாடுகளின் மூலம் பொலிசார் சமூகத்திற்கு தெரியப்படுத்த முனையும் செய்தி என்ன?
வவுனியா பொலிசாரின் இவ்வாறான நடவடிக்கை ஊடகவியலாளர்களை மறைமுகமாக மிரட்டி உங்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும் என எச்சரிப்பதுமாகவே இருக்கிறது.
இலங்கை அரசுக்கும், சில தமிழ் விரோத துரோக சக்திகளுக்கும் எதிராக தினப்புயல் பத்திரிகை தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வந்ததன் பின்னணியே ஊடகவியலாளர் தர்சனின் கைதுக்கு முக்கிய காரணமாக உள்ளது என சந்தேகிக்க வேண்டியுள்ளது.
ஊடகவியலாளர் ஆவா குழுவினருக்கு ஆதரவாக துண்டு பிரசுரம் வினியோகித்தார் என்ற குற்றச்சாட்டு ‘மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும்’ முடிச்சுப்போட பொலிசாரினால் எடுக்கப்பட்ட முயற்சியாகவே பார்க்க முடியும்.
நேரடியாக தினப்புயல் பத்திரிகை மீது வழக்கு பதிவு செய்ய முடியாத பொலிசார் ஆவா குழுவின் செய்திகளை பிரசுரித்து வந்த தினப்புயல் பத்திரிகையின் நிருபர் தர்சன் ஆவா குழுவினருக்கு ஆதரவாக துண்டுப் பிரசுரங்களை வினியோகித்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் சனிக்கிழமை 03-11-2018 நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் திங்கட்கிழமை 05-11-2018 வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாதிகள், ஆவா குழுக்கள் உருவாக காரணமாக இருப்பவர்கள் சட்டத்தை சரியாக அமுல்படுத்தாத பொலிசாரே, வவுனியாவை பொறுத்தவரையில் ஊடகங்களில் ஆவா குழு சம்பந்தமாக வெளியாகிய செய்திகளின் காரணமாக வவுனியா பொலிசாரினால் ரோந்து நடவடிக்கையும், சோதனை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வவுனியா நகரம் அமைதியாகவே காணப்படுகிறது வவுனியாவில் ஆவா குழு குறித்து எந்தவிதமான வழக்குகளும் பதிவாகியிருக்கவில்லை. வாள் வெட்டு சம்பவங்கள் நடந்துள்ள நிலையில் அதற்கு காரணமானவர்கள் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் போதைவஸ்த்துக்கள், கள்ள நோட்டுக்களின் புளக்கம் அதிகரித்துள்ள நிலையில் அவைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத பொலிசார் ஊடகவியலாளர்கள் மீது கை வைத்துள்ளதானது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்களுக்கும் ஊடகத்துறைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டிய பொலிசார் யாருக்காக அல்லது எந்த சக்திக்கு துணைபோய் ஊடகவியலாளரை கைது செய்தமை பொலிசார் மீதும், சட்டத்தின் மீதும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊடகவியலாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தவர்கள் மறைமுகமாக பொலிசாரை தூண்டி விட்டு ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறையை உருவாக்கியுள்ளனர். எதிர்காலத்தில் உண்மைகள் வெளிவரக்கூடாது என்பதில் தீய சக்திகள் சில உறுதியாக செயல்ப்படவுள்ளமையும், கடந்தகாலத்தில் பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் போராட்டங்களின் போது அடக்கு முறைக்கு உட்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறலாம் என்பதையுமே இக் கைது கட்டியம் கூறி நிற்கிறது.