ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

161

பாராளுமன்ற சுற்றுவட்டத்துக்கு அருகில் இன்று இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதனால் சாரதிகள் நண்பகல் 12 மணிக்கு பின்னர் மாற்று வீதிகளை பயன்டுத்துமாறு பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான றுவன் குணசேகர தெரிவித்தார்.

அத்துடன் நண்பகல் 12 மணிக்கு முன்னர் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று இடம்பெறவுள்ள மக்கள் ஆர்ப்பாட்டத்துக்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் விசேட பாதுகாப்பு தொடர்பாக நேற்று பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

பாராளுமன்ற சுற்றுவட்டத்தை அண்மித்த பொல்துவ சந்தியில் இன்று இடம்பெறவுள்ள போராட்டத்துக்கு பாரியதொரு மக்கள் கூட்டம் கலந்துகொள்ளும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

அதனால் இன்றைய தினம் அந்த பிரதேசத்தில் பொலிஸாரினால் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. குறிப்பாக அந்த பிரதேசத்தின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

இன்றைய தினம் விசேட பாதுகாப்புக்காக பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் ஆயிரத்து 200 க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகளை நியமிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றோம். அதேபோன்று மேலதிக பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர்களும் அந்த பிரதேசத்தில் நிறுத்த ஏற்பாடாகி இருக்கின்றது. இந்த நடவடிக்கைகள் யாவும் நுகேகொடை பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட பொலிஸ் பொறுப்பதிகாரியின் கீழே இடம்பெற இருக்கின்றன என்றார்.

போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பாக அதற்கு பொறுப்பாக இருக்கும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கருத்து தெரிவிக்கையில்,

இன்று பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் இடம்பெறும் மக்கள் பேரணி காரணமாக நண்பகல் 12 முதல் அந்த பிரதேசத்தில் வாகன போக்குவரத்து வரையறுக்கப்படும் சாத்தியம் இருக்கின்றது. அதனால் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மாலபே, அத்துருகிரிய பிரதேசத்தில் இருந்து பத்தரமுல்ல   ஊடாக கொழும்புக்கு வரக்கூயடிவர்கள் அதேபோன்று பன்னிபிட்டிய, ஹோகந்தர, தலவத்துகொட ஊடாக கொழும்புக்கு வரக்கூயடிவர்கள் மற்றும் கொழும்பில் இருந்து இந்த வீதியூடாக வெளியேறுபவர்கள் இந்த வாகன மட்டுப்பாட்டுக்கு ஆளாகுவார்கள்.

அந்தவகையில் கடுவலை, அத்துருகிரிய, மாலபே முதல் பத்தரமுல்ல ஊடாக கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் கொஸ்வத்த சந்தி அல்லது பத்தரமுல்ல   சந்தியினால் இடதுபக்கத்துக்கு சென்று பாலந்துதுன சந்தி, கியன்ஹாம் சுற்றுவட்டம், ஜப்பான் நற்புறவு வீதி, கிபுலாகல சந்தி, பிடகோட்டே சந்தி, பாகொட வீதி, நாவல வீதி ஊடாக அல்லது நாராஹென்பிட்ட நோக்கி சென்று கொழும்புக்கு உள்நுழையலாம்.

கொழும்பிலிருந்து மாலபே,கடுவலை,அதுருகிரிய திசைக்கு பயணிக்கும் வாகனங்கள் ஆயுர்வேத சுற்றுவட்டதால் முன்னோக்கியோ வெலிகட சந்தியினால் முன்னோக்கி சென்று புக்கமுவ வீதி, அம்பகஹ சந்தி கலபலுவாவ வீதி,ஹீனடிகுபுர ஊடாக கொஸ்வத்த சந்திக்கு பயணித்து மாலபே, கடுவளை, அதுருகிரிய திசைக்கு பயணிக்கலாம். அதேபோன்று கலபலுவாவ வீதி ஊடாக பழைய வீதிக்கு பயணித்து கடுவளை திசைக்கு பயணிக்கலாம்.

மேலும் பன்னிபிட்டிய, ஹோகந்தரயில் இருந்து தலவத்துகொட ஊடாக கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் தலவத்துகொட சந்தி, கிபுலாவல சந்தி, பிடகோட்டே சந்தி, பாகொட வீதி,நாவல வீதி ஊடாக நாவல சந்தி அல்லது நாரஹேன்பிட்டி திசைக்கு பயணித்து கொழும்புக்கு நுழையலாம். மேலும் பொரளையில் இருந்து தலவத்துகொட ,ஹோகன்தர, பன்னிபிட்டிய திசைக்கு பயணிக்கும் வாகனங்களுக்கும் மேலே குறிப்பிட்ட வீதிகளின் எதிர் திசையை பயன்படுத்தலாம்.

அத்துடன்  பாடசாலை வாகனங்களுக்கு எந்தவித இடையூறுகளும் ஏற்படாதவாறு விசேட கவனம் செலுத்தி அந்த வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

SHARE