பாகிஸ்தான் அணி வெற்றி

156
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள நியூசிலாந்து அணி, மூன்று ரி-20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இந்நிலையில் இந்த சுற்றுப் பயணத்தில் முதலாவதாக மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர் நடைபெறுகின்றது. இதன் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று பாகிஸ்தான் அணி தொடரை வெற்றிக்கொண்டுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான ரி-20 போட்டி, நேற்று டுபாயில் நடைபெற்றது. இந்த போட்டியின் முடிவினை தற்போது பார்க்கலாம்…

இரு அணிகளுக்கிடையிலான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பாட்டத்தை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக பாபர் அசாம் 79 ஓட்டங்களையும், மொஹமட் ஹபீஸ் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் கொலின் டி கிராண்ட்ஹாம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைதொடர்ந்து, 167 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நியூசிலாந்து அணி, 16.5 ஓவர்கள் நிறைவில் 119 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் பாகிஸ்தான் அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி, ரி-20 தொடரைக் 3-0 என்ற கணக்கில் வெற்றிக் கொண்டுள்ளது.

இதன்போது நியூசிலாந்து அணி சார்பில், கேன் வில்லியம்சன் 60 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் சதாப் கான் 3 விக்கெட்டுகளையும், இமாட் வசிம் மற்றும் மசூத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக பாபர் அசாமும், தொடரின் நாயகனாக மொஹமட் ஹபீசும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

SHARE