இந்தியா அணி வெற்றி

150
விண்டிஸ் கிரிக்கெட் அணி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் ரி-20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இதன்படி, இந்தியா சென்றுள்ள விண்டிஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர்களில் விளையாடுகின்றது.

இந்நிலையில் இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியக் கிரிக்கெட் அணி, 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

இதனைதொடர்ந்து, நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும், இந்தியா அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

தற்போது இரு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர், நடைபெற்று வருகின்றது.

இதன் முதல் ரி-20 போட்டியில், இந்தியா அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டி நேற்று நடைபெற்றது.

லக்னெவ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற விண்டிஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய இந்தியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ரோஹித் சர்மாவின் சதத்தின் துணையுடன், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதன்போது, அணித்தலைவர் ரோஹித் சர்மா, அதிரடியாக துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காது 111 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இதன்போது 61 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் சர்மா, 7 சிக்ஸர்கள், 8 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 111 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் கெர்ரி பியர் மற்றும் பெஃபியன் அலென் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

ரோஹித் சர்மா இதன்போது பெற்றுக் கொண்ட சதமானது, ரி-20 போட்டிகளில் அதிக சதங்கள் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பமாக பதிவு செய்யப்பட்டது. அவர் இதுவரை 4 சதங்கள் அடித்துள்ளார்.

இதுதவிர அணித்தலைவராக இரண்டு சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையும் ரோஹித் சர்மாவே சாரும்.

அத்தோடு இந்தியா அணி சார்பில், ரி-20 போட்டியொன்றில் அதிக சிக்ஸர்கள் விளாசிய ஐந்தாவது வீரர் என்ற பெருமையும் ரோஹித் சர்மா தன்வசப்படுத்தினார். இதே பட்டியலில் ரோஹித் சர்மா தான் 10 சிக்ஸர்களுடன் முதலிடத்தி;ல் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனைதொடர்ந்து 196 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய விண்டிஸ் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் இந்தியா அணி 71 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 2-0 என இந்தியா அணி, முன்னிலைப் பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இதன்போது விண்டிஸ் அணி சார்பில், டேரன் பிராவோ 23 ஓட்டங்களை அதிகபட்ச ஓட்டமாக பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார், காஹீல் அஹமட், ஜஸ்பிரிட் பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா, தெரிவுசெய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டி, எதிர்வரும் 11ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளது.

SHARE