குப்பைகள் கொட்டுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

யாழ். நகரத்தில் சட்டவிரோதமாகக் குப்பைகள் கொட்டுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாணப் பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வர்ண ஜெயசூரிய அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய கேட்போர் நேற்று இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தொடர்பான கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

யாழ். நகரத்தின் பிரதான வீதிகளான ஸ்ரான்லி றோட், கே.கே.எஸ் வீதி மற்றும் பிரதான வீதி உட்பட பல்வேறு முக்கிய வீதிகளிலும் பொதுமக்களால் குப்பைகள் கொட்டப்படுவதை பொலிஸார் தடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இவ்வாறு பொதுமக்களினால் குப்பைகள் பொருத்தமில்லாத இடங்களில் கொட்டப்படுவதற்கு, கழிவகற்றல் செயன்முறை உரியமுறையில் நடைமுறைப்படுத்தப்படாமையே காரணம்.

எனவே யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேசசபை ஆகியன பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டுவதற்குப் பொருத்தமான இடங்களை உடனடியாக அடையாளப்படுத்திக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு குப்பைகளைக் கொட்டுவதற்கு இடங்கள் அடையாளப்படுத்தப்பட்ட பின்னரும் பொதுமக்கள் வீதிகளில் குப்பைகளை கொட்டினால் பொலிஸார் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுப்பார்கள்.

சட்டத்திற்கு புறம்பான வகையில் வர்த்தக நிலையங்களின் கழிவுகளை வெளியேற்றிய 37 வர்த்தகர்கள் மீது இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, வீதிகளில் குப்பைகளைக் கொட்டிய 7 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

About Thinappuyal News