விரைவில் கின்னஸில் இடம்

175

பிரித்தானியாவைச் சேர்ந்த நீச்சல் வீரர் ரோஸ் எட்ஜ்லி, கடந்த 5 மாதங்களாக கடலில் நீந்தியதன் மூலம் கின்னஸ் சாதனையில் இணைய உள்ளார்.

பிரித்தானியாவில் உள்ள கிரேட் பிரிட்டன் எனும் தீவு கடலில், கடந்த ஜூன் 1ஆம் திகதி முதல் ரோஸ் எட்ஜ்லி(33) நீந்த தொடங்கினார். கின்னஸ் சாதனைக்காக இந்த முயற்சியை தொடங்கிய இவர், தினமும் 6 முதல் 12 மணி நேரம் கடலில் நீந்தியபடி இருந்தார்.

நீந்தும் நேரம் தவிர மற்ற நேரங்களில், தான் கொண்டு சென்ற படகிலேயே உணவு சாப்பிட்டுள்ளார் எட்ஜ்லி. அத்துடன் அதிலேயே தூங்கியுள்ளார். இவ்வாறாக தொடர்ந்து 5 மாதங்களாக கடலில் நீந்திய ரோஸ் எட்ஜ்லி, கடந்த 4ஆம் திகதி தெற்கு பிரித்தானியாவில் உள்ள மார்கேட் நகரில் கரை திரும்பினார்.

அப்போது அங்கு கூடி இருந்த பொதுமக்கள் அவரை கைதட்டி வரவேற்றனர். இந்நிலையில், தொடர்ந்து நீந்நியதால் எட்ஜ்லியின் கால் பாதங்கள் பிரஷ் போன்று கட்டையாக மாறி இருந்தது. உப்பு தண்ணீரில் நீந்தியதால் நாக்கு வறண்டு கடும் தாகம் ஏற்பட்டதாகவும், உணவு சாப்பிட மற்றும் விழுங்க மிகவும் சிரமப்பட்டதாக எட்ஜ்லி தெரிவித்துள்ளார்.

கடலில் நீந்தியதால் தனது உடல் உறுப்புகளில் ஏற்பட்ட மாற்றம் குறித்த புகைப்படங்களையும், தான் படகில் சாப்பிட்டு உறங்கிய வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எட்ஜ்லி வெளியிட்டார். இதனை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

தொடர் நீச்சலால் பேசக் கூட சிரமப்பட்ட எட்ஜ்லி அதற்காக தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், எட்ஜ்லியின் பெயர் இன்னும் 2 வாரங்களில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE