225 பாடசாலைகளுக்கு 8 மில்லியன் ரூபா பெறுமதியான 7680 கடின பந்துகள்

161

நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கியதாக நாடளாவிய ரீதியில் இருந்து சுமார் 225 பாடசாலைகளுக்கு 8 மில்லியன் ரூபா பெறுமதியான 7680 கடின பந்துகள் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனமும், இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கமும் இணைந்து ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் இவ்வாறு பாடசாலைகளுக்கு கடின பந்துகளை பகிர்ந்தளிக்கும் செயற்றிட்டத்தை கடந்த 2013ஆம் ஆண்டு முதல் முன்னெடுத்துவருகின்றது.

இதன் ஓர் அங்கமாக,பாடசாலை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கிரிக்கெட் உபகரணங்கள் மற்றும் கடின பந்துகளை பகிர்ந்து அளிக்கும் நிகழ்வு விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் தலைமையில் கடந்த முதலாம் திகதி இலங்கை கிரிக்கெட்டில் நடைபெற்றது.

நாடாளவிய ரீதியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு மாத்திரம் இவ்வாறு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதேநேரம்,முதற் கட்டத்தின் கீழ் 60 பாடசாலைகளுக்கு இதன்போது கடின பந்துகள் வழங்கிவைக்கப்பட்டன.

அத்துடன்,பாடசாலை கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள டிவிஷன்-1,டிவிஷன்-2 மற்றும் டிவிஷன்-3 பாடசாலைகள், 19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இந்த கடின பந்துகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய பாடசாலைகளுக்கான கடின பந்துகள்,கடந்த 2ஆம் திகதி ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் வைத்து கையளிக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

கிரிக்கெட் விளையாட்டின் நன்மதிப்பை பாதுகாத்து வீரர்கள் நடந்து கொள்ள வேண்டும் எனவும்,விளையாட்டின் முன்னேற்றத்துக்காக புதிய சட்டங்கள் நிறைவேற்றப்படவேண்டும் எனவிளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா இதில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார்.

நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் தகுதி வாய்ந்த அதிகாரியும்,விளையாட்டுத்துறைஅமைச்சின் செயலாளருமான கமல் பத்மசிறி, இலங்கை கிரிக்கெட் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா, இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும்,கொட்டாவ தர்மபால வித்தியாலயத்தின் அதிபருமான ஒஷிர பண்டிதரத்ன,செயலாளர் டில்ஷான் த சில்வாவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

SHARE