தந்தை செல்வா வழியில் பயணிக்கும் சம்பந்தன் ஐயாவுக்கு வாழ்த்துக்கள் இனி கட்டுவதற்கு கோவணமும் மிஞ்சாது

 

இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டபோது அன்று (1965 இல்)  தந்தை_செல்வா என்ன முடிவினை எடுத்தாரோ அந்த முடிவினையே இன்று (2018 இல்)  இரா_சம்பந்தனும் எடுத்திருக்கிறார்.

ஆனால் அன்று  ஜி_ஜி_பொன்னம்பலம் எடுத்த முடிவு ஐ.தே.கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு கொடுப்பதோடு நின்றுவிடாது தமிழரசுக்கட்சி அமைச்சுப்பதவியினையும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது. எனினும் தமிழரசுக்கட்சி அரசியல் தீர்வே பிரதானம் அமைச்சுப்பதவி அல்ல என்று டட்லி + செல்வா ஒப்பந்தம் மூலம் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சித்தது.

#தந்தை_செல்வா தலைமையிலான தமிழரசுக்கட்சி அரசியல் தீர்வு விடயத்தில் முனைப்போடு இருக்க ஜி.ஜி.பொன்னம்பலம் டட்லி_சேனநாயக்க தலைமையிலான ஐ.தே.கட்சி அரசாங்கத்தில் இணைந்து அமைச்சரும் ஆனார். பரந்தன் கெமிக்கல், காங்கேசன்துறை சீமெந்து ஆலையென்று அபிவிருத்தி அரசியலில் இறங்கினார்.

இன்று தந்தை செல்வா அன்று எடுத்த அதே முடிவினை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எடுத்தமைக்கு #கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவரை விமர்சிக்கிறார். கூட்டமைப்பினர் ஐ.தே.கட்சியில் இணைந்துவிட்டார்கள் என பிரச்சாரம் செய்கிறார். இரா.சம்பந்தன் தந்தை செல்வா வழியில் முடிவெடுக்காமல் தன் தாத்தாவும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஸ்தாபகருமான ஜி.ஜி.பொன்னம்பலம் வழியில் முடிவெடுத்திருக்கவேண்டும் என கஜேந்திரகுமார் நினைக்கின்றாரா?

இன்று இரா.சம்பந்தனை இம்முடிவுக்காய் விமர்சிக்கும் கஜேந்திரகுமார் அன்று ஜி.ஜி.பொன்னம்பலம் எடுத்த முடிவும் தந்தை செல்வா எடுத்த முடிவும் பிழையென்று அதை விமர்சிப்பாரா?

இன்றைய அரசியல் நெருக்கடி நிலையை சமாளிக்க தந்தை செல்வா வழியா? ஜி.ஜி பொன்னம்பலம் வழியா சரியானது? இதில் எது சரியானதென்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொல்கிறார்?

நான் இன்றைய நெருக்கடி நிலையில் அன்று ஜி.ஜி.பொன்னம்பலம் எந்த அரசியல் முடிவை எடுத்தாரோ அதே முடிவினை சம்பந்தன் ஐயா எடுத்திருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன். தந்தை செல்வாவின் முடிவு டட்லி + செல்வா ஒப்பந்தம் கிழிக்கப்பட்டதோடு பயனின்றிப்போனது. ஆனால் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் முடிவின் எச்சமாக பரந்தன் கெமிக்கல் கூட்டுத்தாபனமாவது மிச்சமிருக்கிறது.

எனவே அரசியல் தீர்வுக்கு பின்னரே அபிவிருத்தி என அன்று தொட்டு இன்றுவரை எதிர்ப்பு அரசியல் செய்து மக்களின் வாக்கினை வீண்விரயம் செய்யாது இனியாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜி.ஜி.பொன்னம்பலம் வழியில் அபிவிருத்தி அரசியல் நோக்கி நகரவேண்டும். வாக்களித்த மக்களுக்கு வேலைவாய்ப்புக்கள் தொழிற்திட்டங்கள் கிடைக்க வழிவகைகள் செய்யவேண்டும்.

சிலர் தெற்கோடு எதிர்ப்பு அரசியல் மாத்திரமே செய்யவேண்டும் மாறாக இணக்க அரசியல் செய்தால் சிங்கள பெரும் தேசியவாதம் தமிழ் தேசியவாதத்தை விழுங்கிவிடும், தமிழர்களை அழித்துவிடும், தமிழர்கள் இனக்கலப்புக்கு ஆளாவார்கள், தமிழ் தேசம் பெளத்தமயமாகும், தமிழர்கள் பெளத்த சிங்களவர்கள் ஆகிவிடுவார்கள், கலாச்சாரம் அழிக்கப்பட்டுவிடும், பண்பாடு போய்விடும் என்றெல்லாம் கட்டுரை எழுதக்கூடும் அவர்களுக்கு ஒரு சின்ன உதாரணத்தை கூறிக்கொள்ள விரும்புகிறேன்…

இலங்கைத்தீவில் அன்று தொட்டு இன்றுவரை முஸ்லிம்கள் இணக்க அரசியலை மாத்திரமே முன்னெடுத்துவருகின்றனர். அவர்களை சிங்கள பெரும்தேசியவாதம் விழுங்கியதா? அவர்களில் எவராவது பெளத்த சிங்களவர்களாக மாற்றப்பட்டனரா? அவர்கள் கலாச்சாரம் பண்பாடு அழிக்கப்பட்டதா? அவர்கள் இனக்கலப்புக்கு ஆளானார்களா? அவர்கள் தனித்துவம் இல்லாமல் போனதா? அவர்களின் இனப்பரம்பல் குறைவடைந்ததா?

இவை எவற்றுக்கும் இல்லை என்பதுதான் பதில்

அத்துடன் இணக்க அரசியல்மூலம்தான் அவர்கள் தம்மை இனமாக கட்டமைத்துக்கொண்டுள்ளனர். தமக்கு கிடைத்த அமைச்சுக்களை வைத்துத்தான் தம் இன, மத, கலாச்சார, பொருளாதார விழுமியங்களை மேம்படுத்திக்கொண்டனர். இலங்கை சுதந்திரம் பெற்றபோது மக்கள் தொகையின் 5% வீதமாக இருந்த முஸ்லிம்கள் இன்று 10% மாக உயர்ந்திருக்கின்றனர். 25% மாக உயர்ந்திருக்கவேண்டிய ஈழத் தமிழர்கள் 12% மாக குறைவடைந்திருக்கின்றனர். இதற்கு காரணம் என்ன? தமிழர்கள் ஏன் இனம் மாற்றப்படுகின்றார்கள் தமிழர்கள் ஏன் மதம் மாற்றப்படுகின்றார்கள்? இதற்கு பிரதான காரணம் அவர்களிடம் தம்மை நிலைப்படுத்திக்கொள்ள அதிகாரம் இல்லாமை. தம்மை பொருளாதார ரீதியாக காப்பாற்ற கட்டமைப்பு இல்லாமை.

இணக்க அரசியல் இனத்தை அழித்துவிடும் என்றால் இன்று முஸ்லிம்கள் என்ற இனம் இல்லாமலே போயிருக்குமே? ஏன் அவ்வாறு இடம்பெறவில்லை? ஒவ்வொரு முஸ்லிமும் தன் வாக்கினை தனக்கான இனத்துவ கட்டமைப்பை பாதுக்காக்கும் வாக்காகவே இட்டுவருகின்றான். தம் இருப்பினை பாதுகாக்க இணக்க அரசியலை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். 1915 சிங்களவர்கள் எமக்கெதிராக வன்முறையில் ஈடுபட்டார்கள் கலவரத்தில் ஈடுபட்டார்கள் எம்சொந்தங்களை கொன்றார்கள் அதனால் நாம் அவர்களோடு இணங்கி அரசியல் செய்யமாட்டோம் என்று தமிழர்களைப்போன்று எதிர்ப்பு அரசியலில் ஈடுபட்டிருந்தால் இன்று இலங்கைத்தீவில் முஸ்லிம் என்று ஒரு இனம் இருந்தே இருக்காது.

இணக்க அரசியல் ஊடாக இன்று முஸ்லிம்கள் தம்மை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள் இலங்கையில் பலம் மிக்க சக்தியாக மாறிவிட்டிருக்கிறார்கள். தமக்கான பரந்துபட்ட ஆதரவுதளத்தை உலகெங்கும் பெற்றிருக்கின்றனர். முள்ளிவாய்க்காலில் தமிழர்களுக்கு நிகழ்த்திய இனப்படுகொலையினை போன்று காத்தான்குடியில் ஓர் இனப்படுகொலையினை இலங்கை அரசு நினைத்தாலும் நடத்த முடியாது. இதுதான் உண்மை.

ஆக இணக்க அரசியல் இனத்துக்கு ஆபத்தானது இல்லை.

அழிந்துகொண்டிருக்கும் எம்மை அழிவில் இருந்து தற்காத்துக்கொள்ள எமக்கு அதிகாரம் தேவை எங்கள் நிலங்கள் பறிக்கப்படாதிருக்க வேண்டுமெனில் எம்மில் இருந்து ஒருவர் அமைச்சராக வேண்டும். எங்கள் கலாச்சாரம் பாதுகாக்கப்படவேண்டுமெனில் அதற்கான அமைச்சு எம்மிடம் இருக்கவேண்டும். எங்கள் மக்கள் பொருளாதார வளர்ச்சி பெறவேண்டுமெனில் அதை கட்டமைக்கும் அதிகாரம் எமக்கு இருக்கவேண்டும். அதிகாரத்தின் மையம் அரசாங்கம் அந்த அரசாங்கத்தில் அங்கம் பெறுவதன் ஊடாக அதிகாரங்களைப் பெற்று எம்மை நிலைப்படுத்த வேண்டும். இவற்றினூடாக பலம்மிக்கவர்களாக எம்மை மாற்றிக்கொண்டு அரசியல் தீர்வொன்றை கோரவேண்டும்.

அதை விடுத்து 14 உறுப்பினர்கள் சேர்ந்து பாராளுமன்றத்தில் எதிர்த்து நின்று தீர்வினை பெற்றுவிடுவோம் என பேசிக்கொண்டு இருந்தால் 14 அடுத்து 10 ஆக மாறும் பத்து எட்டாக மாறும் அரசியல் பிரச்சனையை காரணமாகக்காட்டி எல்லாத்தமிழனும் புலம்பெயர்ந்து ஓடிவிடுவார்கள் இலங்கையில் இனப்பிரச்சினையே இல்லையென்று ஆகிவிடும்…இனமே இல்லையென்றால் இனப்பிரச்சினையும் இருக்காதுதானே?

இன்றும் தந்தை செல்வா வழியில் பயணிக்கும் சம்பந்தன் ஐயாவுக்கு வாழ்த்துக்கள் எனினும் தந்தை செல்வா வழிக்கு மேலதிகமாக ஜி.ஜி.பொன்னம்பலத்தின் வழியினையும் தமிழ் மக்களின் இருப்பினை தக்கவைக்கும் முகமாக இரா.சம்பந்தன் ஐயா தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு பின்பற்ற வேண்டும் அதுவே சிறந்த முடிவாக இருக்கும்.

About Thinappuyal News