இன்று நாம் ரணில் விக்ரமசிங்கவை பாதுகாக்க தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை.

ஜனாதிபதி புதுவகையான நோய் தொற்றுக்கு இலக்காகி உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

கிண்ணியாவில் இன்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இன்று நாம் ரணில் விக்ரமசிங்கவை பாதுகாக்க தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. இது இந்த நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியல் அமைப்பையும் பாதுகாக்க நடாத்தப்படும் போராட்டம்.

225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பம் இட்டாலும் நான் ரணில் விக்ரமசிங்கவை பிரமராக நியமிக்கமாட்டேன் என ஜனாதிபதி கூறுவதை கேட்டு நாம் வேறு ஒருவரை பிரதமராக நியமிக்க சம்மதித்தால் அது ஜனநாயகத்துக்கு எதிரான தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்.

அதாவது நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்தை பெறாத ஒரு கட்சிக்கு ஜனாதிபதி நினைத்ததை போல் பிரதமர் பதவியை வழங்க முடியும் என்ற மனநிலைக்கு மக்களை திசை திருப்ப இது வழிவகுக்கும்.

ஜனாதிபதி மேற்கொண்ட தவறான முடிவுகளால் இன்று நாட்டின் அரச தனியார் சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ஒருநாள் ஹிட்லர் போல் செயற்படுகிறார். அடுத்தநாள் மிஸ்டர் பீன் போல் நடந்துகொள்கிறார்.

ஐக்கிய தேசிய முன்னணியுடன் கலந்துரையாடும் போது எமது வாக்குகளால் வெற்றிபெற்ற ஜனாதிபதி போல் பேசுகிறார். அதன்பின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து அதற்கு முற்றிலும் மாற்றமாக பேசுகிறார்.

அதிலும் காலையில் ஒரு பேச்சு மாலையில் இன்னொரு பேச்சு. உதாரணமாக அரசியல் நெருக்கடிக்கு 24 மணித்தியாலங்களில் தீர்வு காண்பதாக கூறியவர் அடுத்த நாள் ஒரு வாரத்தில் தீர்வு காண்பதாக கூறுகிறார்.

மொட்டில் இணைந்த அவரின் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என கூறி சில தினங்களில் மொட்டுடன் கூட்டணி என கூறுகிறார்.

சில நேரங்களில் ஜனாதிபதியின் பேச்சுகளில் மஹிந்த ராஜபக்ச, எஸ். பி திசாநாயக்க, விமல்வீரவன்ச, கம்பன்பில போன்றோர்களின் குரல்கள் வந்து செல்கின்றன.

இவரது கையில் நிறைவேற்று அதிகாரம் இருப்பது குழந்தையின் கையிலுள்ள பொம்மையை போன்றுள்ளது.

தன்னால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை காட்ட முடியாது என அறிந்ததும் நாடாளுமன்றத்தை கலைப்பதாக வெளியிட்டதில் தொடங்கிய அவரின் வர்த்தமானி நோய் இன்று அவர் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவிருந்த விழாவை புறக்கணிப்பதாக கூறிய ஹோட்டல் உரிமையாளர்களை பழிவாங்க வர்த்தமானி வெளியிட்டதில் வந்து முடிந்துள்ளது.

அவருக்கு கோபம் வந்தால் உடனே ஒரு வர்த்தமானியை நாம் எதிர்பார்க்கலாம். ஆகவே ஜனாதிபதியின் அண்மைக்கால செயற்பாடுகளை அவதானிக்கும்போது அவர் புதுவகையான நோய் தொற்றுக்கு இலக்காகியுள்ளார் என எண்ண தோன்றுகிறது. எனவே ஜனாதிபதி சிறந்த வைத்தியர்களிடம் சிகிச்சை பெறுவது நாட்டு மக்களுக்கு நல்லது.

ஜனாதிபதியின் இந்த செயற்பாடுகளால் இன்று ஐக்கிய தேசிய கட்சியின் செல்வாக்கு பல மடங்கு அதிகரித்துள்ளது. கட்சியில் காணப்பட்ட முரண்பாடுகள் களையப்பட்டுள்ளன.

ஆகவே இனி நடைபெறும் எந்த தேர்தல்களிலும் ஐக்கிய தேசிய கட்சி பாரிய வெற்றிபெறும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

ஆனால் சட்டவிரோத அரசாங்கத்தின் கீழ் எந்த தேர்தலும் நடைபெற நாம் அனுமதியளிக்க முடியாது. இனி நடைபெறும் அனைத்து தேர்தல்களும் ஜனநாயக அரசின் கீழே இடம்பெறும் என குறிப்பிட்டுள்ளார்.

About Thinappuyal