7 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டத்துடன் ஆஸி.

இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸுக்காக 7 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களை குவித்துள்ளது.

இவ் விரு அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது.

இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து, நேற்றைய ஆட்ட நேர முடிவின் வரை இந்திய அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களை குவித்திருந்தது. ஆடுகளத்தில் மெஹமட் ஷமி 6 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

இந் நிலையில் போட்டியின் இரண்டாம் நாளான இன்று முதல் பந்திலேயே ஷமி ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸுக்காக 250 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணி சார்பாக புஜாரா 123 ஓட்டங்களையும், ரோஹித் சர்மா 37 ஓட்டங்களையும், ரிஷாத் பந்த் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 25 ஓட்டங்களையும் அதிகப்படியாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக  ஹேசல்வுட் 3 விக்கெட்டுக்களையும் மிச்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் மற்றும் நெதன் லியோன் ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி 88 ஓவர்களை எதிர்கொண்டு 7 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களை பெற்றவேளை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

அவுஸ்திரேலிய அணி சார்பாக டிராவிஸ் ஹெட் 61 ஓட்டங்களையும், பீட்டர் ஹான்சாம்கோப் 34 ஓட்டத்தையும், உஸ்மான் கவாஜா 28 ஓட்டத்தையும், மார்கஸ் ஹாரிஸ் 26 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக அஸ்வின் 3 விக்கெட்டுக்களையும், இஷான் சர்மா மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

ஆடுகளத்தில் டிராவிஸ் ஹெட் 61 ஓட்டங்களுடனும், மிச்செல் ஸ்டாக் 8 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதுள்ளனர். நாளை போட்டியின் மூன்றாம் நாளாகும்.

About Thinappuyal