மலையகத்தின் எதிர்கால அரசியல் இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதை மையமாக் கொண்டு இனப் பிரஜைகள் என்ற அடையாளத்தைக் கடந்து தேசிய பிரஜைகள் என்ற நிலைக்குச் செல்லவேண்டும்.

 

பல இன மக்களைக் கொண்ட தேசமான இலங்கை அனைவருக்கும் சமத்துவத்தையும் சமமான வாய்ப்பையும் உறுதிப்படுத்தி இனங்களின் தனித்துவங்களை பேணி தேசிய பிரஜைகளைக் கொண்ட ஆட்சி முறையை கொண்டிருக்கவில்லை. மாறாக இனக் குழுப் பிரஜைகளைக் கொண்டதாகவும் இனக் குழுப் பிரஜைகள் என்ற அம்சத்தை கருத்தியல் ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் உறுதிப்படுத்தி இனங்களுக்கிடையே மோதல்களை பேணுவதாகவே இலங்கை பயணித்து வருகிறது.
இப்போக்கிற்கு இலங்கையின் பின் காலனிய ஆட்சியில் காணப்பட்ட பிற்போக்குத் தனங்களே பிரதான காரணம் எனக் கூறலாம். பிரித்தானியர் ஆட்சியில் இனங்களைப் பிரித்தாளும் கொள்கையைப் பின்பற்றி ஆட்சி செய்த போதும் அவர்களால் இலங்கைக்கு அளிக்கப்பட்டிருந்த முற்போக்கான அரசியல் சிவில் உரிமைகளை விருத்தி செய்வதற்கான வாய்ப்பு பின் காலனிய ஆட்சியாளர்களுக்குக் கிடைத்தது. எனினும் அவர்கள் அதனைப் பயன்படுத்தவில்லை. பின் காலனிய ஆட்சியின் போது முன்னர் பிரித்தானியரினால் அறிமுகம் செய்யப்பட்ட முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு ஏற்ற தாராள ஜனநாயகப் பண்புகளுக்கு மாறாக இனவாதமே முனைப்புப் பெற்றது. பின்காலனிய ஆட்சியின் அனைத்து “இனப் பிரஜைகளுக்கும்’ எதிரானதாக ஆட்சி இடம்பெற்ற போதும் அது நேரடியாகவும் மறைமுகமாகவும் பெரும்பான்மை சிங்கள வெகுஜனங்களுக்கு சார்பானது என்ற கருத்தியல் மேலாண்மை சிங்கள மக்களிடையே ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர்  போராட்டம் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின்னர் சிங்கள வெகுஜனங்களுக்கு மத்தியில் இக் கருத்தியல் மேலாதிக்கம் மேலும் வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் ஏனைய இனப் பிரஜைகளுக்கு உரிமைகள் மறுக்கப்படுவது “சட்ட பூர்வமாக்கப்படும்’ சூழ்நிலையிலேயே இன்று இலங்கை பயணிக்கிறது. இப் பின்னணியில்  சிறுபான்மை இனங்களின் அரசியல், பொருளாதார, சமூக உரிமைகள் பறிக்கப்படுவதோடு, சிங்கள வெகுஜனங்களினது உரிமைகளும் நசுக்கப்படுகின்றன. இலங்கையில் இனப் பிரஜைகளில் அரசியல் ரீதியாக வஞ்சிக்கப்பட்ட வரலாற்றைக் கொண்டவர்களாகவும் இலங்கைத் தமிழருக்கும் அரசுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களின் உக்கிரத்தன்மையினால் அதிக கவனிப்புக்கு உட்படாது இருந்த மலையக மக்களின் அரசியல் பல்வேறு தனித்தன்மைகளைக் கொண்டுள்ளதுடன் விசேட கவனத்திற்கும் உட்படுத்த வேண்டியதாகிறது.
இலங்கையில் உள்ள ஏனைய இனக் குழுக்களையும் விட தனித்துவமான அரசியல் வரலாற்றைக் கொண்ட இனக்குழுவாக மலையக மக்கள் காணப்படுகின்றனர். இந்தத் தனித்துவத்திற்கு 19 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு தொழிலாளர்களாக குடியேற்றி தோட்டம் என்ற தனி இராஜ்ஜியத்திற்குள் நகர தொழிலாளர்களிடம் இருந்தும் கிராம விவசாயிகளிடம் இருந்தும் பிரித்து வாழ வைக்கப்பட்டமையும் இலங்கையில் ஏனைய பிரஜைகள் பிரித்தானிய காலனித்துவத்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற வேளையில் அவர்களது அனைத்து சிவில், அரசியல் உரிமை பறிக்கப்பட்டமையும் காரணமாகும். இதில் குடியுரிமை பறிக்கப்பட்டமையானது மலையக அரசியலிலும் முதன்மையான அம்சமாகும். பறிக்கப்பட்ட குடியுரிமையை மீட்பதற்கான போராட்டமாகவே சுதந்திரத்துக்குப் பின்னரான நான்கு தசாப்தத்திற்கு மேலான அரசியல் நிலை பெற்றது. இன்று குடியுரிமைப் பிரச்சினை சட்ட ரீதியாக தீர்க்கப்பட்டிருக்கின்ற போதும் இலங்கையின் ஏனைய பிரஜைகள் அனுபவிக்கும் அடிப்படை (ஆச்ண்டிஞி) உரிமைகளுக்கு உரித்தற்றவர்களாகவே மலையக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். முகவரி, வீடு மற்றும் காணி உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் தொழில் பாதுகாப்பின்றி இன்றும் நாட் கூலிகளாகவே வேலை செய்து வருகின்றனர். தேசிய அரச நிர்வாகத்தில் முழுமையாக இணைய முடியாத நிலை, (இந்நிலை தோட்டங்கள் கிராமங்களாக கணிக்கப்படாமையினால் ஏற்பட்டுள்ளது) பிரதேச சபைக்கு, மாகாண சபைக்கு வாக்களித்தாலும் அதில் இருந்து அபிவிருத்திகளை பெறுவதில் சட்ட ரீதியான தடை என உரிமை மறுப்புக்கு உட்பட்டே மலைய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். எனவே, மலையக மக்கள் வாக்காளர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள போதும் ஏனைய “இன பிரஜைகள்’ அனுபவிக்கும் உரிமைகள் அற்றவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஏகாதிபத்திய வடிவமான காலனித்துவத்தினால் இலங்கைக்குத் தொழிலாளர்களாக குடியேறி தோட்ட இராச்சியத்திற்குள் தீவிர உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டமை, காலனித்துவவாதிகள் வழங்கிய சமமான அரசியல் உரிமையைப் பெற்று வாழ ஆரம்பித்த நிலையில் சிவில் அரசியல் உரிமைகள் இனத்துவ நோக்குடன் சுதேச ஆட்சியாளர்களினால் பறிக்கப்பட்டமை, குடியுரிமை மீட்புப் போராட்டத்தின் அவலங்கள், தொழிலாளர் வர்க்க ஒடுக்குதலுடன் பேரினவாத ஒடுக்குமுறைகள் முனைப்புடனான தொடர்ச்சியும் இலங்கை தமிழரின் இன விடுதலைப் போராட்ட (சாத்வீக, ஆயுத) முன்னெடுப்புகள் மலையக மக்கள் மீதான பேரின வாதத்தை மேலும் விரிவுபடுத்தி திணித்தமை, பேரினவாத ஒடுக்குமுறையின் விளைவாகவும் மலையக மரபு ரீதியான தொழிற் சங்க அரசியலின் புறநடையாகவும் மலையக தேசியம் என்ற கருத்துருவாக்கமும் செயல் வடிவங்களும் முனைப்புப் பெற்றமை ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு அவற்றில் இழையோடும் அகக் காரணியான மலையக மைய நீரோட்ட (தொழிற் சங்கவாதம், பாராளுமன்ற வாதம்) அரசியல் பயணமும் அதன் பங்களிப்பும், தோல்விகளும் மற்றும் மாற்று அரசியல் பாதையான உழைப்புச் சுரண்டல், அரசியல் ஒடுக்குமுறைக்கு எதிரான வெகுஜன அரசியல் பாதையின் பங்களிப்பும் அதன் வீழ்ச்சி பற்றியும் கருத்திற்கு உட்படுத்தி மலையக அரசியலை அணுகுவதே அதன் முழுமையான பிம்பத்தைத் தரும். அந்த வகையில் இது வரையான மலையக அரசியற் எண்ணக்கருவாக்கங்களும் ஆய்வுகளும் நான்கு அடிப்படைகளில் இடம்பெற்றுள்ளன. அவையாவன.
தாராள ஜனநாயக அடைவுகளை அடிப்படையாகக் கொண்டு பிரஜா உரிமையை நிலை நாட்டுவது உட்பட மலையக மக்களின் மனித உரிமைகளை நிலைநாட்டுவது (குறிப்பாக 1988 இற்கு முன்னர்)
தாராள ஜனநாயக பன்மைத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் நிறுவனங்களின் நியாயமான பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ளல்.
சிங்களப் பேரினவாத அரசு அடக்கு முறையுடன் எழுச்சியுற்ற மலையகம் என்ற தேசிய உணர்வு நிலையாக்கமும்  மலையக தேசிய அரசியலும் அதிகாரப் பகிர்வும்
மலையக மக்கள் வர்க்க சுரண்டலுக்கும் இன ஒடுக்குமுறைக்கும் ஆளாகும் சமூகம் என்ற வகையில் சுரண்டலுக்கும் ஒடுக்கு முறைகளுக்கும் ஆளாகும் அனைவருடன் இணைந்து, மலையக மக்கள் போராட வேண்டும் என்ற அரசியல் கண்ணோட்டம்.
 இதில் நான்காவது அம்சம் மலையக மக்களின் அரசியல் செல்நெறியைப் பற்றிப் பேசப்பட்டுள்ள போதும் அது முழுமைப் பெற்ற ஒன்று அல்ல. எனவே, இங்கு மலையக மக்களின் அரசியல் செல்நெறி பற்றிய ஒரு பார்வையை செலுத்த முயற்சிக்கப்படுகிறது. மலையக மக்கள் இலங்கையின் இனப் பிரஜைகளின் இரண்டாம் தர இனப் பிரஜைகளாக ஆக்கப்பட்டிருக்கின்றமைக்கு இலங்கையின் பின் காலனிய ஆட்சியாளர்களின் பேரினவாத பிற்படுத்தப்பட்ட முதலாளித்துவ அரசியல் நிலைப்பாடுகள் முக்கிய காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. அதேநேரம் மலையகத்தில் நிலவிய அரசியல் தொழிற் சங்க இயக்கங்களின் வகிபங்கு அகக்காரணி என்ற வகையில் முக்கியத்துவமிக்கதாகும். இப் பின்னணியில் இங்கு மலையக மக்களின் அரசியல் வரலாற்றினூடான அதன் போக்குகளைப் பரிசீலித்து அதன் எதிர்காலம் பற்றி உரையாடவும் எத்தனிக்கிறது.
மலையக மக்களா அல்லது இந்திய மக்களா ? 
மலையக மக்கள் என்ற அடையாளம் பற்றிய விவாதங்கள் இன்றும் தொடர்வதனால் மலையக மக்களின் அரசியல் வரலாறு மற்றும் அதன் போக்கு என்பவற்றை நோக்கும் முன் மலையக மக்கள் என்போர் யார் அவர்கள் எவ்வாறு அடையாளப்படுத்தப்படுகிறார்கள். எவ்வாறான அடையாளப்படுத்தல் ஏற்புடையது என்ற வினாக்களுக்கு விடை காண்பது அவசியமாகும்.
இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஆவணங்களில் இந்தியத் தமிழர் என்ற இனப் பிரிவு குறிப்பிடப்படுகின்றது. அதனையே மலையக மக்கள் என இங்கு குறிப்பிடப்படுகின்றது. 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதி முதல் தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்து மத்திய மலை நாட்டில் பெருந்தோட்டங்களை அடிப்படையாகக் கொண்டு வாழ்பவர்களையும் பெருந்தோட்டங்களை சாராத மாவட்டங்களில் தங்களை இந்தியத் தமிழர்கள் என்ற இன அடையாளத்திற்கு உட்படுத்துபவர்களையும் மலையக மக்கள் என்று வரையறுக்கலாம்.
மலையகத் தமிழர்களை இந்தியத் தமிழர், பெருந் தோட்டத் தமிழர், இந்திய வம்சாவளித் தமிழர், கண்டித் தமிழர் என்ற பெயர்களில் அழைக்கின்ற போதும் இன்று மலையகத் தமிழர் என்ற அடையாளம் முன்னிலை பெற்றுள்ளது. மலையகத் தமிழர்களை இந்திய வம்சாவளித் தமிழர்கள் என அழைப்பதே ஏற்புடையது எனக் கூறுபவர்கள் அதுவே பரந்த அடையாளத்தைப் பெற்றுக் கொடுக்க வல்லது என வாதிடுகின்றனர். எனினும் இப் பரந்த அடையாளத்தை மலையகத் தமிழர் என்ற அடையாளத்தின் ஊடாக பேண முடியும் எனவும் மலையகத் தமிழர்கள் எனும் அடையாளம் அவர்கள் இந்தியர் என்ற அந்நிய உணர்வை அவர்களிடத்தும் ஏனைய இலங்கை வாழும் மக்களிடத்திலும் ஏற்படுத்துவதாக இருக்கின்ற நிலையில் மலையக மக்கள் என அழைப்பதே முற்போக்கானது என வாதிடுகின்றனர். மலையக மக்கள் மீது திட்டமிட்ட ஒடுக்கு முறைகளுக்கு எதிரான மலையக மக்களின் அணிதிரள்வானது இலங்கை எமது நாடு, மலையகம், எமது பிரதேசம், நாம் ஒரு இன சமூகம் என்ற தேசிய உணர்வு எழுச்சிக்கு காரணமாகியுள்ளது.
 அறுபதுகளில் மலையகம், மலைநாடு என்ற சொற்பிரயோகங்களும் மலையகத் தேசியத்தை மையப்படுத்திய சமூக அரசியற் செயற்பாடுகளும் தொடங்கி வளர்ச்சி பெற்றன. தற்போது மலையக மக்களிடத்து மட்டுமல்லாது இலங்கைத் தமிழர் மற்றும் முஸ்லிம்களிடையே மலையகம், மலையக மக்கள் என்ற சொற்கள் பயன்பாட்டில் உள்ளதோடு சிங்கள மக்களிடையேயும் இப் பதத்திற்கு சமமான பதமாக”கந்துகர தெமழ ஜனதாவ’ ,”கந்துரட தெமழ ஜனதாவ’ பதங்களும் ஆங்கிலத்தில்  க்ணீ இணிதணtதூ கஞுணிணீடூஞு, ஏடிடூடூ இணிதணtதூ கஞுணிணீடூஞு என்ற பதங்களும் நிலைபெற்றுள்ளன. எனவே, மலையகத் தமிழர் என்ற பதங்களும் நிலைபெற்றுள்ளன. எனவே மலையகத் தமிழர் என்ற அடையாளம் தேசிய அங்கீகாரத்தை நோக்கிய நகர்வு இடம்பெற்று வருகின்றமை கவனிக்கத்தக்கது. (மலையக தேசியம் பற்றிய பிரச்சினை பின்னர் கலந்துரையாடப்பட்டுள்ளது)
 2012 ஆம் ஆண்டு தொகை மதிப்பு திணைக்கள தகவல்களின் படி மலையக மக்கள் மொத்த சனத் தொகையில் 4.2% ஆவர். 1981, 2001 கணக்கெடுப்பின் படி 5.5%, 5.08% ஆகக் காணப்பட்டனர். 2001 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற சனத் தொகை கணக்கெடுப்புகளில் மலையகத் தமிழர்களின் கணிசமான தொகையினர் தங்களை இந்திய தமிழர் எனப் பதிவு செய்வதை விடுத்து இலங்கைத் தமிழர் எனப் பதிவு செய்துள்ளனர். இதே நிலைமை 2001 சனத் தொகை கணிப்பீட்டிலும் இடம்பெற்றது. சந்திரபோஸ் மற்றும் விஜேசந்திரன் ஆகியோரின் ஆய்வுகளின் படி 2001 ஆம் ஆண்டு தொகை மதிப்பீட்டு புள்ளி விபரங்களின் படி இந்திய தமிழர்கள் 855, 891 அல்ல என்றும் அதைவிட அதிகமாக உள்ளனர் எனக் கொள்ள வேண்டும்.
2012 ஆம் ஆண்டு சனத் தொகை மதிப்பீட்டிலும் இதேநிலை வெளிப்பட்டுள்ளது. நுவரெலியா, பதுளை மாவட்டத்தை தவிர்ந்த ஏனைய மாவட்டத்தைச் சேர்ந்த மலையக மக்கள் தம்மை இலங்கைத் தமிழர் எனப் பதிவு செய்யும் போக்கு அதிகமாக உள்ளது. இன ஒடுக்கு முறைக்கு உட்பட்டு வரும் இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, மொனராகலை, மாத்தறை, காலி ஆகிய மாவட்டங்களில் இப் போக்கினை வெகுவாக காணலாம். வட மாகாணத்தில் உள்ள மலையகத் தமிழர்கள் தங்களை இலங்கைத் தமிழர் என அடையாளப்படுத்தும் போக்கு இலங்கைத் தமிழர் வாழும் பிரதேசங்களில் ஒத்த கலாசாரத்தையும் ஒரே மொழியை பேசுவதாலும் மலையக மக்கள் தங்களை மலையகத் தமிழர் என்ற அடையாளத்தை விட்டு இலங்கைத் தமிழர் அடையாளத்தை எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் வட மாகாணத்திலும் மலையக தமிழராக தம்மை அடையாளப்படுத்தும் போக்கு இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 2012 குடிசன மதிப்பீட்டின் படி இது முல்லைத்தீவு 2.5 %, திருகோணமலை 1.7 %, கிளிநொச்சி 1.5%, வவுனியா 0.8%, மன்னார் 0.4 % ஆகும். மலையக மக்கள் நுவரெலியா மாவட்டத்தில் செறிந்து வாழ்கின்றனர். அவர்கள் அம் மாகாணத்தில் (53.2%) பெரும்பான்மையினராகக் காணப்படுகின்றனர். நுவரெலியா மாவட்டத்திற்கு அடுத்தபடியாக பதுளை மாவட்டத்தில் 18.4% காணப்படுவதோடு கண்டி, இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் கணிசமான மலையக மக்கள் வாழ்கின்றனர். ஏனைய மாவட்டங்களில் சிறிய எண்ணிக்கையான மலையக மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
 2012 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி மலையக மக்களில் 2,12,826 பேர் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஆவர். மலையக தொழிலாளர்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பதில் சிக்கல்கள் உள்ள நிலையில் மலைய மக்களின் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஏறக்குறைய 3 இலட்சத்து 50 ஆயிரம் பேரை தாண்டலாம். கணிசமான மலையகத்தவர்கள் முறைசாரா துறைகளில் நகரங்களில் பணியாற்றுகின்றனர். ஆடைத் தொழிற்துறையில் பல மலையக இளைஞர், யுவதிகள் பணிபுரிவதோடு பணிப் பெண்களாக உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் தொழில் செய்கின்ற நிலை மலையகத்தில் காணப்படுகின்றது. அரச துறையில் ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு இருப்பதோடு ஏனைய அரச தொழில்களை செய்பவர்கள் மிகவும் குறைவாகவுள்ளனர். உயர் தொழில்களில் ஈடுபடுபவர்கள் குறைவானவர்களே. வர்த்தகத்திலும் சுய தொழில்களிலும் ஈடுபடும் சிறு பிரிவினரும் மலையக மாவட்டங்களில் உள்ளனர். இவர்கள் மலையகத்தில் நடுத்தர வர்க்கமாகவும் எழுச்சி பெறும் வர்க்கமாகவும் உள்ளனர்.
எனவே, மலையகச் சமூகம் என்பது பெருந்தோட்டத் தொழிலாளர்களை அதிகமாகவும் ஏனைய வகைத் தொழிலாளர்களையும் உள்ளடக்கிய சிறு எண்ணிக்கையுடைய நடுத்தர வர்க்கத்தையும் எழுச்சியுறும் நடுத்தர வர்க்கத்தையும் கொண்டுள்ளமையை அறியலாம்.
பிரித்தானியர் இலங்கையில் ஏற்படுத்திய மாற்றங்களும் மலையகத் தொழிலாளர்கள் வருகையும் 
ஒட்டுமொத்த இலங்கை சமூகக் கட்டுமானத்தில் பிரித்தானியரின் வருகை ஏற்படுத்திய தாக்கத்தை இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி என்ற கட்டுரையில் கார்ல் மார்க்ஸ் பின்வருமாறு விளக்குகிறார்.
“இங்கிலாந்து இந்திய சமுதாயத்தின் முழுக் கட்டுமானத்தையும் தகர்த்து விட்டது, அதேபோதில் புத்தமைப்புக்கான அறிகுறி எதுவும் இதுவரை காட்டப்படவில்லை. இவ்வாறு புதிய உலகத்தை பெறாது பழைய உலகத்தை இழந்து நிற்கும் நிலை….’ இலங்கையைப் பொறுத்தவரையில் இங்கிலாந்து ஆட்சியாளர்கள் இலங்கையில் நிலவிய நிலமானிய சமூகப் பொருளாதார கட்டமைப்பின் மீது முதலாளித்துவ உற்பத்தி முறையினைத் திணித்தனர். அதன் விளைவுகளும் மார்க்ஸ் குறிப்பிட்டது போன்றே அமைந்திருந்தன. இத் திணிப்பின் மூலம் மார்க்ஸ் குறிப்பிட்டது போன்ற இலங்கையில் பிரிட்டிஷார் புத்தமைப்பை உருவாக்காவிட்டாலும் அதன் உடனடி விளைவுகளில் முதன்மையான ஒன்றாக பெருந்தோட்டங்களின் உருவாக்கம் அமைந்தது.
இந்திய நிலமானிய முறைக்குள் கொலனிய முதலாளித்துவ உற்பத்தி முறையை பிரிட்டிஷ் காலனியவாதிகள் முழு மூச்சுடன் திணித்தமையின் விளைவும் இந்திய சமூகத்தில் நிலவிய சாதியக் கட்டமைப்புச் சேர்ந்த இந்தியர்களை இந்தியாவைக் கடந்து தமது வாழ்வை நிலை நிறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளியிருந்தது. பிரிட்டிஷ் காலனியவாதிகள் தமது காலனித்துவ முதலாளித்துவ உற்பத்தி முறையை ஏனைய நாடுகளில் ஸ்தாபித்த போது அந்தந்த நாடுகளின் பிரத்தியேக நிலைமைகளையும் தமது தேவைகளையும் கணக்கிற் கொண்டு தொழிலாளர்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து கொண்டனர். 1834 ஆம் ஆண்டில் அடிமை முறை ஒழிக்கப்பட்டமையினால் ஆபிரிக்க கறுப்பின நீக்ரோக்களைத் திரட்டிக் கொள்ள முடியாதிருந்தது. இந்நிலையில் பிரிட்டிஷாருக்கு இந்தியாவே பல வழிகளிலும் இலாபகரமாக தொழிலாளர்களை வழங்கக் கூடிய நாடாகக் காணப்பட்டது. இலங்கையில் தென்னிந்தியர்கள் தொழிலாளர்களாக இறக்குமதி செய்யப்பட்டதன் வரலாற்று அடிப்படை இதுவேயாகும்.
 இலங்கை பிரித்தானியர் ஆட்சிச் காலத்தில் ஐந்து மாகாணங்களாக பிரிக்கப்பட்டு ஒரே ஆட்சி முறையின் கீழ் கொண்டு வரப்பட்டதுடன், 1833 கோல்புருக்  கமருன் ஆணைக்குழுவின் அரசியல் திருத்தங்கள் இலங்கையில் நிலவுடைமை உற்பத்தி முறையை தகர்த்து முதலாளிய விவசாய உற்பத்தி முறைக்கு ஏற்றவகையில் சட்ட, சமூக அரசியல் கட்டுமானங்களை திணித்தது. 1830 களில் கோப்பி பயிர்ச் செய்கை புகுத்தப்பட்டதும் ஐரோப்பிய மூலதனம் உட்புகுந்தது. கூலித் தொழில் அதிகரித்தது. நவீன போக்குவரத்து முறையும் வர்த்தகமும் விருத்தியாயிற்று. நிலமானது சந்தையில் வாங்கவும் விற்கவும் கூடிய பண்டமாகியது. சுருங்கக் கூறின் பெருந்தோட்ட பொருளாதாரத்திற்கான அடித்தளம் இக் காலத்தில் இடப்பட்டது. (ஜெயவர்தன, 2011) இக் காலத்தில் பெருந்தோட்ட விவசாயத்தை தவிர சாராயக் குத்தகை, நிலங்களை கொள்வனவு செய்து பெரும் சொத்துடையவராதல் எனும் அடிப்படையில் முதலாளித்துவ எழுச்சி தொடங்கியது. அதாவது  இந்த மூன்று அம்சங்களினூடாக முதலாளித்துவ முறையை உறுதிப்படுத்த தேவையான மூலதனத் திரட்சி ஏற்படலாயிற்று.
கோப்பிப் பயிர்ச் செய்கையின் ஆரம்பத்தோடு இலங்கைக்கு இந்தியர்களின் வருகை இதற்கு முன் நிலவிய வர்த்தக நோக்கிலான வரவில் இருந்து வித்தியாசப்படுகிறது. இலங்கையின் சிங்கள விவசாயிகள் பிரிட்டிஷாரின் பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்கு விரும்பவில்லை என்பதோடு வெல்லஸ்ஸ கலகத்துக்குப் பின்னர் பிரித்தானியர் சிங்கள விவசாயிகளை வேலைக்கு அமர்த்தவும் விரும்பவில்லை. எனவே வெள்ளைப் பெருந்தோட்ட முதலாளிகளுக்குப் பணிந்து போகக் கூடிய கிரமமான உழைப்பாளர் கூட்டம் ஒன்று தேவைப்பட்டது. 1839 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியத் தொழிலாளர்கள் பெருந்தோட்டங்களில் தொழில் செய்ய வரவழைக்கப்பட்டனர். 1839 ஆம் ஆண்டு 2432 தொழிலாளர்கள் இலங்கைக்கு வந்தனர். 1838 1843 இற்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 130 கோப்பி பெருந்தோட்டங்கள் திறக்கப்பட்டன. 1846 அளவில் அது 500 ஆக அதிகரித்தது. 1841 1848 இற்கு இடைப்பட்ட காலத்தில் 265, 467  ஆண்கள், 5155 பெண்கள், 2250 சிறுவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களில் 25 வீதமானவர்கள் (70,000 பேர்) பல்வேறு காரணங்களினால் இறந்துள்ளனர். அதேநேரம் 129, 360 ஆண்கள், 2639 பெண்கள், 1519 சிறுவர்கள் மீண்டும் இந்தியாவிற்கு திருப்பியுள்ளனர். இக் கால கட்டத்தில் சுமார் 70 ஆயிரம் கோப்பித் தோட்டத் தொழிலாளர்கள் இருந்துள்ளனர்.
 எனவே, கோப்பி பயிர்ச் செய்கையின் போது இந்திய தொழிலாளர்கள் நிரந்தரமாக இலங்கையில் இருந்து தொழில் செய்யவில்லை என்பது புலனாகிறது. கோப்பி பயிர்ச் செய்கையில் தொடர்ச்சியான பாரமரிப்பு தேவை இன்மையின் காரணமாக பருவகால தொழிலாளர்களே தேவைப்பட்டனர். 1845 இங்கிலாந்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அதனிலும் முக்கியமாக 1869 காலத்தில் கோப்பி பயிர்களுக்கு ஏற்பட்ட பங்கசு தாக்கம் கோப்பி பயிர்ச் செய்கையை வெகுவாகப் பாதித்தது. இந்தச் சூழ்நிலையில் தேயிலை ஒரு முக்கிய பயிராக மாற்றமடைந்ததுடன் பின்னர் இறப்பரும் முக்கிய பெருந்தோட்ட பயிராக மாறியது. ஸ்கொட்லாந்துகாரரான ஜேம்ஸ் டெய்லரால் 1867 ஆம் ஆண்டு 1000 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட தேயிலை பயிர்ச் செய்கை 1875 ஆம் ஆண்டில் 1080 ஏக்கர்களாக இருந்து. 1890 அளவில் 22000 ஏக்கர்களாக உயர்ந்தது. 1930 இல் 478,000 ஏக்கர்களாக அதிகரித்தது. 1905 இல் 25,000 ஏக்கர்களில் மாத்திரம் பயிரிடப்பட்டிருந்த இறப்பர் 1910 இல் ஆகின்ற போது 188,000 ஆகவும் 1920 இல் 397,000 ஏக்கர்களாகவும் அதிகரித்தது.
இந்த இரு பயிர்ச் செய்கைகளின் பரப்பு அதிகரிப்புக்கு ஏற்ற வகையில் தொழிலாளர்கள் தென்னிந்தியாவில் இருந்தே கொண்டு வரப்பட்டனர். தேயிலை, இறப்பர் தோட்டங்களில் வேலை செய்ய வந்த தொழிலாளர்கள் நிரந்தரமாக இலங்கையில் தங்கி வாழ வரவில்லை என்ற போதும் தேயிலை, இறப்பர் செய்கைகளுக்கான பராமரிப்பு மற்றும் விளைச்சலின் தொடர்ச்சித் தன்மை காரணமாக நீண்ட நாட்கள் தங்கி வேலை செய்யும் நிலை ஏற்பட்டது. 1877 ஆம் ஆண்டு 5000 தொழிலாளர்கள் இருந்த நிலையில் 1911 இல் 530,000 ஆகியது. இது 41 இலட்சம் மக்கள் தொகை கொண்ட அப்போதைய இலங்கையின் மொத்த சனத் தொகையில் 12.9 வீதமாகும். 1921 இல் இத் தொகை 602,000 ஆக அதிகரித்தது. 1931 ஆம் ஆண்டாகின்ற போது மலையக மக்களின் சனத்தொகை 8,18,500 ஆகும். இதில் சுமார் 86 வீதமானவர்கள் அதாவது 6,92,520 பேர் தோட்டத் தொழிலாளர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பெருந்தோட்டங்களுக்குக் குடியேறிய மலையக மக்கள் இலங்கையின் பொது அரசியல் கட்டமைப்புகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தனர். அதாவது கிராமங்களில் இருந்து விடுபட்டு பெருந்தோட்டங்கள் தனியான இராச்சியத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தன. வேறு வகையில் கூறுவதாயின் “தீவுக்குள் ஒரு தீவு‘ என்ற வகையில் அது அமைந்திருந்தது. இந்த அமைப்பு முறை புதிய முறையில் அமைந்த அடிமைத்தனத்தை நோக்கியதாய் அமைந்தது. இந்த வாழ்க்கை முறையோடு இம்மக்கள் இந்தியாவுடனான தமது உறவுகளை அறுக்காது பேணி வந்தனர். வந்தவர்கள் இந்தியாவிற்கு திரும்பச் செல்வதும் புதியவர்கள் வருவதுமாக இருந்த அதேநேரம் வேறு வழியின்றி தொடர்ச்சியாக வாழ்வதற்கான சூழலுக்கும் தள்ளப்பட்டிருந்தனர். இதனூடாக மலையகத் தமிழர்கள் இலங்கையில் நிரந்தரமாக நிலைபெறும் போக்கும் குறிப்பாக 1920 40 வரை ஏற்படலாயிற்று.
1931 ஆம் ஆண்டு வரையான இந்தியர்களின் அரசியலும் நடேசய்யரின் பணிகளும் 
டொனமூர் சீர்திருத்தத்திற்கு முற்பட்ட காலத்தில் அரசியல் அதிகாரமானது பிரித்தானிய கொலனியத்தின் பிடிக்குள் முழுமையாக இருந்த நிலையில் சுதேச மேட்டுக்குடிகள் தங்களை பிரதிநிதித்துவம் செய்து கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. வாக்குரிமை படித்த, ஒரு குறித்த வருமானமுடைய, சொத்துரிமையுடையவர்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டு இருந்தமையினால் கல்வியறிவற்ற, குறித்த வருமானம் அற்ற, சொத்தற்ற பொது மக்கள் அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டியிருந்தமை தெளிவாகிறது. இந்நிலையில் மலையக தமிழர், ஏனைய இனத்தவர் என்ற வேறுபாடின்றி நிலைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 1921 1924 வரை இந்திய வர்த்தகரான திரு. உ.எ. அஞீட்ச்டூடி சட்ட சபைக்கு நியமன உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தார்.
 1924 சட்ட சபை சீர்த்திருத்தத்தின் பிரகாரம் இரண்டு பேர் இந்தியர் சார்பாக தெரிவு செய்ய ஏற்பாடுகள் காணப்பட்டன. ஐ.ஙீ. பெரைரா (ஐ.ஙீ.ணீஞுணூஞுடிணூச்) மற்றும் மொஹமட் சுல்தான் ஆகிய இருவரும் தெரிவு செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் இந்திய வர்த்தகர்கள். ஆறு மாதங்களின் பின்னர் மொஹமட்  சுல்தான் இறந்தமையினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நடேசய்யர் தெரிவு செய்யப்பட்டார். மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் தொழிற் சங்க உரிமையை உறுதிப்படுத்த முன்னின்று பணியாற்றிய நடேசய்யர் தெரிவு செய்யப்பட்டமையானது இந்திய மேட்டுக் குடி வர்த்தகர்களின் அரசியலுக்கான போட்டியாக அமைந்திருந்தது. ஏ.ஈ. குண சிங்கவின் தலைமைத்துவத்தைக் கொண்டு செயற்பட்ட இலங்கைத் தொழிற் சங்கத்தின் முக்கிய செயற்பாட்டாளராகவும் அதன் பிரதித் தலைவராகவும் நடேசய்யர் இருந்த போதும் அச் சங்கத்தின் செயற்பாடுகளை மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களிடத்தில் கொண்டு செல்வதற்கான முனைப்பு இருக்கவில்லை. சிங்கள, தமிழ் மேட்டுக் குடித் தலைவர்களிடையே மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை இலங்கைச் சமூகத்தின் அங்கமாக ஏற்றுக் கொள்வதில் இருந்த மனத்தடையே இதற்குக் காரணமாகும்.
இதனால் நடேசய்யரின் தலைமையில் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தொழிற் சங்க ரீதியாக அணிதிரள்வதும் நகரத் தொழிலாளர்களுடன் தொழிலாளர் வர்க்க உணர்வுடன் இணைவதும் சிங்கள விவசாயிகளுடன் ஐக்கியத்தைப் பேணுவதனூடாக இலங்கைச் சமூகத்தில் ஓர் அங்கமாக மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நிலைமாற்றம் பெறுவதற்கான வாய்ப்பும் அன்று இழக்கப்பட்டிருந்தது.
1920 களில் ஆரம்பமான பொருளாதார மந்தநிலை காரணமாக ஏற்பட்ட வேலையில்லாப் பிரச்சினையின் போது தமது தொழிற் சங்கக் கொள்கை மற்றும் பெருந்தோட்ட மக்கள் நோக்கப்பட்ட விதத்தை இலங்கைத் தொழிற் சங்கத்தின் தலைவரான ஏ.ஈ. குணசிங்கவின் கீழ் வரும் கூற்று வெளிப்படுத்தி நிற்கின்றது.
தொழிற் கொள்கைகளுக்கும், தொழிற் சங்க தத்துவங்களுக்கும் இசைவாக தோட்டங்களில் வேலை செய்பவர்களைத் தவிர சகல இந்தியத் தொழிலாளர்களையும் எமது தொழிற்சங்கங்களில் சேர்த்திருந்தோம். ஆனால் 1929 ஆம் ஆண்டு வேலையில்லா பிரச்சினை எம்மை எதிர்கொண்ட போது நாம் எல்லா நிலைகளையும் மீளாய்வுசெய்ய வேண்டியவர்களாக இருந்தோம். வெளிநாடுகளில் இருந்து மக்களை அழைக்கவோ ஏறறுக்கொள்ளவோ முன்னர் எமது நாட்டுப் பிரஜைகளுக்கு வேலை வழங்கப்பட வேண்டும் எனத் தீர்மானித்தோம் (ஹன்சாட் 10 டிசம்பர் 1948 ).
ஏ.ஈ. குணசிங்க தனது இனவாத நிலைப்பாட்டிற்குரிய பொருளாதார அடிப்படையை இவ்வாறு முன்வைத்தார். மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நகரத் தொழிலாளர்களிடம் இருந்து இவ்வாறு விலக்கி வைக்கப்பட்ட நிலையில் சிங்கள இனவாதத் தலைமைகளுக்குப் பெரும் வாய்ப்பாக அமைந்தது.
1931 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலமானது “இந்தியர்களின்‘ அரசியல் பிரவேசத்தை ஏற்படுத்துவதோடு மலையக மக்கள் தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் தாங்கள் அணிதிரளவும் நகர்ப்புற தொழிலாளர்களோடு தம்மை ஐக்கியப்படுத்துவதற்கான வாய்ப்பையும் நடேசய்யரின் தொழிற் சங்கப் பணியும் சட்ட சபை பிரவேசமும் வழங்கின. எனினும் அன்றைய நகர்ப்புற தொழிற் சங்கத் தலைமைகளின் தடுமாற்றமும் இனவாத நிலைப்பாடுகளும் அதனை தோல்வியடைய செய்து விட்டன. இது 1920 களில் பிற்கூற்றில் மலையகத் தொழிலாளர்களின் அரசியல் உரிமைகளுக்கு எதிராக இனவாத  சிங்கள தலைவர்களினால் முதன் முதலாக முன்வைக்கப்பட்ட இனவாத பிரசாரங்கள் பின்னர் செயல்வடிவம் பெறுவதற்கான நிலைமையை ஏற்படுத்தி இருந்தமை கவனிக்கத்தக்கது.
 இந்திய வர்த்தக மேட்டுக்குடியினர் சட்ட சபையில் அங்கம் வகிப்பதன் ஊடாக இந்திய மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு புறமும் நடேசய்யரின் தொழிற்சங்க பணியோடு தொழிற் சங்கப் பாதை என்ற மற்றொரு புறமும் வெளிப்பட்டன. நடேசய்யர் தனது சட்ட சபை அங்கத்தினர் என்ற பதவியை மலையகத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கே பயன்படுத்தி வந்தமை கவனிக்கத்தக்கது.
மலையகத் தமிழரின் அரசியல் எழுச்சியின் படிகள் : 
1931 1947
மலையகத் தமிழரின் அரசியல் தொழிற் சங்க வரலாற்றில் 1931 47 காலப் பகுதியானது எழுச்சியான காலமாகும். பிரித்தானியர் மலைய மக்களை பிரஜைகளாக அங்கீகரித்து 1931 டொனமூர் சீர்திருத்தத்தின் மூலம் வாக்குரிமை வழங்கியமை இந்த எழுச்சிக்கான உந்துதலாக அமைந்திருந்தது. 1930 கள் ஆகின்ற போது மலையகத் தொழிலாளர்களை அரை அடிமை முறையிலான கங்காணி முறையில் இருந்து விடுவிப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் அமுலாக்கப்பட்ட நிலையில் கங்காணி முறை வலுவிழந்தமையும் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் நடேசய்யரின் தொழிற் சங்கப் பணி, தொழிற் சங்க செயற்பாடுகளையும் தொழிற் சங்க அடிப்படையிலான அணிதிரள்வையும் சாத்தியப்படுத்தும் சூழலை ஏற்படுத்தி இருந்தன. லங்கா சமசமாஜக் கட்சி 1935 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு அது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டங்களை முன்னெடுத்து வந்தது. இது சிங்கள மேட்டுக்குடி தலைவர்களிடத்தில் அச்சத்தை தோற்றுவித்தது. 1920 களில் ஏற்பட்ட இந்திய எதிர்ப்பு என்பது அரச உத்தியோகங்களையும் வர்த்தகர்களையும் மையப்படுத்தி இருந்த நிலையில் மலையக தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்க செயற்பாடுகள் காரணமாக அது அவர்கள் பக்கமும் திரும்பியது. இந்திய எதிர்ப்பின் விளைவாக இந்திய தலையீடுகளும் ஏற்படலாயின. மலையகத் தோட்டத் தொழிலாளரின் அரசியல் தொழிற்சங்க எழுச்சியை அவதானித்த சிங்கள மேட்டுக் குடி அரசியல் தலைமைகள் அதனைத் தமது அரசியலுக்கான அச்சுறுத்தலாகக் கருதி வந்தனர்.
சர்வசன வாக்குரிமையும் மலையக மக்களின் அரசியலும் 
மலையக மக்களின் அரசியல் வரலாற்றில் சர்வசன வாக்குரிமைக்கு உரித்துடையவர்களாக்கப்பட்டமை மிகவும் முக்கிய விடயமாகும். டொனமூர் சீர்திருத்தங்களுக்கு முன்னர் குடித் தொகையில் 4% மக்களே வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்தனர். வாக்குரிமைக்கு தகுதியாக, கல்வி, சொத்து, வருமானம் இருந்தமையினால் ஏனைய பொது மக்களைப் போலவே மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை பெற்றிருக்கவில்லை. எனினும் டொனமூர் குழு நாட்டில் நிலையான அக்கறையுடையோர் அல்லது நிலையாக வசிக்கும் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாக்குரிமையை சிபாரிசு செய்தது. இச் சிபாரிசுடன் பெண்களுக்கும்  மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் வாக்குரிமை வழங்குவது பற்றிய பிரச்சினை பலத்த வாதப் பிரதிவாதங்களுக்கு உட்பட்டது.
மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை வழங்குவதன் அபாயத்தை டீ.எஸ். சேனாநாயக்க பின்வருமாறு குறிப்பிடுகின்றார் :
 “ சிங்களவர் துரதிர்ஷ்டம் பிடித்த சமூகத்தினர், அவர்களுடைய தாராளமனப்பான்மை மறைக்கப்பட்டு தவறாக விளங்கப்பட்டுள்ளனர். மற்றவர்களின் நன்மைக்காகத் தம்மை ஒறுப்பதற்கு சம்மதிக்கும் சிங்களவர் போன்று வேறு ஒரு சமூகம் இருக்கும் என நான் எண்ணவில்லை‘. இந்தியர்களுக்கு ஒரு பெரிய நாடு உண்டு. இந்த நாடு எங்களுக்கு வேண்டும் (ஹன்சாட், 8 நவம்பர் 1928).
 இ.ஙி.ஙி. கன்னங்கரா இலங்கையின் நிலையான மக்களை பாதிக்கக்கூடிய இந்திய அச்சுறுத்தல் பற்றிக் கூறி இந்தியரின் வாக்குரிமையை எதிர்க்காதோர் துரோகிகள் என மறைமுகமாக குறிப்பிட்டார். மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை வழங்குவது பற்றிய பிரச்சினை வர்க்கக் கண்ணோட்டத்துடனான பார்வையை அரசாங்க சபையின் உறுப்பினரான வி.டி.எஸ். விக்கிரம நாயக்க வெளிப்படுத்தினார். அது பின்வருமாறு அமைந்திருந்தது.
கொழும்பில் வசிக்கும் இந்தியரை விட தோட்டத்து கூலிக்கு நான் மிகவும் அஞ்சுகின்றேன். இந்தியத் தொழிலாளி காலையில் 6 மணிக்கு வேலைக்குப் போய் மாலை 6 மணிக்கு தனது கூலி லயன்களுக்குத் திரும்புகிறான். இத் தீவில் நிகழ்வன பற்றி அவனுக்கு என்ன தெரியும்? எனவே அரசியல் விடயங்களில் அவனுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்றே கூறுவேன். தொழிற் கட்சிக்கு ஆதரவான சிறுபான்மை அரசாங்க சபை உறுப்பினர்கள் இனவாதத்தின் அபாயம் குறித்து எச்சரித்தனர். நடேசய்யர், ஏ. மகா தேவா ஆகியோர் இந்தியர்கள் சமமான உரிமையுடன் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தனர். தொழிற் கட்சியில் இல்லாத டீ.பி. ஜாயா மலையக மக்களின் வாக்குரிமையை ஆதரித்து பின்வருமாறு கூறினார். சிங்களத் தொழிலாளி தனது இந்தியச் சகோதரனுக்கு வாக்குரிமையளிப்பதை தடுக்கமாட்டான்.
சர்வசன வாக்குரிமை தொடர்பாக இடம்பெற்ற அனைத்து விவாதங்களையும் கருத்துகளையும் ஆராய்ந்த பின்னர் டொனமூர் குழு முடிவில் இலங்கையைத் தாயகமாகக் கொண்டோர் அல்லது ஐந்து வருடங்கள் வாழ்ந்து கல்வி, சொத்து, வருமானத் தகைமை கொண்டோர் அல்லது ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக வசித்து மேலும் நிலையாக வசிக்கும் நோக்கமுடையோருக்கு வழங்கப்படும் குடியுரிமை சான்றிதழைப் பெற்றோர் ஆகியோருக்கு வாக்குரிமை வழங்குவதற்கு ஏற்பாடுகளை செய்தது.
இதில் மூன்றாவது வகை சார்ந்து மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் வாக்குரிமையை பெறுவதற்கான உரிமையைப் பெற்றிருந்த போதும் நிரந்தர பதிவு பற்றிய சான்றிதழை பெற வேண்டியிருந்தது. மலையகத் தோட்டங்களில் காணப்பட்ட பெருந்தோட்ட இராச்சிய முறை மற்றும் அக்காலத்தில் மலையக மக்கள் மத்தியில் நிலவிய குறைந்த எஸித்தறிவு, அரசியல் பிரக்ஞையின்மை ஆகியன காரணமாக நிரந்தர பதிவுச் சான்றிதழ் பெற்று வாக்குரிமை பெறும் போக்கு மிகக் குறைவாகவே காணப்பட்டது. இது எதிர்பார்க்கக் கூடியதே. இதனால் 1931 ஆம் ஆண்டில் இந்தியர்கள் மொத்தமாக 8, 18,500 பேரும் அதில் மலையகத் தோட்டத் தொழிலாளர் கள் 602,000 பேர் இருந்த போதும் சுமார் 100,000 பேர் மட்டுமே மலையக மக்கள் என்ற வகையில் வாக்குரிமை பெற்றிருந்தனர். எனவே, குறைவானவர்களே வாக்குரிமைக்கு விண்ணப்பித்து வாக்குரிமை பெற்றிருந்தமை தெளிவு. முதலில் இவ்வாறு குறைவான வாக்காளர்களே மலையகத் தோட்டத் தொழிலாளர்களிடம் காணப்பட்ட போதும் இது பின்னைய காலங்களில் மலையகத்தில், அரசியல் தொழிற் சங்க பிரக்ஞைகளுக்கு ஆதாரமாக அமைந்திருந்தது. மிகவும் முக்கியமாக அவர்கள் தங்களை இலங்கை பிரஜைகள் என்பதனை மேலும் உறுதிப்படுத்துவதற்கான அம்சமாக இது அமைந்திருந்தது.
வாக்குரிமையின் விளைவுகள்
சர்வசன வாக்குரிமையானது இந்திய மேட்டுக்குடி நகர வர்த்தகர்களின் ஆதிக்கம் நிலவிய அரசியல் அதிகாரத்தை ஜனநாயக மயப்படுத்துவதற்கும் அதனூடாக மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் முக்கிய இடத்தினைப் பெற்றுக் கொள்வதற்கும் உதவியது. இந்நிலையானது இந்திய மேட்டுக்குடித் தலைவர்கள் மலையகத் தோட்டத் தொழிலாளர்களிடத்தில் அரசியலை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியமை மலையகத்தில் இன்று வரை நிலவும் அரசியலை விளங்கிக் கொள்வதற்கான அடிப்படையாக அமைந்துள்ளது. நடேசய்யரின் தொழிற்சங்க செயற்பாடுகளும் லங்கா சமசமாஜக் கட்சியின் தொழிற் சங்கமான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் யூனியன் செயற்பாடுகளும் தொழிற் சங்க உரிமைப் போராட்டங்களின் தொடர்ச்சியாக அமைந்திருந்தன.
 1931 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் (தொகுதிவாரித் தேர்தல் முறையில் 50 உறுப்பினர்கள் அரசாங்க சபைக்கு தெரிவு செய்யும் தேர்தல் ) அட்டன் தொகுதியில் இருந்து பெரிசுந்தரமும் தலவாக்கலை தொகுதியில் இருந்து எஸ்.பி. வைத்திய லிங்கமும் இந்தியர்களின் சார்பாக தெரிவு செய்யப்பட்டனர். அதேநேரம் பண்டாரவளை தேர்தல் தொகுதியில் இருந்து ஏ.பெலோஸ் கோர்டன் என்ற பெருந்தோட்ட உடைமையாளர் அரசாங்க சபைக்கு தெரிவாகினார். இத் தேர்தலில் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் மிகவும் குறைவாகவே வாக்குரிமையை பெற்றிருந்த நிலையில் அவர்களின் செல்வாக்கு குறைவாகவே  இருந்தது. எனினும், இத் தேர்தலானது மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் அரசாங்க சபையில் பிரதிநிதித்துவம் செய்வதற்கான ஆரம்பத்தை ஏற்படுத்தி இருந்தது. இக் காலத்தில் மேட்டுக்குடி வர்த்தகரான பெரி சுந்தரம் தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டது மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்குக் கிடைத்த வரப் பிரசாதம் எனக் கூறமுடியாது. அது சிங்கள, தமிழ் மேட்டுக்குடி அரசியல் ஒருமைப்பாட்டின் வெளிப்பாடு மட்டுமே.
1936 ஆம் ஆண்டு தேர்தலின் போது இந்திய வம்சாவளியினருள் வாக்குரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை 1, 45, 000 ஆக அதிகரித்தது. இத் தேர்தலில் மேற்கூறிய இருவரும் மீண்டும் தெரிவு செய்யப்பட்ட அதேசமயம் அப்போதைய இடதுசாரித் தலைவர்களான என்.எம். பெரேரா, ருவன்வெல்ல தொகுதியிலும் பிலிப் குணவர்த்தன, அவிசாவளை தொகுதியிலும் வெற்றி பெறுவதற்கு மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகள் பெருமளவு பங்கு வகித்தன. இக்கால கட்டத்தில் நடேசய்யரின் தலைமையிலான இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சம்மேளனம் இடதுசாரிகளை ஆதரித்து வந்தது. அது இடதுசாரிகளையும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களையும் இணைத்ததுடன் மலையக மக்கள் இடதுசாரி அரசியலில் ஈடுபடுவதையும் சாத்தியமாக்கியது.
வாக்குரிமை பறிப்பின் தொடக்கம் 
மலையக மக்களின் வாக்குரிமை உறுதிப்படுத்தப்பட்டிருந்த பின்னணியில் மலையக மக்கள் உள்ளூராட்சி சபைகளுக்கு வாக்களிக்கும் உரிமையை இல்லாதொழிக்கும் சட்டம் எஸ். டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்காவினால் நிறைவேற்றப்பட்டது. அரசாங்க சபைக்கு வாக்களிக்கும் உரிமை பெற்ற மக்களுக்கு உள்ளூராட்சி சபைகளுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டமையானது முரணிலையாக இருந்த போதும் மலைய மக்கள் தொடர்ந்தும் தோட்டங்களுக்குள் சிறைப்பட்டிருப்பதனை உறுதிப்படுத்தி, கிராமப்புற சிங்கள விவசாயிகளுடனும் நகர்ப்புற தொழிலாளர்களுடனும் உறவு கொள்வதைத் தடுப்பதற்காகவே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இன்று வரை தோட்டங்கள் கிராமங்கள் ஆக்கப்படாமல் இருக்கின்ற நிலையில் இந்தச் சட்டம் மலையக மக்களின் அரசியல் சமூக வாழ்வியலில் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தினை உணரலாம்.
இந்தச் சட்டத்தை எதிர்த்து இந்திய தலைவர்களோ இடதுசாரி தலைவர்களோ போராட்டம் எதனையும் முன்னெடுக்கவில்லை.
இலங்கை இந்திய காங்கிரஸ் யாருக்கானது ? 
இருபதுகளின் பிற்கூற்றில் இருந்து இந்திய வம்சாவளி வர்த்தகர்களுக்கும் நடுத்தர வர்த்தகர்களுக்கும் காணப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக இந்தியா அவர்களின் மீது அக்கறை கொண்டிருந்தது. அந்த அக்கறையின் வெளிப்பாடாக 1939 ஜூலை 25 ஆம் திகதி நேரு இலங்கைக்கு வருகை தந்ததோடு அதன் பயனாக இலங்கை இந்திய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது. நேரு நடேசய்யரை சந்திக்க விருப்பம் கொண்டிருந்த போதும் நடேசய்யர் அவரைச் சந்திக்க விரும்பவில்லை. நடேசய்யர் மலையகத் தமிழர்களை இலங்கைச் சமூகத்தின் பிரிவாக கண்டமையே இதற்குக் காரணமாகும். இலங்கை இந்தியர் காங்கிரஸ் யாரை பிரதிநிதித்துவம் செய்தது என்பதும் அதன் வர்க்கச் சார்பினையும் அது எந்த அமைப்புகளை ஒன்றிணைத்து தோற்றம் பெற்றது என்பதில் இருந்து அறியலாம். பாரத் சேவா சங்கம் நாடார் மகாஜன சங்கம், பாண்டிய வேளாளர் சங்கம், ஹரிஜன சேவா சங்கம் என்பவற்றின் இணைவே இலங்கை இந்தியர் காங்கிரஸ். எனவே இலங்கை இந்தியர் காங்கிரஸ்  மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் நலனை பிரதிநிதித்துவம் செய்வதற்காக அமைக்கப்பட்டதல்ல என்பதை அறியலாம். இதன் முதல் தலைவராக இலட்சுமணச் செட்டியாரும் இணைச் செயலாளர்களாக ஏ. அஸீஸ் மற்றும் எச்.எம். தேசாயும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் கணிசமான எண்ணிக்கையினர் வாக்குரிமை பெறுவதற்கு தயாராக இருந்த நிலையில் இந்த அமைப்பு மலையகத் தோட்டத் தொழிலாளர்களிடையே அரசியலை நிலை நாட்டுவதில் உள்ள முக்கியத்துவத்தை உணர்ந்ததன் பயனாக 1940 மே மாதத்தில் இலங்கை இந்தியர் தொழிலாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டதுடன் அதன் தலைவராக பெரிசுந்தரம் நியமிக்கப்பட்டார். மலையகத் தொழிற்சங்க உரிமைகளுக்காக நடேசய்யர் அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சம்மேளனம் ஊடாகவும் சட்ட சபையிலும் மேற்கொண்ட சிறப்பான பணியினால் பெறப்பட்ட வெற்றியின் அறுவடையை நடேசய்யரின் அமைப்பினால் பெற்றுக் கொள்ள முடியாமல் போனது. இ. இ.தொழிலாளர் காங்கிரஸ் மலையகத் தோட்டத் தொழிலாளர்களிடையே வேகமாக வளர்ச்சியுற்றது. இச் சங்கம் ஆரம்பித்த ஒரு வருடத்திற்குள் தனது உறுப்பினர் எண்ணிக்கையை ஒரு இலட்சம் வரை அதிகரித்துக் கொள்வதற்கு சிங்கள வலதுசாரி தலைவர்களிடம் காணப்பட்ட இனவாத மனப்பான்மை முக்கிய காரணமாக இருந்தது. அத்தோடு நடேசய்யர் தொழிற் சங்கம் ஒன்றை பரந்த அளவில் கட்டுவதற்கான நிதி மற்றும் ஆள் பலத்தைக் கொண்டிருக்காமையும் கருத்திற் கொள்ள வேண்டிய காரணியாகும்.  1932 இல் நடேசய்யருடன் முரண்பட்டு கண்டிக் கிளையின் தலைவர் வீ.பி. நாதன் அ. இ. தோட்டத் தொழிலாளர் சம்மேளனத்தில் இருந்து நீங்கியமை அச்சங்கத்தின் பின்னடைவுக்கு காரணமானது.
 இலங்கை இந்திய தொழிலாளர் காங்கிரஸில் இருந்த இந்தியாவை வாழ்விடமாகக் கொண்ட இந்திய வர்த்தகர்கள் தமது மேட்டுக்குடி அரசியலை நிலை நிறுத்த மலையகத் தோட்டத் தொழிலாளர்களிடத்தில் அரசியலை முன்னெடுத்தனர். மறுபுறம் இந்தியாவுடன் உறவை பேணி இலங்கையில் நிலச் சொந்தக் காரர்களாகவும், தோட்ட உடைமையாளர்களாகவும், வணிகர்களாகவும் இருந்தவர்களும் மலையக மக்களிடத்தில் அரசியலை முன்னெடுத்தனர். இவர்கள் அக் காலத்தில் நிலவிய இந்திய எதிர்ப்பை மையப்படுத்தி மலையகத் தொழிலாளர்கள் மத்தியில் இந்திய தேசிய வாதம் என்ற அடிப்படையில் அரசியலை முன்னெடுத்தனர் என்பதோடு அதற்கான தேவையும் இயலுமையும் அவர்களுக்கு இருந்தமை கவனிக்கத்தக்கது.
1939 ஆம் ஆண்டு லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டு அக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமையானது இ.இ. தொழிலாளர் சங்கம் தனது இந்திய தேசிய வாதத்தை முன்னெடுப்பதற்கான சாத்தியப்பாட்டை மேலும் அதிகரித்திருந்தது. இ.இ. தொழிலாளர் சங்கம் பண பலத்தை கொண்டிருந்ததோடு தோட்டப்பகுதியில் இருந்த சாதிமுறையை பயன்படுத்தி கங்காணிமார்களின் துணையுடன் தோட்டத் தொழிலாளர்களை தமது பிடிக்குள் கொண்டு வந்தனர். இந்தப் பிடிக்குள் அகப்பட்ட மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தங்களின் உழைப்புக்கும் பெருந்தோட்ட உடமையாளர்களின் மூலதனத்துக்கும் இடையில் நிலவிய அடிப்படை முரண்பாட்டையும் இலங்கையின் மக்களாக நிலை கொள்வதையும் மறந்து தேசிய வாதம் எனும் இனவாதப் போக்கிற்கும் உட்படுத்தப்பட்டனர். இக் காலத்தில் இ.இ. தொழிலாளர் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டங்களை முன்னெடுத்த போதும் லங்கா சமசமாஜ கட்சியினாலேயே பாரிய வேலை நிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
1940 களில் லங்கா சமசமாஜ கட்சியின் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை அதன் தொழிற்சங்க போராட்ட அரசியல் காரணமாக பெற்றுக் கொண்டிருந்தது. Mச்ணூடு அணtடணிணதூ ஞணூச்ஞிஞுஞ்டிணூஞீடூஞு  என்ற வெள்ளையர் ஒருவர் இடதுசாரி அரசியலை சமசமாஜக் கட்சியில் சேர்ந்து இலங்கையில் மேற்கொண்டு வந்தார். மலையக மக்களின் போராட்ட வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றுக் கொண்ட 1942 ஆம் ஆண்டு முல்லோயா தோட்டப் போராட்டம் சமசமாஜ தொழிற் சங்கத்தினால் தலைமை தாங்கப்பட்டதாகும்.
இக் காலப் பகுதியில் ஒரு புறம் இலங்கை இந்திய காங்கிரஸ் தனது இந்திய இலங்கை தேசியவாதம் கலந்த தொழிற் சங்கவாதத்தை முன்னெடுத்தது. இச் சங்கத்திலும் தொழிலாளர்களின் போராட்ட குணங்கள் தொழிற் சங்க போராட்டங்களின் போது வெளிப்பட்டன. மறுபுறம் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இடதுசாரி தொழிற் சங்க பாரம்பரியத்திற்குள் தம்மை உட்படுத்திக் கொள்ளும்  போக்கு லங்கா சமசமாஜக் கட்சியின் தொழிற் சங்க செயற்பாடுகளின் ஊடாக ஏற்படலானது.
சோல்பரி குழுவும் மலையக மக்களும்
இரண்டாம் உலக மகாயுத்தத்தின் காரணமாக 1941 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய அரசாங்க சபைத் தேர்தல் இடம்பெறவில்லை. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் எழுச்சி, பிரித்தானியாவில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான நிலைமைகள், பிரித்தானிய தொழில் கட்சி அரசாங்க காலனித்துவ எதிர்ப்புக் கொள்கைகள் ஆகியவை இலங்கை டொமினியன் அந்தஸ்து பெறும் சூழலை ஏற்படுத்தி இருந்தன. இலங்கையின் அரசியல் சூழ்நிலைகளை பரிசீலித்த சோல்பரி ஆணைக்குழுவினர் ஆட்சியாளர்களிடம் வெளிப்பட்டிருந்த இனவாத போக்கினையும் டொனமூர் சீர்திருத்தத்தின் தொகுதிவாரி தேர்தல் முறை இப் போக்கினை போசிப்பதாக இருந்தமையை குறிப்பாக கணக்கிற் கொள்ளாது சிறுபான்மையினர் காப்பீடு என்ற அம்சத்துடன் தமது சிறுபான்மை இனங்களுக்கான பங்களிப்பை நிறுத்திவிட்டு சுதேச தலைவர்களுக்கு இம் மக்களின் தலைவிதியை தீர்மானிக்க வாய்ப்பளித்து விடைபெற்றனர். இதில் இலங்கையின் பிரஜைகள் யார் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பையும் சுதேச தலைவர்களுக்கு விட்டு விட்டுச் சென்றிருந்தமையும் கவனிக்கத்தக்கது. இது மலையக மக்களின் அரசியலை வேரறுக்கும் என சோல்பரி ஆணைக்குழுவினர் நினைத்திருக்க வாய்ப்பில்லை என்றபோதும் அதுவே நடந்தது.
சுதந்திர இலங்கையும் மலையக மக்கள் மீதான ஒடுக்கு முறைகளும் :
1947 1971
இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் பிரித்தானியர் இலங்கையில் முதலாளித்துவத்தை தமக்கு ஏற்றாற் போல் திணித்தமையின் விளைவாக பல்வேறு பிரச்சினைகள் வெளிப்பட்டிருந்தன. இதில் இனவாதம் ஒரு முக்கிய பண்பாக காணப்பட்டது. முதலாளித்துவ வர்க்கத்துக்கு தேவையான கூலித் தொழிலாளர்களை பண்ணையடிமைகளைப் போல நடத்தும் எண்ணம் கொண்ட ஒரு பிற்போக்கு சிந்தனையும் நடைமுறையும் கொண்ட மேட்டுக்குடி சிங்கள தலைவர்களும் தமிழ், முஸ்லிம் தலைவர்களுமே இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை கைபற்றுகின்றார்கள். சிங்கள வலதுசாரிகளை கொண்டிருந்த தேசிய காங்கிரஸை முழுமையாகவும் பண்டாரநாயக்கவின் சிங்கள மகா சபை மற்றும் முஸ்லிம் லீக் ஆகியவற்றை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியே சுதந்திர இலங்கையில் ஆட்சி பீடம் ஏறியது. மேற்குலக விசுவாசம் கொண்ட இக் கட்சியானது பிற்படுத்தப்பட்ட முதலாளித்துவ சிந்தனையையும் நடைமுறையையும் வெளிப்படுத்தி வந்தது. இந்த வெளிப்பாட்டில் ஒரு நாட்டிற்கு சொந்தமான கூலித் தொழிலாளர்களாக இருந்த மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் நாடற்ற கூலித் தொழிலாளர்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
 சர்வசன வாக்குரிமையினால் மலையக மக்கள் தங்களுக்கான அரசியல் தளத்தை தொழிலாளர் வர்க்க அரசியலுடன் வெளிப்படுத்தும் நிலையைப் பெற்றிருந்தனர் என்பதை 1947 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின. லங்கா சமசமாஜக் கட்சியின் தலைமையில் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்ட தொழிற் சங்கப் போராட்டங்கள் பெருந்தோட்ட முதலாளிகளை அச்சுறுத்திய அதேவேளை சிங்கள பூர்சுவா தலைவர்களிடம் “சிவப்பு அரசியல் நெருக்கடி‘ பற்றிய அச்சத்தை கிளப்பி இருந்தன. இலங்கை இந்திய தொழிலாளர் சங்கமும் தொழிற் சங்க போராட்டங்களை பெருந்தோட்டங்களில் முன்னெடுத்த அதேவேளை, இது அக் காலத்தில் இடதுசாரிகளை சார்ந்தும் இருந்தது. எனவே, அப்போது இலங்கையில் தொழிலாளர் வர்க்கமாக அடையாளம் காணப்பட்ட மலையகத் தொழிலாளர் இலங்கை அரசியலின் தீர்மானகரமான சக்தியாக நிலை பெறுவதற்கான அறிகுறிகள் காணப்பட்டன.
அரசாங்க சபையில் இடதுசாரிகள் 12 பேரை கொண்டிருந்த நிலையில் 1947 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் அது 20 ஆக உயர்வடைந்தது. இதில் 14 தேர்தல் தொகுதிகளில் இடதுசாரிகள் வெற்றி பெறுவதற்கு மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகள் செல்வாக்குச் செலுத்தி இருந்தன. ஏ.ஜே. வில்சனின் கருத்துப்படி மொத்தமாக 20 தேர்தல் தொகுதிகளில் மலையக மக்கள் தீர்மானகரமான சக்தியாக இருந்தனர் எனக் குறிப்பிடுகிறார். இத் தேர்தலில் இலங்கை இந்திய காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டவர்களில் 7 பேர் வெற்றிபெற்றிருந்தமை கவனிக்கத்தக்கது. எதிர்க்கட்சித் தலைவராக லங்கா சமசமாஜ கட்சியைச் சேர்ந்த என்.எம். பெரேரா தலைவராக செயற்பட்டார். இக் காலத்தில் பாராளுமன்றத்திலும் (பிரதிநிதிகள் சபையில் ) இலங்கை இந்திய தொழிலாளர் காங்கிரஸ் இடதுசாரிகளுடன் நெருங்கி செயற்பட்டு வந்தார்கள். இது சிங்கள வலதுசாரிகள் தலைவர்களிடத்தில் “சிவப்பு அச்சத்தை‘ மேலும் வலுப்படுத்தியது.
இத் தேர்தலில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் தொழிற் சங்க உரிமைக்காகவும் அவர்களை இலங்கைக்குரியவர்கள் என்ற தூர நோக்கத்துடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றிய நடேசய்யர் இலங்கை இந்திய அபேட்சகரிடம் தோல்வியடைந்தார். இது நடேசய்யர் தனது தொழிற் சங்க அரசியலில் இருந்து நீக்கம் பெறுவதற்கு ஏதுவாகியது. ஏ.ஈ. குணசிங்கவின் இனவாத அரசியலும் இ.இ.தொ. காங்கிரஸின் இந்திய அரசியலும் நடேசய்யரை பெரிசுந்தரத்திடம் தோல்வியுற செய்திருந்தது.
சிங்கள முதலாளித்துவ இனவாத தலைவர்களிடையே வலுத்திருந்த இந்திய விரோத அடிப்படையிலான மலையக மக்கள் மீதான இன விரோதம் மற்றும் சிவப்பு அரசியல் பீதியை அடிப்படையாகக் கொண்டு சிங்கள பிற்போக்கு பூர்சுவா தலைவர்கள் தமது “புனித போரை சுதந்திரம் பெற்ற இலங்கையின் சட்ட வாக்க அதிகாரத்தைக் கொண்டு தொடுக்க ஆரம்பித்தனர்.
 ஐக்கிய தேசியக் கட்சி டீ.எஸ். சேனாநாயக்கவினால் கொண்டு வரப்பட்ட பிரஜா உரிமை சட்டத்தின் மூலம் அந்த புனித போரை பின் காலனிய அரசாங்கத்தில் தொடக்கி வைத்தது. மிக எளிமையான சட்டத்தின் மூலம் இந்த மாபெரும் வெற்றியை தனது வர்க்கத்துக்கு சுதந்திரம் அடைந்து ஆறு மாதத்தில் டீ.எஸ். சேனா நாயக்க பெற்றுக் கொடுத்தமையை‘ குறிப்பிட்டாக வேண்டும்.
1931 ஆம் ஆண்டில் சர்வசன வாக்குரிமை மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவது தொடர்பாக இடம்பெற்ற இன வர்க்க கண்ணோட்டத்தின் தொடர்ச்சியினை 1948 இல் பிரஜா உரிமை தொடர்பாக சிங்கள வலதுசாரி தலைவர்களின்  நிலைப்பாடுகள் வெளிப்படுத்தி இருந்தன. இடதுசாரி தலைவர்கள் மலையக மக்களின் பிரஜா உரிமையை பறிப்பதில் உள்ள வர்க்க சார்பையும் இனவாதத்தையும் பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்தினர்.
 1948 பிரஜா உரிமை சட்டத்தின் தொடர்ச்சியாக கொண்டு வரப்பட்ட 1949 இந்திய பாகிஸ்தானியர் வதிவிடச் சட்டம், 1949 தேர்தல்கள் திருத்தச் சட்டம் ஆகியன முழு மலையக மக்களின் குடியுரிமையையும் வாக்குரிமையையும்  இழக்கச் செய்யும் வகையில் அமைந்திருந்தன. பிரஜா உரிமைச் சட்டங்கள் சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள், இலங்கை முஸ்லிம்கள் ஆகியோருக்கு பரம்பரை அடிப்படையில் தாமாக குடியுரிமை பெற்றுக் கொள்ளும் வகையில் அமைந்திருந்தது.  எனினும் மலையக மக்களைப் பொறுத்தவரையில் இலங்கையில் பிறந்த ஒருவர் தான் இலங்கை பிரஜை என்ற தகுதியைப் பெறுவதற்கு தனது தந்தை அல்லது தந்தை வழிப் பாட்டன் இலங்கையில் பிறந்திருப்பதை நிரூபிக்க வேண்டும். குறித்த நபர் இலங்கைக்கு வெளியே பிறந்தவராக இருந்தால் அவரது தந்தையும் தந்தையின் தந்தையும் இலங்கையில் பிறந்தமைக்கான சான்றுகளை சமர்ப்பித்தாக வேண்டும் என்ற ஏற்பாட்டிற்கு உட்பட்டே பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும். மலையக மக்களின் பிறப்புச் சான்றிதழே இதற்கான வலிதான சான்றாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1895 ஆம் ஆண்டில் இருந்தே இலங்கையில் பிறப்பை பதிவு செய்வதும் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் முறையும் அமுலுக்கு வந்திருந்த நிலையில் இச் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் ஏறக்குறைய அனைவரும் தமது பிரஜாவுரிமையை முழுமையாக இழந்தனர். இந்தச் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய டீ.எஸ். சேனாநாயக்கவிற்கு குடியுரிமை பெற முடியாது என இடதுசாரி தலைவர் பீட்டர் கெனமன் அப்போது சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது. பிரஜா உரிமையை அடிப்படையாகக் கொண்டு திருத்தப்பட்ட 1949 தேர்தல் திருத்தச் சட்டத்தின் மூலம் வாக்குரிமையும் பறிக்கப்பட்டது.
1920 1940 காலப் பகுதிகளில் இலங்கையை தமது சொந்த நாடாக கருதி மலையக மக்கள் வாழ்ந்து வந்திருந்தனர். 1927 இல் டொனமூர் குழுவினர் 40% 60% இடைப்பட்ட மக்கள் இலங்கையை தமது சொந்த நாடாக கருதி வாழ ஆரம்பித்து விட்டனர் என்று அறிக்கையிட்டிருந்த அதேவேளை 1938 இல் ஜெக்சன் குழுவினர் அது 60% என்று அறிக்கையிட, 1946 இல் சோல்பரி குழுவினர் 80% என குறிப்பிட்டிருந்த நிலையிலேயே இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு மலையக மக்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டனர்.
 மலையக மக்களுக்கு எதிரான இச் சட்டங்கள் அப்போதைய அரசியல் தலைமைகள் மற்றும் இயக்கங்களின் இன, வர்க்க நிலைப்பாடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருந்தன. ஜீ.ஜீ. பொன்னம்பலம் தலைமை தாங்கிய தமிழ் காங்கிரஸ் 1948 ஆம் ஆண்டு பிரஜாவுரிமைச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்திருந்த போதும் 1949 ஆம் ஆண்டு பிரஜாவுரிமை சட்டத்திற்கு ஜீ.ஜீ. பொன்னம்பலம் ஆதரவாக வாக்களித்தார். ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் இந்த நிலைப்பாடு தமிழ் காங்கிரஸில் இருந்து எஸ்.ஜே.வி. செல்வநாயகம் பிரிந்து சமஷ்டிக் கட்சியை தோற்றுவிப்பது வரை சென்று முடிவுற்றது. செல்வநாயகம் மலையக மக்களை இலங்கை தமிழர் போராட்டங்களில் தொழிற் சங்கம் அமைத்து இணைக்க முயற்சி செய்த போதும் அது வெற்றி பெறவில்லை.
இக் காலத்தில் சிங்கள பிக்குகளில் ஒரு சிறு பகுதியினரும் பிரஜாவுரிமைச் சட்டங்களை அதன் உள்ளடக்கத்தில் உள்ள மனித உரிமை மீறல்கள் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்த்தமை கவனத்திற்குரியன.
பிரஜாவுரிமை மறுப்பும் அதற்கு எதிரான போராட்டங்களும் 
மலையக மக்களுக்கு பிராஜவுரிமை மறுக்கப்பட்ட போது அதற்குக் கடுமையாக எதிர்ப்பைத் தெரிவித்த இடதுசாரிகள் பாராளுமன்றத்திற்கு வெளியில் எந்த எதிர்ப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ள துணியவில்லை. இ.இ. தொ. காங்கிரஸும் 1952 ஆம் ஆண்டு வரையில் பிரஜாவுரிமை பறிப்புக்கு எதிராக அரசியல் தொழிற் சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. 1952 ஆம் ஆண்டு தேர்தல் திகதி குறிக்கப்பட்ட பின்னரே மலையக மக்களுக்கு பிரஜா உரிமையைப் பெற்றுக் கொடுக்கும் படி கேட்டு தமது சத்தியாக்கிரகப் போராட்டத்தை பிரதமர் அலுவலகம் முன்பாக மேற்கொண்டனர். இந்த சத்தியாகிரகத்திற்கு இடதுசாரித் தலைவர்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர்.
மலையக மக்களின் பிரஜாவுரிமை மீட்பு என்பது சத்தியாகிரக போராட்டத்தோடு நிறுத்தப்பட்டதுடன் அதன் பின்னர் அது இலங்கை இந்திய அரசுகளுக்கு இடைப்பட்ட விவகாரமாகக் கருதப்பட்டு இரு நாடுகளுக்கிடையிலான உடன்படிக்கைகள் மூலம் தீர்க்கப்பட முயற்சிகள் செய்யப்பட்டன. இந்த முயற்சிகள் மலையக மக்களை மேலும் அவலத்திற்கு உட்படுத்தின. 1964 ஆம் ஆண்டு சிறி மா சாஸ்திரி உடன்படிக்கையும் அதன் பின்னர் 1974 இல் செய்யப்பட்ட சிறிமா இந்திரா உடன்படிக்கையும் மேற்கொள்ளப்பட்டன. இந்த உடன்படிக்கை அடிப்படையில் இலங்கையில் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்த மலையக மக்களுக்கு பிரஜா உரிமை வழங்கப்படக் கூடாது என்ற அடிப்படையிலேயே பரிசீலிக்கப்பட்டன.
தொழிற் சங்கங்களும் மலையக அரசியலும் 
1947 1977
 பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட பின்னர் மலையக அரசியல் என்பது தொழிற் சங்கத்தை மையப்படுத்தியதாகவே அமைந்திருந்தது. இ.இ. காங்கிரஸ் முதன்மையாகவும் அதில் ஏற்பட்ட பிளவுகளின் விளைவாக உருவாகிய தொழிற் சங்கங்களும் 1977 வரை தத்தமது தொழிற் சங்க நடவடிக்கைகள் ஊடாக மலையக அரசியலை முன்னெடுத்தனர். இதிலே 1954 ஆம் ஆண்டு இ.இ. தொ. காங்கிரஸ் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என பெயர் மாற்றிக் கொண்டு தொழிற் சங்கப் பணிகளை மேற்கொணட போதும் நடைமுறையில் அது மலையக மக்களை இலங்கைக்கு உரித்தானவர்கள் என்ற அடிப்படையில் நோக்கவில்லை. மாறாக சுதந்திரத்திற்கு முன்னர் இருந்து இந்திய இலங்கை தேசிய வாதத்திற்கு பதிலாக இலங்கை இந்திய தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிற் சங்க வாதத்தை முன்னெடுத்தது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இருந்து பிரிந்து (1955)  அஸீஸ் ஜனநாயக தொழிலாளர் சங்கத்தையும் வெள்ளையன் தேசிய தொழிலாளர் சங்கத்தையும் நிறுவினர். இத் தொழிற் சங்கங்கள் தோற்றம் பெற்ற காலங்களில் இருந்த செல்வாக்கை தொடர்ந்து தக்கவைத்து இ.தொ.கா.வின் தொழிற் சங்க ஆதிக்கத்தை வீழ்த்துவதில் தோல்வி கண்டன.
எனவே, இ.தொ.கா. மலையகத்தின் தொழிற் சங்கங்களில் பலமிக்கதாக இருந்ததோடு அது மலையகத்தின் பெரும் இயக்கமாகவும் வளர்ச்சியடைந்திருந்தது. இ.தொ.கா. வின் தலைவர் தொண்டமான் நியமன உறுப்பினராக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்து வந்தார். இக் கால கட்டத்தில் இ.தொ.கா. பல தொழிற் சங்கப் போராட்டங்களை முன்னெடுத்ததை மறுக்க முடியாது. எனினும், மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அது கைக் கொண்ட சந்தர்ப்பவாத போக்குகள் மக்கள் விரோதம் என்ற போதும் இ.தொ.கா. மலையகத்தில் தனது தொழிற் சங்க ஆதிக்கத்தை நிலை நிறுத்தி வந்தது.
இடதுசாரி அரசியலும் மலையகமும் 1947 1977 
சமசமாஜக் கட்சி அறுபதுகளில் பாராளுமன்ற சந்தர்ப்ப வாதத்தை தழுவிக் கொண்டு சுதந்திரக் கட்சியுடன் சங்கமமாகியது. இதனால், மலையகத்தில் 60 களில் பின்னர் அது படிப்படியாக வீழ்ச்சியுற்றது. 40 களில் சமசமாஜக் கட்சியில் இருந்து பிரிந்த ஒரு குழுவினர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியை அமைத்தனர். 60 களில் இலங்கை கம்பியூனிஸ்ட் கட்சி தத்துவ பிரச்சினை காரணமாக சோவியத் சார்பு, சீன சார்பு என இரண்டாக பிளவுற்றது. சீன சார்பு இலங்கை கம்பியூனிஸக் கட்சிக்கு நா. சண்முகதாசன் தலைமைதாங்கினார். கட்சியின் தொழிற் சங்க இயக்கமான செங்கொடி சங்கம் றொசாரி பெர்னாண்டோவின் தலைமையின் கீழ் 1965 ஆம் ஆண்டில் இருந்து 1973 வரை மாற்று தொழிற் சங்க பண்பாட்டுடன் செயற்பட்டு வந்தது. 1972 காலப் பகுதியில் இந்த தொழிற் சங்கம் 110,000 உறுப்பினர்களைக் கொண்டிருந்தமை கவனிக்கத்தக்கது. எனினும் 1973 ஆம் ஆண்டிற்கு பின்னர் தொழிற் சங்க தலைவர்களின் செயற்பாடுகள் காரணமாக சீன சார்பு கம்யூனிஸக் கட்சி தனிநபர்களின் ஆதிக்கத்திற்கு சென்றது. நா. சண்முகதாசன் பின்னர் புதிய செங்கொடி சங்கம் என்ற சங்கத்தை ஆரம்பித்த போதும் அது முடங்கிப் போனது.
 நா. சண்முகதாசனின் அணியில் இருந்து சிங்கள இளைஞர்கள் ரோஹன விஜயவீர தலைமையில் புதிய இடதுசாரி அமைப்பான மக்கள் விடுதலை முன்னணியை தோற்றுவித்தனர். சி.சிவசேகரம், சுச்சரித்த கம்லத் போன்றவர்கள் இந்த அமைப்பை மாக்சிய பாசாங்கு கொண்ட சிங்களத் தேசியவாத அமைப்பு என்றே வரையறுக்கின்றனர். மக்கள் விடுதலை முன்னணி எவ்வித விஞ்ஞான அடிப்படைகளும் அற்ற விதத்தில் இந்திய விஸ்தரிப்புக் கொள்கையின் ஒரு அங்கமென மலையக மக்களையும் இணைத்து செய்த வியாக்கியானம் சிங்கள  மக்கள் மலைய மக்கள் மீது வெறுப்பு கொள்வதற்கு ஏதுவாகியது.
லங்கா சமசமாஜக் கட்சி, சோவியத் சார்பு கம்யூனிஸ் கட்சியின் தலைவர்கள் சிலர் மலையக மக்களின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தனர். சோவியத் சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் சரத் முத்தெட்டுவேகம மலையக மக்களின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தார். எனினும் 70 களின் கடைக் கூற்றில் இடதுசாரி தொழிற் சங்க இயக்கங்கள் ஏறக்குறைய முழுமையாக அடங்கிய நிலைக்கு போயிருந்தன. அதேநேரம் இ.தொ.கா. தனது பாராளுமன்ற அரசியல் பிரவேசத்தின் அடுத்த கட்டத்திற்கு தயாராகி இருந்தது.
1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி 5/6 பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி பீடம் ஏறியது. சுதந்திரக் கட்சி தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் “சோசலிச’ பொருளாதார முறையின் தோல்விகளும் இனவாத போக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இந்த பெரு வெற்றியைத் தேடித் தந்தன. இந்த வெற்றியைக் கொண்டு ஐ.தே.க. தனது தாராள பொருளாதார கொள்கையை பரப்புவதற்கு ஏற்றவகையில் அரசியல் அமைப்பு ரீதியான சர்வாதிகாரத்தை உறுதிப்படுத்தக் கூடிய ஜனாதிபதி முறையை ஏற்படுத்திக் கொண்டது. ஐ.தே. கட்சி இக் காலத்தில் மேற்கொண்ட தாராள பொருளாதாரக் கொள்கை இதுவரையில் இலங்கையில் நிலவிய சமூக நல அரசு என்ற கொள்கையை படிப்படியாக அழித்தொழிக்கும் முயற்சியாக அமைந்தது. அதேநேரம் அது தனது இனவாத நிகழ்ச்சித் திட்டத்தையும் முன்னெடுத்தது. இந்த அரசாங்கத்தில் இதுவரை நியமன உறுப்பினராக பாராளுமன்றத்தில் இருந்து வந்த தொண்டமான் தேர்தலில் வெற்றி பெற்று ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியையும் பெற்றுக் கொண்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் இன முரண்பாடு மேலும் உக்கிரமடைந்தது. மரபு ரீதியான தமிழ்த் தேசிய தலைமைகள் மீது நம்பிக்கையிழந்த இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தனர். தொடர்ச்சியான இன வன்முறைகளுக்கும் இன அடக்குமுறைக்கும் உட்பட்டிருந்த மலையக மக்கள் தமிழ்த் தேசியத்தின் ஆயுத போராட்ட மார்க்கம் காரணமாக நேரடியான இன வன்செயல்களுக்கும் இன அடக்குமுறைகளுக்கும் முகம் கொடுத்தனர்.
தொண்டமானின் தொழிற் சங்க இராச்சியம்

ஐக்கிய தேசியக் கட்சி வசமாதல் 
கிராமிய அபிவிருத்தி அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்ட தொண்டமான் ஐ.தே.க. அரசாங்கத்தின் இனவாதத்திற்கு எதிராக செயற்பட முடியாதவராக இருந்தார். அமைச்சுப் பதவியைக் கொண்டு மலையக மக்களைப் பாதுகாப்பதை விட தொண்டமான் அரசாங்கத்தைக் காப்பதையே தனது பிரதான கடமையாகக் கொண்டிருந்தார் என மோகன் ராஜ் குறிப்பிடுகிறார். அத்தோடு அரசாங்கத்தின் திட்டமிட்ட இன வன்செயல்களுக்கும் அடக்கு முறைகளுக்கும் எதிரான பொது மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களையும் வேலை நிறுத்தங்களையும் தடுத்து அரசாங்கத்தைப் பாதுகாக்கும் பணியையும் செய்து வந்தார்.
இ.தொ.கா.வின் பின்னால் இலங்கை பொருளாதாரத்தின் 60% பங்கினைக் கொண்டிருந்த 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டிருந்த நிலையில் 1980 ஆம் ஆண்டு பொது வேலை நிறுத்தத்தில் தோட்டத் தொழிலாளர்கள் ஈடுபடுவதை அது தடுத்தது. அத்தோடு வேலை நீக்கம் பெற்ற 40 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நியாயம் கேட்டு மலையக தொழிலாளர்கள் குரல் கொடுப்பதையும் தடுத்தது.
எழுபதுகளில் மக்கள் ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்தில் மலையக மக்களுக்கு எதிராக அரசாங்கம் இழைத்த அடக்குமுறைக்கு எதிராக நடத்திய தொழிற்சங்க நடவடிக்கைகளின் காரணமாக இ.தொ.கா. மக்கள் ஆதரவைப் பெற்றிருந்தது. 1975 76 காலப் பகுதியில் அதன் அங்கத்தவர்கள் 6 இலட்சத்தைத் தாண்டி இருந்த போதும் 1977 ஆம் ஆண்டு ஐ.தே.க. அரசாங்கத்துடன் இணைந்ததன் பின்னர் அதன் அங்கத்துவம் மிக வேகமாக வீழ்ச்சி கண்டது. 1981 ஆம் ஆண்டில் அதன் அங்கத்துவம் 2, 45, 000 வரை குறைவடைந்தது. அதுவரையில் தெற்காசியாவில் மிகப் பெரிய தொழிற் சங்கமாக திகழ்ந்த இ.தொ.கா. தனது பலத்தை இழந்தது.
 இ.தொ.கா. வின் குறுகிய இலங்கை இந்திய தேசியவாதத்திற்கு உட்பட்ட தொழிற் சங்கவாதம் பாராளுமன்ற வாதமாக நிலைமாறிய காலத்தில் மக்கள் மத்தியில் ஐ.தே.க. தொழிற் சங்கமான தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மலையகத்தில் முன்னிலை பெறுவதை அவதானிக்கலாம். இச் சங்கத்தில் 1981 ஆம் ஆண்டில் 3 இலட்சத்துக்கும் அதிமான தொழிலாளர்கள் அங்கம் வகித்திருந்தனர்.
 தே.தோ. தொ.ச. தனது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி தோட்டத் துரைமார்களின் ஆதரவுடன் உறுப்புரிமையை அதிகரித்துக் கொண்டது. இ.தொ.கா.வின் பாராளுமன்ற வாதம் மக்கள் மத்தியில் முதல் சந்தர்ப்பத்திலேயே தோல்வியுற்றது. யார் தமது பிரஜாவுரிமையைப் பறித்தார்களோ அவர்களிடத்திலேயே நீதி கேட்கும் நிலைக்கு இக் கால கட்டத்தில் மலையக மக்கள் தள்ளப்பட்டனர். இந்த அவலத்திற்கு இடதுசாரிகளின் தோல்வியும் இ.தொ.கா.வின் பாராளுமன்றவாதமுமே காரணமாகின.
மலையக தேசியத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்
மலையகம் என்ற கருத்துருவாக்கமும் மலையக தேசிய அரசியல் வேட்கையும் மரபு ரீதியான தொழிற் சங்கங்களில் இருந்து வெளிவர நியாயம் இல்லை. மலையக தேசியம் பற்றிய கருத்துருவாக்கமும் ஆரம்ப சமூக ரீதியான செயற்பாடுகளும் மலையகத்தில் கற்ற முற்போக்கு சக்திகளிடம் இருந்து வெளிப்பட்டன. இர. சிவலிங்கம் தலைமையில் 1967 இல் ஆரம்பிக்கப்பட்ட மலையக இளைஞர் முன்னணி, 1968 இல் வி.எல். பெரேரா, சக்தி பாலையா ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்ட மலையக இளைஞர் பேரவை, தொடர்ந்து எழுபதுகளின் நடுப்பகுதியில் எல். சாந்திகுமார், எம்.எஸ். கந்தையா ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட மலையக மக்கள் இயக்கம், பீ. ஏ. காதர், வீ. டீ. தர்மலிங்கம், ஏ.லோரன்ஸ், எஸ். தேவசிகாமணி ஆகியோரின் முன்னெடுப்பில் உருவான மலையக வெகுசன இயக்கம், வீ. புத்தரசிகாமணி, திவ்யநாதன், நேருஜி இணைந்து ஏற்படுத்திய மலையக ஐக்கிய முன்னணி, 1989 பெப்ரவரியில் பீ. சந்திரசேகரன், பீ.ஏ. காதர், வீ. டி. தர்மலிங்கம், ஏ.லோரன்ஸ், சரத் ஆகியோரினால் ஆரம்பிக்கப்பட்ட மலையக மக்கள் முன்னணி என இந்த தொடர்ச்சி ஓர் தேசிய இன அரசியல் பாதையில் பயணித்து வந்துள்ளதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
இப் பின்னணியில் மலையக தேசியம் என்ற விடயம் மலையகத் தேசிய அரசியலில் மாற்று அரசியலாக முன்னிலைபெற ஆரம்பிக்கிறது. இது இ.தொ.கா. மலையகத்தில் முன்னெடுத்த தொழிற்சங்க வாதத்திற்கு மாற்றாக மலையக மக்களை அரசியல் மயப்படுத்த வேண்டும் என்ற அரசியல் பிரக்ஞையின் வெளிப்பாடு என்று குறிப்பிடலாம்.
இந்த அரசியல் வெளிப்பாட்டிற்கு இறுதியில் மலையக மக்கள் முன்னணியே தலைமை தாங்கியது. மலையக மக்கள் முன்னணி இ.தொ.கா. விலிருந்து வெளியேறியவர்களினால் தோற்றுவிக்கப்பட்டதாகும். மலையக மக்கள் முன்னணியை தோற்றுவித்து அதன் அப்போதைய தலைவர் பெ. சந்திரசேகரன் ஆற்றிய உரை பின்வருமாறு அமைந்திருந்தது.
“சிறுபான்மை மக்கள் தங்கள் உரிமையைப் பெற்றுக் கொள்வது என்பது ஐக்கியப்பட்ட போராட்டத்தினால் தான் முடியும். இதைக் கடந்த கால உலக வரலாறுகள் நமக்கு உணர்த்துகின்றன. அரசாங்கத்தோடு தோழமை கொள்வதாலோ அவர்களை தாஜா பண்ணுவதாலோ அல்லது அரசாங்கத்திலுள்ள தனிப்பட்ட ஒரு சிலரின் நட்பைப் பயன்படுத்துவதாலோ தான் எமது பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்பதில்லை. நம் மீது பச்சாதாபப்பட்டோ இரக்கப்பட்டோ வழங்கப்படும் உரிமைகள் நிலைக்க முடியாது. எமது பிரச்சினைகளும் தீரப் போவதில்லை. அப்படி நட்போடு கூடிக்குலாவிய மலையக அமைப்புகள் கூட இன்று 13 வருடங்களுக்குப் பின் தாம் ஏமாற்றப்பட்டு விட்டதாகவே கூறிக் கொள்கின்றார்கள்‘.
 இக் கூற்று மலையகத்தில் ஒரு மாற்று அரசியல் அதாவது இணக்க அரசியலுக்கு மாற்றாக மலையக மக்களின் உரிமைகளை முன்னிறுத்திய எதிர்ப்பு அரசியல் கூறுகளுடன் வெளிப்பட்டது. எனினும் மலையக தேசியம், மலையக தேசிய அரசியலை முன்னெடுப்பதற்கு ஏற்ற மூலோபாயங்களை மலையக மக்கள் கொண்டிருக்கவில்லை என்பதை 1994 ஆம் ஆண்டு தொடங்கிய இணக்க அரசியல் இன்று பாராளுமன்ற வாதத்திற்குள் முழுமையாக அடங்கிப் போயிருப்பதில் இருந்து வெளிப்படுகிறது. இன்று மலையக மக்கள் முன்னணி மலையக தேசியம் தொடர்பாக வரையறுத்த அளவில் பேசி வருகின்றபோதும் அது முழுமையாக தேசிய அரசியலுக்கான  உள்ளடக்கத்தை இழந்த நிலையிலேயே உள்ளது.
எனினும் இ. தம்பையா, இமையவரம்பன், சி. கா. செந்திவேல் போன்றவர்கள் மலையக தேசியத்தின் குறும்பார்வையை விமர்சித்து வெகுஜன அரசியல் ஊடாக ஒடுக்கப்பட்ட ஏனைய தேசிய இனங்களுடனும் சிங்கள உழைக்கும் மக்களுடனும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கரத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர். புதிய ஜனநாயக கட்சி என்ற கட்சியானது இந்தக் கருத்தை தேசிய இனப் பிரச்சினைக்கான தனது தீர்வுத் திட்டத்தில் முன்வைத்துள்ளது. எனினும் இந்த அமைப்பு வெகுஜன போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற போதும் மலையகத்தில் அரசியலில் தீர்க்கமான சக்தியாக இல்லாமை கவனிக்கத்தக்கது.
தொழிற் சங்கவாதம், தேசியவாதம் மற்றும் பாராளுமன்ற வாதம் :
1993 இல் இருந்து இன்று வரை
பாராளுமன்ற அரசியலுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருந்த இ.தொ.கா. 1994 ஆம் ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்திலும் அங்கம் வகித்து பாராளுமன்ற வாதத்தின் அடுத்த எல்லையான அபிவிருத்தி அரசியல் வரை சென்றுள்ளது. இதனூடாக சமரச அரசியல், அபிவிருத்தி அரசியல் என்பதனை மக்களை அணித் திரட்டுவதற்கான மூலோபாயமாக கொண்டுள்ளது. இது மாகாண சபை, உள்ளூராட்சி சபைகள் வரையில் நீட்சி பெற்று தொடர்கிறது.
1988 ஆம் ஆண்டு குடியுரிமை பிரச்சினைத் தீர்க்கப்படும் வரை மலையகத்தில் தொழிற்சங்கவாதம் முதன்மையான அரசியல் கூறாக இருந்த நிலையில் அதனை மையப்படுத்திய மலையக அரசியல் கட்டமைக்கப்பட்டிருந்தது. தொழிற்சங்கவாதம் மலையக மக்களின் உரிமைகளையும் அபிலாஷைகளையும் உள்வாங்க முடியாத நிலையில் இருந்த போது மலையக மக்களை தொழிற்சங்கவாதத்தில் இருந்து நீக்கிய மலையக தேசியம் சார்ந்த அரசியல் முன்னெடுப்புக்கான தேவை மலையக மக்களுக்கு இருந்தது. இதற்கு மலையக மக்கள் முன்னணி தலைமை தாங்கிய போதும் ஏற்கனவே குறிப்பிட்டது போல அதுவும் பாராளுமன்ற வாதத்தில் சங்கமித்தமையின் காரணமாக இன்று தோல்வி கண்டுள்ளது.
தமது வாக்குரிமை மீட்பினால் மலையக மக்கள் பெற்றுக் கொண்டுள்ள அரசியல் பலம் வெகுஜன அரசியலுக்கு பங்களிக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் மலையக தொழிற் சங்கங்கள் தொழிற் சங்க வாதத்தில் இருந்து தொழிற் சங்க சீரழிவு நிலைக்கு போய் மக்களை மேலும் மலினப்படுத்தியுள்ளன. இது மலையகத் தோட்டத் தொழிலாளர்களை தொழிற் சங்கங்கள் மீதும் வெகுஜன அரசியல் மீதும் எவ்வித நம்பிக்கையும் அற்றவர்களாக மாற்றியுள்ளதுடன் பாராளுமன்ற அரசியலின் தயவில் தமது உரிமைகளை தலைவர்கள் நிலைநாட்டும் வரை காத்திருக்கும் ஒரு அமைதி அரசியல் காலசாரம் நிலவும் நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்று தொழிற் சங்கவாதம் மிகவும் பலவீனப்பட்டு போயுள்ளமையினால் தனியார் மயமாக்கப்பட்டுள்ள பெருந்தோட்டக் கம்பனிகளைத் தோட்டத் தொழிலாளர்கள் மீதான பொருளாதார சுரண்டலுக்கு (உழைப்புச் சுரண்டலை) எதிராக போராடும் பண்பையும் மக்கள் இழந்துள்ளனர்.
மரபு ரீதியான தொழிற் சங்கங்களும் உருவாகின்ற புதிய தொழிற் சங்கங்களும் தொழிற் சங்கவாதத்தையும் உள்ளடக்கத்தில் போதாமைகளுடனான மலையக தேசியத்தையும் வைத்துக் கொண்டு அரசியல் நடத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும் வெகுஜன அரசியல் பாதையை முன்னெடுப்பதில் தயக்கம் காட்டி வருகின்றமையும் மக்கள் மீது சலுகை அரசியலைத் திணிக்கும் போக்கினையும் கொண்டிருக்கின்றன.
தொழிற்சங்கவாதத்திற்குப் பின்னதான பாராளுமன்ற வாதம், தொழிற் சங்கவாதத்தைப் போலவே மலையகத்தில் வெகுஜன அரசியலையும் ஏனைய ஒடுக்கப்படும் தேசிய இன மக்களுடன் ஒற்றுமைப்பட்டு போராடும் பண்பாட்டையும், சிங்கள தொழிலாளர்களுடன் இணைந்து அரசியல் செய்யும் பண்பாட்டையும் முற்றாக தகர்த்துள்ளது. அத்துடன் மக்கள் மீதான அநீதிகளுக்கும் ஜனநாயக உரிமைகளுக்கும் மீறல்களுக்கும் எதிராக குரல் கொடுக்கும் பரந்த அரசியல் அணுகுமுறையையும் இழந்து நிற்கின்றது.
இது மலையக மக்களை வரலாற்று ரீதியாக தேசிய நீரோட்ட அரசியலில் சங்கமிப்பதை தவிர்த்து வந்த பேரினவாத அரசாங்கங்களின் போக்கிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒத்தாசை வழங்குகின்ற போக்கிற்கும் தேர்தல் கால குறுந்தேசிய வாதத்திற்கும் மலையக இன வாதத்திற்கும் வழிவகுத்துள்ளது.
எனவே, இன்று மலையகத்தில் வெகுஜன அரசியலுக்கான வெளி நிரப்பப்படாமல் இருக்கின்றது. தொழிற் சங்கவாத அரசியலைப் போன்றே பாராளுமன்றவாத அரசியலும் மலையக வெகுஜனங்களை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவதில் வெற்றிக் கண்டுள்ளது. தொழிற் சங்க உறுப்பினர்கள் என்ற பாத்திரத்தை தொழிற்சங்கவாதத்திற்குள் கொண்டிருந்த மலையக மக்கள் இன்று தொழிற் சங்க அங்கத்துவப் பணம் செலுத்தும் உறுப்பினர்கள் என்ற கீழ் நிலைக்கு சென்றுள்ளனர். மறுபுறம் அரசியலை பொறுத்தமட்டில் மலையக மக்கள் தங்களை வாக்காளர்கள் என்ற நிலையில் இருந்து மீட்டு இனப் பிரஜைகள் (ஏனைய இனப் பிரஜைகளுக்கு உள்ள உரிமைகள் இல்லாமையினால் ) என்ற நிலைக்கு கொண்டு செல்வதற்கு கூட அரசியல் இயக்கங்கள் தயக்கம் காட்டியே வருகின்றன.
இப் பின்னணியில் மலையக அரசியல் மலையக மக்கள் மீதான தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் நிலையை கொண்டிருக்கவில்லை. அத்துடன் தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள், மாணவர்கள், முதியவர்கள் என்று ஒட்டுமொத்த மலையக சமூகமும் முகம் கொடுக்கும் பிரச்சினைக்குத் தீர்வுகளை வழங்க முடியாத நிøலையிலேயே மலையக பாராளுமன்ற வாத அரசியல் பயணிக்கிறது. இது ஒரு அரசியல் நெருக்கடி என்ற போதும் மலையகத்தில் சலுகை அரசியலின் ஊடான அரசியல் மேலாண்மை பேணப்படுகிறது.
இன்றைய மலையகமும் எதிர்கால மலையகமும் 
இலங்கையில் அரை அடிமை தொழிலாளர்களாகவும் பின்னர் கூலித் தொழிலாளர்களாகவும் மலையக மக்கள் இலங்கையின் முதலாளித்துவ பொருளாதார முறைக்கு தேவையான மூலதனத் திரட்சியை உருவாக்குவதற்குப் பங்களித்துள்ளனர். 1970 கள் வரை இலங்கையின் பொருளாதாரம் பெருந்தோட்டப் பொருளாதாரத்தில் தங்கி இருந்தது. இவ்வாறான பங்களிப்பை மலையக மக்கள் வழங்கிய போதும் அவர்களின் உரிமைகள் இலங்கை அரசாங்கங்களினால் பறிக்கப்பட்டு அவர்களை திட்டமிட்ட ஒடுக்குமுறைக்கு உட்படுத்தி வந்தனர். காலனித்துவ காலத்தில் இருந்து இன்று வரையும் மிதமிஞ்சிய சுரண்டலுக்கு (குதணீஞுணூ உதுணீடூணிடிtடிணிண) உட்படுவதை உறுதி செய்த அதேவேளை அரசியல் சமூக உரிமைகளையும் மறுத்து ஓரங்கட்டப்பட்டமையின் விளைவு இலங்கையின் ஏனைய இனப்பிரஜைகளைவிட சமூக, பொருளாதார, அடைவுகளில் இவர்கள் மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கின்றனர்.
மலையகத்தில் நிலவிய தொழிற்சங்க அரசியல், பாராளுமன்ற அரசியல், அரசாங்கத்துடனான அபிவிருத்தி அரசியல் என்ற அத்தனை அரசியலும் அதற்கு தலைமை தாங்கிய, தாங்கி வருகின்ற தலைவர்களும் மலையகத்தில் உள்ள ஒரு இனப் பிரஜையின் முகவரி, வீடு, காணி உரிமைகளையேனும் இதுவரை பெற்றுக் கொடுக்க முடியவில்லை.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் நாட் சம்பளத்திற்கு பணிபுரிகின்றனர். தோட்டத் தொழிலாளர்களுக்கான கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, வீட்டு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றன. அவர்களது வாழ்க்கைத் தரம் நாட்டின் ஏனைய பொது மக்களது வாழ்க்கைத் தரத்தையும் விட கீழ் மட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சுகாதார வசதிகள் வாழ்வதற்குத் தகுதியற்ற முறையில் காணப்படுவதோடு, காலசாரம் மற்றும் வாழ்க்கை முறை மாத்திரமன்றி, குடும்ப உறவுகளைக் கூட நெருக்கடிக்குள் தள்ளும் “லைன் காம்பரா’ எனும் குடியிருப்புக்குள்ளேயே வைக்கப்பட்டுள்ளனர். தோட்டத் தொழிலாளர்களுக்கு மத்தியில் வறுமை வீதம் 32 % ஆக இருப்பதோடு முழு இலங்கையினதும் வறுமை வீதம் 15.2% க்கும் குறைவாக உள்ளது. தோட்ட மக்கள் தொகையில் 49.2% நாளொன்றுக்குத் தேவையான கலோரி, தேவையான அளவு கிடைக்காததோடு அதன் விளைவாக தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த பெண்களின் ஆரோக்கியம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பிறந்து 28 நாட்களுக்குள் மரணிக்கும் குழந்தைகளின் விகிதாசாரம் நாட்டின் பொதுவான வீத ஆயிரத்துக்கு 13.9 ஆக இருக்கும் போது தோட்டப் பகுதிகளில் அது 31 ஆக இருக்கிறது. 5 வயதுக்கும் குறைவான பிள்ளைகளின் மரண விகிதாசாரம் ஆயிரத்துக்கு 51.6 % தோட்டப் பகுதிகளில் பிறக்கும் பிள்ளைகளின் வளர்ச்சிக்குன்றல் நகர்ப்புற பிள்ளைகளைவிட மூன்று மடங்காகும். இன்று மலையக மக்கள் தோட்ட வைத்தியசாலையை நம்பி இருக்கின்ற நிலையில் அவைகளின் சேவை மிகவும் தாழ்ந்த நிலையிலேயே உள்ளன. 1970 களில் பின்னர் படிப்படியாக அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்ட தோட்டப் பாடசாலைகளின் கல்வித் தரம் மற்றும் வளங்கள் விநியோகம் நாட்டின் தேசிய மட்டத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் தாழ்ந்த நிலையிலேயே உள்ளது. பாடசாலை இடைவிலகல் முக்கியப் பிரச்சினையாக உள்ளது. 5 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாடசாலையை விட்டு வெளியேறும் பிள்ளைகளின் விகிதாசாரம் 8.4% ஆகும். கிராமம் மற்றும் நகரத்தைக் காட்டிலும் மிகவும் பின்தங்கிய சமூக, பொருளாதார நிலைமைகளிலேயே மலையக மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
மலையகத்தின் எதிர்கால அரசியல் இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதை மையமாக் கொண்டு இனப் பிரஜைகள் என்ற அடையாளத்தைக் கடந்து தேசிய பிரஜைகள் என்ற நிலைக்குச் செல்லவேண்டும்.

About Thinappuyal News