உற்பத்திப் பொருட்களை ஒழுங்கற்ற முறையில் விற்பனை செய்தவருக்கு அபராதம்.

வவுனியா, தரணிக்குளம் பகுதியிலுள்ள வியாபார நிலையங்களுக்கு விறகு ஏற்றிச் செல்லப்படும் பட்டா ரக வாகனத்தில் உணவுப்பண்டங்களான பாண், கேக், பணிஸ் விற்பனை செய்த நபருக்கு  எதிரான குற்றச்சாட்டின் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்ட வெதுப்பக உற்பத்தி நிலையத்தின் உரிமையாளருக்கு வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் 30 ஆயிரம் ரூபா தண்டம் அறிவிட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும்  தெரியவருகையில்,

வவுனியாவிலுள்ள பிரபல்யமான வெதுப்பகம் ஒன்றின் உற்பத்திப் பொருட்களை வெதுப்பகத்திற்கு விறகு ஏற்றப்பயன்படுத்தப்பட்ட பட்டா ரக வாகனத்தை உரிய முறையில் துப்புரவு செய்யாமல் பாண், பணிஸ், கேக் போன்ற உணவுப் பொருட்களை களஞ்சியப்படுத்தி தரணிக்குளம் பகுதியில் விற்பனை செய்தமை தொடர்பில் வெதுப்பகத்தின் உரிமையாளருக்கு எதிராக ஓமந்தை பொது சுகாதாரப்பரிசோதகரினால் வவுனியா நீதிமன்றத்தில் கடந்த 13.10.2018 வழக்குத்தாக்கல்  செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நேற்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சுத்திகரிப்புச் செய்யப்படாமல் விறகு ஏற்றிச் சென்ற பட்டா ரக  வாகனத்தில் வெதுப்பக உற்பத்தி உணவுப் பொருட்கள் மண், தூசு, பூச்சி, காலாவதித்திகதி முடிவடையும் முன்னரே பூஞ்சனம் பிடித்த பாண் என்பன காணப்பட்டுள்ளதுடன் மருத்துவ தகுதிச்சான்றிதழ் இன்றி வாகனத்தைச் செலுத்திய நபரே வெற்றுக்கைகளினால் உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை போன்ற ஆறு குற்றச்சாட்டுக்களுக்கு எதிராகவும் உரிய அனுமதிப்பத்திரமின்றி மேற்படி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்த வெதுப்பக உரிமையாளருக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி வழக்குகள் நேற்றைய தினம் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிராளி குற்றத்தை ஒப்புக் கொண்டதற்கு இணங்க முதலாம் எதிரி மீதான ஆறு குற்றச்சாட்டுகளுக்கும் தலா நான்கு ஆயிரம் ரூபா வீதம்  24 ஆயிரம் ரூபாவும் இரண்டாம் எதிரிக்கு 6 ஆயிரம் ரூபா மொத்தமாக 30 ஆயிரம் ரூபா நீதிமன்றத்தினால்  தண்டமாக விதிக்கப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட  உணவுப்பொருட்களை அழித்து விடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை காலாவதித்திகதி முடிவடைந்த 10 குளிர்பானம் களஞ்சியப்படுத்தி வைத்திருந்த வர்த்தகர் ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டிற்கும்  நீதிமன்றம்  5 ஆயிரம் ரூபா அபராதம் விதித்திருந்தாக ஓமந்தை பொது சுகாதாரப்பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

About Thinappuyal