நேபாளத்தில் வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட பெண், 2 மகன்களுடன் உயிரிழந்தார்.

நேபாளத்தில், மாதவிலக்கு காலத்தில் பெண்களை வீட்டில் இருந்து வெளியேற்றி கால்நடை கொட்டகை அல்லது தனிமைப்படுத்தப்பட்ட குடிசையில் தங்க வைக்கும் பழக்கம் நீண்ட காலமாக இருந்து வந்தது.

தீண்டாமையின் மற்றொரு வடிவமாக பார்க்கப்படும் இந்த செயலை குற்றம் என அறிவித்து, இது தொடர்பாக தனி சட்டத்தை கடந்த 2017-ம் ஆண்டு நேபாள அரசு இயற்றியது. எனினும் நேபாளத்தில் பல கிராமங்களில் இன்னும் இந்த பழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், பஜூரா மாவட்டத்தை சேர்ந்த ஆம்பா போஹரா (வயது 35) என்கிற பெண்ணுக்கு மாதவிலக்கு காலம் என்பதால் அவர் வீட்டில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட குடிசையில் தங்க வைக்கப்பட்டார். அவரது 2 மகன்களும் அவருடன் தங்கி இருந்தனர்.

இந்தநிலையில் குடிசையில் அவர்கள் 3 பேரும் பிணமாக கிடந்தனர். கடும் குளிரில் இருந்து தற்காத்துக்கொள்ள குடிசைக்குள் நெருப்பு மூட்டியதாகவும், அதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் மூச்சு திணறி தூக்கத்திலேயே 3 பேரும் இறந்ததாகவும் கூறப்படுகிறது.

About Thinappuyal News