ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்றிரவு நாடு திரும்பியுள்ளார். 

18

சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்றிரவு நாடு திரும்பியுள்ளார்.

நேற்றிரவு 11.16 அளவில் சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான எஸ்.கியூ 468 ரக விமானத்தில் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர்  நாடு திரும்பியுள்ளார்.

சிங்கப்பூருக்கான ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ விஜயத்தில், இரண்டு நாடுகளுக்கிடையேயான வர்த்தக, சுற்றுலா மற்றும் தொழிற்துறை உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கிடையே கைச்சாத்திடப்பட்டிருக்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி அந்த ஒப்பந்தத்தை தயாரிக்கும்போது இலங்கை தரப்பில் ஒரு சில குறைபாடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த குறைபாடுகளை சரி செய்யும் முகமாக ஒரு சில திருத்தங்கள் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆசிய வலயத்திற்கு மாத்திரமன்றி உலகத்திற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப்பொருள் சவாலை வெற்றிகொள்வதற்கு ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவம் தொடர்பில் இரண்டு நாடுகளின் தலைவர்களும் கவனம் செலுத்தியுள்ளனர்.

அத்துடன் போதைப்பொருள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக சிங்கப்பூர் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி அந்த நாட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடனான சந்திப்பிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE