தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியை கேள்விக்குறியாக்க களமிறங்கும் மும்மூர்த்திகள்

6

இன்றைய அரசியல் கால நீரோட்டத்தில் யுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகளைக் கடந்துள்ள நிலையில் தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் இனியும் இலங்கை அரசு தருவதற்கு தயாராக இல்லை என்பது பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றி வருவதாக அனைவருடைய கணிப்பீடுகளும் இருந்தாலும், உண்மையும் அதுபோலவே தொடர்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய அண்மைக்காலச் செயற்பாடுகள் அணைந்தும் தமிழ் மக்களுடைய அபிலாசைகளை குழி தோண்டிப் புதைக்கும் ஒரு செயற்பாடாகவே இருக்கின்றது. போராட்டம் அமுலில் இருக்கும் போது ஒரு அரசியலும், போராட்டம் முடிவுக்குக் கொண்டு வந்த பின் ஓர் அரசியலுமாகவே இருக்கின்றது.
தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழம் என்ற ஒரு கோரிக்கையுடனேயே போராட்டத்தை முன்னெடுத்தனர். அந்த நிலைப்பாட்டை தற்பொழுது நடைமுறைப்படுத்தமுடியாது. ஆகவே அதற்கான மாற்று வழி என்கின்ற பொழுது அரசியல் நீரோட்டத்தில் தான் பயணிக்கவேண்டிய தேவை உள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப் போன்ற கட்சிகளும் ஒற்றுமையாக ஒரு குடையின் கீழ் தேர்தலில் போட்டியிட்ட காலமும் உண்டு. ஆனால் அந்த ஒற்றுமை நீண்ட நாட்களுக்குச் செல்லவில்லை. காரணம் சிங்களப் பேரினவாத அரசியல் தலைமைகள் ஒருபோதும் தமிழ் அரசியல் தலைமைகளை ஒரு குடையின் கீழ் நின்று செயற்பட அனுமதித்ததில்லை. ஏதோவொரு வகையில் துண்டாடும் செயற்பாடுகளையே இவர்கள் செய்து வந்தார்கள். தனிப்பட்ட ரீதியாக இக்கட்சிகளின் தலைவர்கள் இதிலிருக்கும் உறுப்பினர்கள் விமர்சிக்கப்படுவது வழமை. இதில் இவர்கள் பாலியல் ரீதியாகவும் அரசியல் லஞ்சம் பெற்றவர்களாகவும், பணமோசடியாளர்களாகவும், காட்டிக்கொடுத்த துரோகிகளாகவும் மாறி மாறி மக்கள் மத்தியில் அடையாளப்படுத்துவதால் யார் தமிழினத்தின் விடிவிற்காக விடுதலைக்காக உண்மையில் குரல் கொடுப்பவர்கள் என்பது கண்டறியமுடியாத ஒரு சூழல் ஏற்பட்டு காலத்துக்கு காலம் அவர்களுடைய அரசியல் செயற்பாடுகளை வைத்தே யாருக்கு வாக்களிப்பது என்றதொரு நிலைப்பாட்டை எடுக்கவேண்டியதொரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் தான் இன்று சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் தமிழினத்தை ஏமாற்றி வருவதாக அதிலிருந்து விலகிச் சென்ற ஈபிஆர்எல்எப், தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்கள் முன்னணி தற்பொழுது முதலமைச்சர் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி இன்று அரசியல் களத்தில் தனித்தனியாக தீவிரமாக அரசியலில் இறங்கியுள்ளனர். இதன் மூலமாக தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க முடியுமாக இருந்தால் இவருக்கு ஆதரவளிப்பதில் தவறில்லை. தற்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக அரசியலில் களமிறங்கியிருக்கும் இவர்கள் அரசாங்கத்தின் பின்னணியில் இருந்து செயற்படுகின்றனர் என்பது ஒருவகைக் கருத்து. எது எவ்வாறாக இருப்பினும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டம் வென்றெடுக்கப்படமுடியாத நிலையில் கீழ் குறிப்பிடப்பட்ட விடயங்களை இந்தக் கட்சிகள் நடைமுறைப்படுத்துமாக இருந்தால் அல்லது அதனை வென்றெடுப்பார்களாக இருந்தால் மக்கள் ஆதரவை வென்றெடுக்க முடியும்.

1. தேசியம், சுயநிர்ணய உரிமை.
2. பொலிஸ் மற்றும் காணி அதிகாரம்
3. அரசியல் கைதிகள் விடுதலை.
4. பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படுதல்.
5. இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரனை.
6. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடுதலை விவகாரம்;.
7. வட-கிழக்கு இணைப்பு

 

இவ்விடயங்களுக்கானத் தீர்வினை அரசாங்கம் ஒரு போதும் வழங்கப்போவதில்லை. ஒற்றையாட்சியின் கீழ் தீர்வு கிடைக்கும் என்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் ஒற்றையாட்சியின் கீழ் தான் தீர்வு என்று அரசாங்கம் கூறுகின்றது. தொடர்ந்தும் இவ்வாறான மாறுபட்ட கருத்துக்களே தமிழ் இனப் போராட்டம் இவ்வாறான ஒரு நிலையை எட்டுவதற்கு காரணமாக இருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை என்பது பாராளுமன்றத்திலும் நிரூபித்துக் காட்டப்பட்டிருக்கின்றது. ஆகவே இந்த ஒற்றுமையை உடைத்து வட-கிழக்கில் ஒரு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதென்பது எந்த வகையில் சாத்தியமாகும் என்பதற்கு அப்பால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களைப் பொறுத்தவரையில் ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதன் பேச்சாளராக இருந்தவர். அதுபோன்று ஈபிஆர்எல்எப் கட்சியின் உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராக இருந்தவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நியமிக்கப்பட்ட ஒருவர் தான் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். இந்த மூவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒவ்வொரு அரசியல் விடயங்களையும் நன்கு அறிந்தவர்கள்.

ஒருபுறத்தில் இவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்ற துரோகிகள் என்று கூறப்பட்டாலும் மக்கள் மத்தியில் தமக்கான ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு விலகி தனித்துப் போட்டியிடுகின்ற பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு ஆசனங்களைத் தவிர ஏனைய ஆசனங்களை இழக்கும் சந்தர்ப்பம் உருவாகும்;. குறிப்பாக ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஒரு ஆசனத்தைக் கைப்பற்றுவார். அதே போன்று விஜயகலா மகேஸ்வரன் ஒரு ஆசனத்தை கைப்பற்றுவார். முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒரு ஆசனம், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஒரு ஆசனம், மிகுதி இரண்டு ஆசனம் யாருக்கு என்பதும் கேள்விக்குறி ஆக்கப்படும்.

அனந்தி சசிதரனைப் பொறுத்தவரையில் (ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம்) கடந்த வடமாகாண சபைத் தேர்தலில் வடமாகாணத்தில் என்பதாயிரம் வாக்குகளைப் கைப்பற்றியதால் இவருடைய போட்டித் தன்மையும் அங்கு காணப்படும். புளொட் சித்தார்த்தனைப் பொறுத்தவரையிலும் அவரும் தனக்கான ஒரு வாக்கு வங்கியினை வைத்திருக்கின்றார். அருந்தவபாலன் அவர்களுடைய அரசியல் நகர்வுகளையும் அவருடைய வாக்கு வங்கி பலத்தையும் நாங்கள் குறைவாக மதிப்பிட முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கக் கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களைப் பொறுத்தவரையில் மாவை சேனாதிராஜா, சரவணபவான், சுமந்திரன், சிறீதரன் இவர்களுள் யார் ஆசனத்தைக் கைப்பற்றுவார்கள் என்பது அடுத்தபோட்டி. இதே நேரம் தமிழ் மக்களுடைய அபிலாசைகளை தமிழத் தேசியக் கூட்டமைப்பு வெல்வதற்கு முயற்சி செய்யவில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. அது எவ்வாறு எனின் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பான விமர்சனங்கள். குறிப்பாக இவ் விமர்சனத்தை சுமந்திரன் அவர்களே முன்னெடுத்து வருகின்றார். இவரது விமர்சனம் என்பது ஒட்டுமொத்த தமிழ் தேசியக்கூட்டமைப்பினுடைய விமர்சனம் இல்லை என்பதையும் தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அல்லது தமிழரசுக் கட்சியினுடைய இருப்பை இல்லாதொழிக்கும் ஒரு செயற்பாடாகவே தற்பொழுது களமிறக்கி இருக்கின்ற இந்த மும்மூர்த்திகளுடைய செயற்பாடுகள் அமையப்பெறுகின்றது. ஒரு வேளை இந்த மும்மூர்த்திகளுடைய பலம் வலுப்பெறுகின்ற பொழுது புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எப் போன்ற கட்சிகளும் இணைய வாய்ப்பிருக்கின்றது. ஆகவே இதுவரையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது பதிவு செய்யப்படவில்லை. இம் மூவருடைய கூட்டானது ஒரு வேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படுவதற்கு ஏதுவாக அமைந்து விடலாம். ஆகவே இதில் ஒரு விடயம் மட்டும் உண்மை. என்னவெனில் தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சின்னாபின்னமாக உடைக்கப்படும். ஏனைய ஆயுதக்கட்சிகளின் தலைவர்களும் மறைமுகமாக இதற்கு ஆதரவு வழங்குகின்றனர். தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் வரை தமிழீழ விடுதலைப்புலிகளுடைய அரசியல் கட்டமைப்பு இந்த நாட்டில் செயற்படுவதென்பது கேள்விக்குறி.

ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக களமிறக்கப்படுகின்ற இக்கட்சிகளானது அரசாங்கத்தின் பின்னணியில் செயற்படுகின்றதா என்றதொரு விமர்சனமும் எழுப்பப்படுகின்றது. இது எவ்வாறாக இருப்பினும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் ஒரு கட்சியாக உருவாக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் முன்னெடுக்கப்படுமாயின் அது வரவேற்கத்தக்கது அல்லது இருக்கக்கூடிய தமிழரசுக் கட்சியின் கரங்களைப் பலப்படுத்துவதன் மூலம் இக் ஆட்சியில் இருக்கக்கூடிய அரசியல் தலைவர்கள் எவர் எவர் தமிழ்த் தேசியத்துக்கு எதிராகச் செயற்படுகின்றார்களோ அவர்களை மாற்றியமைத்து அல்லது கட்சியிலிருந்து விலக்கி சிறந்த ஒரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக கட்டியெழுப்புவதன் ஊடாக வடக்கிலும் கிழக்கிலும் அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒரு குடையின் கீழ் நின்று தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை வென்றெடுக்கலாம். தமிழ் தலைவர்களின் பிளவு என்பது எதிர்காலத்தில் தமிழினமே வாழ்ந்த வரலாறு இல்லாது போய்விடும் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

இரணியன்