உலகக்கோப்பை அணியில் இடம்பிடிக்க போட்டி போடும் வீரர்கள்

உலகக்கோப்பை அணியில் இடம்பிடிக்க போட்டிபோடும் ரி‌ஷப் பந்த், விஜய் சங்கர், ரகானே

12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்து நடக்கிறது. இந்தப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெற போகும் வீரர்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

இந்த நிலையில் உலகக்கோப்பை அணியில் இடம்பிடிக்க ரி‌ஷப் பந்த், விஜய் சங்கர், ரகானே ஆகியோர் கடும் போட்டியில் உள்ளனர் என்று தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

அணிகளை தேர்வு செய்ய ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) விதித்துள்ள கடைசி தேதியான ஏப்ரல் 23-ந்தேதிக்குள் 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்ய வேண்டிய நிலைமை தேர்வு குழுவுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்திய அணியில் 4-வது இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்வது யார் என்பதுதான் இதுவரை முடிவு செய்யவில்லை. மற்ற அனைத்து இடத்திற்கான வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று இந்திய அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க ரி‌ஷப் பந்த், விஜய் சங்கர், ரகானே ஆகியோர் கடும் போட்டியில் உள்ளனர்.

ரி‌ஷப் பந்தின் ஆட்டம் கடந்த ஒரு ஆண்டாகவே மிகவும் சிறப்பாக உள்ளது. அவர் தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளார். 3 நிலை போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுகிறார். விஜய் சங்கர் பேட்டிங் ஆல்ரவுன்டர் வரிசையில் இருக்கிறார்.

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் சிறப்பாக ஆடினார். ரகானே உள்ளூர் போட்டியில் சிறப்பாக ஆடி வருகிறார். இந்த 3 பேரும் உலககோப்பை அணியில் இடம்பிடிக்க கடும் போட்டியில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா 5 முறையும், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா 2 முறையும் கைப்பற்றியுள்ளன. பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா 1 முறையும் வென்றுள்ளன.

About Thinappuyal News