சிறுமி ஒருவரை நீண்டகாலமாக பல தடவைகள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய  நபர் ஒருவருக்கு 60 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குறித்த  வழக்கை நேற்று விசாரணைக்கு கொண்டு வந்த நிலையில்,  தங்காலை மேல் நீதிமன்றம் குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஹுங்கம பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கடந்த 2016 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 13 வயது சிறுமியை பல தடவைகள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.

குறித்த சிறுமியின் பெற்றோர் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்தமைக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு குறித்த நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்றைய தினம் நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியது.

57 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையான குறித்த நபருக்கு 60 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 இலட்சம் ரூபா நட்ட ஈடு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.