ஒன்பிளஸின் புதிய அறிமுக திட்டம்

புதிய டி.வி. மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய ஒன்பிளஸ் திட்டம்

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் தனது ஸ்மார்ட்போன்களை மே முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த வழக்கத்தை மாற்றிக் கொள்ள ஒன்பிளஸ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் ஒன்பிளஸ் நிறுவனம் புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான அழைப்பிதழ்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவ்விழாவில் ஒன்பிளஸ் புதிய டி.வி.யை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஒன்பிளஸ் டி.வி.யில் 4K டிஸ்ப்ளே, ஹெச்.டி.ஆர். வசதி மற்றும் ஏ.ஐ. அசிஸ்டண்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய டி.வி. பற்றி ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரியான பீட் லௌ ஏற்கனவே தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒன்பிளஸ் டி.வி. தவிர ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதே பிராசஸர் லெனோவோ இசட்5 ப்ரோ ஜி.டி. ஸ்மார்ட்போனிலும் வழங்கப்பட்டிருக்கிறது. ஒன்பிளஸ் 6 மற்றும் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன்களின் கேமரா எதிர்பார்த்த அளவு சிறப்பானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு பெருமளவு எழுந்திருந்ததால், புதிய ஸ்மார்ட்போனின் கேமரா அம்சம் அதிகளவு மேம்பட்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.
அந்தவகையில் ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனில் சோனியின் 48 எம்.பி. IMX 586 சென்சார் வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்திய ஸ்மார்ட்போன்களில் 48 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படுவது வாடிக்கையாகி இருப்பதால், புதிய ஸ்மார்ட்போனில் ஒன்பிளஸ் இதேபோன்ற கேமரா வழங்கலாம்.

About Thinappuyal News