மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில், ஜோ ரூட் சதத்தால் இங்கிலாந்து அணி 448 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.
மேற்கிந்திய தீவுகள்-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி செயிண்ட் லூசியாவில் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 277 ஓட்டங்களும், மேற்கிந்திய தீவுகள் அணி 154 ஓட்டங்களும் எடுத்தன.
பின்னர் 123 ஓட்டங்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய ஆட்டநேர முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 19 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று 3ஆம் நாள் ஆட்டத்தை இங்கிலாந்து ஆடியது. பர்ன்ஸ் 10 ஓட்டங்களிலும், ஜென்னிங்ஸ் 23 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த ஜோ டென்லி, ஜோ ரூட் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அணியின் ஸ்கோர் 147 ஆக உயர்ந்தபோது டென்லி 69 ஓட்டங்களில் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து பட்லர் களமிறங்கினார். இந்த ஜோடி கணிசமான அளவு ஓட்டங்களை குவித்தது.
பட்லர்-ரூட் பார்ட்னர்ஷிப் 100 ஓட்டங்களை கடந்த நிலையில், கேமர் ரோச் பந்துவீச்சில் பட்லர் 56 ஓட்டங்களில் அவுட் ஆனார். இதற்கிடையில் கேப்டன் ஜோ ரூட் தனது 16வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார்.
இங்கிலாந்து அணி 3வது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 324 ஓட்டங்கள் எடுத்துள்ளது. மேலும் 448 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜோ ரூட் 111 ஓட்டங்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 29 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.