தாக்குதலுக்கு காரணமான வீரருக்கு ஆயுட்கால தடை

அமித் பண்டாரி மீதான தாக்குதலுக்கு காரணமான வீரருக்கு ஆயுட்கால தடை
சையது முஸ்தாக் அலி 20 ஓவர் போட்டிக்கான டெல்லி அணி வீரர்கள் டெல்லி கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்டனர். வீரர்களின் பயிற்சியை டெல்லி கிரிக்கெட் சங்க தேர்வு குழு தலைவரும், இந்திய கிரிக்கெட் அணிக்காக 2 ஒருநாள் போட்டியில் விளையாடிய முன்னாள் வீரருமான அமித் பண்டாரி பார்த்து கொண்டு இருந்தார். அப்போது ஸ்டேடியத்துக்குள் வந்த 2 பேர் அமித் பண்டாரியுடன் ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து வெளியேறி சென்றனர்.

சற்று நேரத்தில் அடையாளம் தெரியாத 15 பேர் கொண்ட கும்பல் ஸ்டேடியத்துக்குள் நுழைந்து அமித் பண்டாரியை இரும்பு கம்பி, ஆக்கி மட்டை மற்றும் சைக்கிள் செயினால் சரமாரியாக தாக்கினர். அதனை தடுக்க முயன்றவர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்று விடுவோம் என்று மிரட்டல் விடுத்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

தாக்குதலில் தலை மற்றும் உடலின் பல பகுதிகளில் காயம் அடைந்த 40 வயதான அமித் பண்டாரி அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் உடனடியாக சேர்க்கப்பட்டார். தலையில் 4 தையல் போடப்பட்ட அவர் மாலையில் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்ஜார்ஜ்’ செய்யப்பட்டார். சமீபத்தில் நடந்த 23 வயதுக்கு உட்பட்ட டெல்லி அணி தேர்வில் அனுஜ் டேதா என்ற வீரர் தேர்வு செய்யப்படாததால் எழுந்த பிரச்சினையில் இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நடந்த சம்பவம் குறித்து அமித் பண்டாரியிடம் போலீசார் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். அத்துடன் குற்றவாளியாக கருதப்படும் அனுஜ் டேதாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் உடனடியாக கண்டனம் தெரிவித்தார். அத்துடன் சம்பந்தப்பட்ட வீரருக்கு ஆயுட்கால தடை விதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக், தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் உள்பட பலரும் டுவிட்டர் மூலம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் ரஜத் பாட்டியா நேற்று கருத்து தெரிவிக்கையில், ‘இந்த விவகாரத்தில் ஷேவாக், கம்பீர் ஆகியோரின் யோசனையை நான் ஏற்றுக்கொள்கிறேன். நாங்கள் அனுஜ் டேதாவுக்கு ஆயுட்கால தடை விதிப்போம். இந்த பிரச்சினை குறித்து டெல்லி கவர்னர் அனில் பைஜாலை சந்தித்து பேசினேன். இந்த விஷயத்தில் டெல்லி போலீசார் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கவர்னரிடம் வற்புறுத்தினேன்’ என்றார்.

About Thinappuyal News