மனிதனைப் போல் பனிச்சறுக்கு செய்யும் ரோபோ

சுவிட்சர்லாந்து நாட்டில் மனிதர்களைப் போல பனியில் ஸ்கேட்டிங் செய்ய ரோபோக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

வளர்ந்து வரும் பல உலக நாடுகளில் 3டி தொழில்நுட்பம், ரோபோக்களின் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. நாளுக்கு நாள் ரோபோக்களின் உருவாக்கமும், மனிதர்களுக்கு இணையான செயல்பாடுகளும் பல்வேறு நாடுகளில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அதன் ஒரு படியாக, சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு செய்யும் வகையிலான ரோபோட் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ரோபோ மனிதர்களைப் போல தானாகவே பனிச்சறுக்கில் ஈடுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எவ்வித இயக்கமும் இன்றி இந்த ரோபோ பனியில் செயல்பட பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த வகை ரோபோவை ஈடிஎச் ஜூரிச்சின் ரோபோட்டிக் ஆய்வக பேராசிரியர் ஸ்டெலியன் கோரோஸ் உருவாக்கியுள்ளார்.

இதன் பாகங்கள் 3டி தொழில்நுட்பத்தைக் கொண்டு பிரிண்டிங் செய்யப்பட்டவை. இதன் மூலம் எந்த பனிப்பரப்பிலும் விழாமல் செயல்பட இயலும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஸ்டெலியன் கோரோஸ் கூறுகையில்,

‘பனிச்சறுக்கில் ரோபோக்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை காணவே இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். குறிப்பாக இந்த ரோபோட்டின் கால்களில் இருக்கும் பிளேடு போன்ற அமைப்பு, பனியில் எந்த திசையிலும் மனிதர்களை போல மாற்றி ஸ்கேட்டிங் செய்ய இயலும்.

தற்போது ரோபோட்டின் கால் பகுதி மட்டும் உருவாக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. பின்னர் முழுவதுமாக வடிவமைக்கப்பட்டு தானாகவே எவ்வித இயக்கமும் இன்றி செயல்படுத்தப்படும். மேலும் இந்த ரோபோக்களுக்கு 4 கால்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இப்போது இருக்கும் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு ரோபோக்களின் பாகங்கள் சிரமமின்றி எளிமையாக தயாரிக்கப்படுகின்றன’ என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த வகையான ரோபோக்கள் பனிச்சறுக்கில் சிக்கியவர்களை தேடுவதற்கும், மீட்புப் பணிகளுக்கும், பனிச்சறுக்கில் ஈடுபடும் மக்களுக்கு உதவி செய்யவும் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

About Thinappuyal News