இளம் வீரர்களுடன் தென்னாபிரிக்காவை எதிர்கொள்கிறது இலங்கை

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டர்பனில் இன்று பிற்பகல் 1.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியானது தென்னாபிரிக்க அணியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் விளையாடவுள்ளது.

இதில் முதலாவதாக நடைபெறும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று டர்பனில் ஆரம்பமாகவுள்ளதுடன், இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.

இன்று களமிறங்கவுள்ள திமுத் கருணாரத்ன தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இலங்கை அணிக் குழாமில் நிரோஷன் திக்வெல்ல, லஹிரு திரிமன்ன, குசல் மெண்டீஸ், குசல் பெரேரா, தனஞ்சய டீசில்வா, கெளசல் சில்வா, சமிக்க கருணாரத்ன, கசூன் ராஜித, சுரங்க லக்மால் லக்ஷான் சந்தகன், ஒசாட பெர்ணான்டோ மிலிந்த சிறிவர்தன, விஷ்வ பெர்ணான்டோ, அஞ்சலோ பெரேரா, மொஹமட் சிராஸ் மற்றும் லஷித் எம்பிலிப்பிட்டிய ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

டூப்பிளஸிஸ் தலைமையிலான தென்னாபிரிக்க அணிக்குழாமில் டீகொக், எல்கர், மக்ரம், அம்லா, பவுமா, பிரைய்ன், பிலேண்டர், மஹாராஜ், ரபடா, ஸ்டெய்ன், ஜுபிர் ஹம்ஸா, முல்டர் மற்றும் ஒலிவர் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அணியை பொறுத்தவரையில் நடைபெற்று முடித்த நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட்  தொடரில் அணியின் ஆட்டம் மந்த கதியில் உள்ளதனால் கடும் விமர்சனங்களுக்குள்ளான நிலையில் உள்ளது.

அத்துடன் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராகவிருந்த தினேஷ் சந்திமாலும் நீக்கப்பட்டு திமுத் கருணாரத்னவுக்கு தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இன்று ஆர்பமாகவுள்ள போட்டியில் இளம் வீரர்கள் நால்வர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

தென்னாபிரிக்க மற்றும் இலங்கை அணிகள் இதுவரை 27 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் தென்னாபிரிக்க அணி 14 போட்டிகளிலும், இலங்கை அணி 6 போட்டிகளிலும் வெற்றி கொண்டுள்ளதுடன், 6 போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது.

இறுதியாக இவ்விரு அணிகளும் இலங்கை மண்ணில் விளையாடிய 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About Thinappuyal News