கோஹ்லியுடன் என்னை ஒப்பிட வேண்டாம் – பாபர் அசாம்

18

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வீரரான பாபர் அசாம், இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

இளம் வீரரான பாபர் அசாம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் தனது அபார ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 59 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர், 8 சதங்கள் உட்பட 2462 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

மேலும், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக முதல் 5 சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். அத்துடன் 20 ஓவர் போட்டிகளில் வேகமாக 1000 ஓட்டங்களை எட்டியவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இதன் காரணமாக பலரும் சமூக வலைதளங்களில் கோஹ்லியுடன், அவரை ஒப்பிட்டு வருகின்றனர். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், பாபர் அசாம் மிகச் சிறந்த ஆட்டக்காரர். இவர் உலகிலுள்ள மிகச் சிறந்த 5 துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் இடம்பெறுவார்.

2 ஆண்டுகளுக்கு முன்பு பாபர் அசாம், ஒரு வளர்ந்து வரும் இளம் ஆட்டக்காரராக இருந்தார். ஆனால், தற்போது அவர் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் நான் 2 ஆண்டுகளுக்கு முன்பு அசாமை கோஹ்லியுடன் ஒப்பிட்டது சரிதான் என தெரிவித்தார்.

இந்நிலையில் பாபர் அசாம் தன்னை கோஹ்லியுடன் ஒப்பிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘கோஹ்லி பல பெரிய சாதனைகளுக்கு சொந்தக்காரர்.

அவர் ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பல முக்கிய சாதனைகளை செய்துள்ளார். ஆனால், நான் தற்போது தான் என்னுடைய கிரிக்கெட் பயணத்தை தொடங்கியிருக்கிறேன்.

நான் சாதிக்க வேண்டியவை நிறைய உள்ளது. இதனால் என்னை யாரும் கோஹ்லியுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம்’ என தெரிவித்துள்ளார்.

SHARE