சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள்

 

இந்த வருடம் பிப்ரவரி மாதம் நான்காம் திகதி இலங்கை சோசலிச குடியரசு 71 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றது. இந்த நாட்டை ஒல்லாந்தர் போர்த்துக்கேயர் ஆங்கிலேயர் என பலரும் மாறி மாறி ஆட்சி செய்துள்ளனர். இக்கால கட்டத்தில் பல ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்கள் நடந்துள்ள போதிலும் மிக மிக மோசமான பின்விளைவுகளை இந்த நாடு சந்தித்துள்ளது.

காலனித்துவத்துக்கு முற்பட்ட இலங்கையில் பல இன மத மக்கள் வாழ்ந்தாலும் முரண்பாடுகள் வாழவில்லை. புரிந்துணர்வும் சகோதரத்துவமும் வேறுன்றி கிடந்தது. ஆனால் சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் அதிகரித்துள்ளன. அந்த முரண்பாட்டின் ஒரு கட்டம்தான் மூன்று தசாப்த காலம் இந்த நாட்டில் நடைபெற்ற யுத்தம். ஆனாலும் இந்த யுத்தம் முடிவடைந்தும் இந்த நாடு இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை கட்டியெழுப்புவதில் தோல்வியையே சந்தித்து வருகின்றது.

இந்த நாட்டில் வாழ்கின்ற இனங்களுக்கிடையிலான சமத்துவம் பேணப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு சகோதரத்துவமும் ஒற்றுமையும் என்று கட்டியெழுப்பப்படுகின்றது அன்றுதான் இந்த நாடு உண்மையான சுதந்திர தினத்தை கொண்டாட தகுதி உடையது.

காலனித்துவத்துக்கு முன்னாலுள்ள இலங்கையில் நாங்கள் கண்ட சகவாழ்வையும் சகோதரத்துவத்தையும் சுதந்திர இலங்கையில் ஏன் காண முடியாதுள்ளது? அவ்வாறாயின் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க காலனித்துவத்துக்கு முன்னரான இலங்கைக்கு நாங்கள் ஒரு சுற்றுலா சென்று வர வேண்டிய தேவை உள்ளது. உண்மையில் உண்மையான சுதந்திரத்தை அடைவதற்கு எது எமக்கு தடையாக உள்ளது என்பதனை இவ்வாக்கம் பேச முனைகின்றது.

முதலாவது நாம் எமது நாட்டின் பாரம்பரியங்களையும் எமது முன்னோர்களின் வாழ்க்கை முறையையும் வரலாற்றினூடாக நோக்க வேண்டும். இன்று உலகின் வல்லரசாக அமெரிக்கா தன்னைத் தானே சொல்லிக் கொள்கிறது. ஆனால் உலக வரைபடத்தில் அமெரிக்கா இடம் பிடிப்பதற்கு முன்னால் உலகில் பாரம்பரிய மிக்க தலைசிறந்த நாடாக இலங்கை இருந்துள்ளது. அனுராதபுர இராசதானி, பொலன்னறுவை ராஜதானி, சிகிாியா, மிக பிரமாண்டமான குளங்கள் என்று அபிவிருத்தி அடைந்து மிகப் பெரும் சாம்ராஜ்யமாக பண்டைய காலத்தில் இலங்கை திகழ்ந்துள்ளது என்பதற்கு இவைகள் மிகப்பெரிய சான்றாகும். ஜப்பானிற்கு அடுத்த பொருளாதார தரத்தில் இலங்கையின் பொருளாதாரம் இருந்துள்ளது என்பதாக சில வரலாற்று குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன.

அன்று உலகின் பொருளாதார ஜாம்பவான்களாக விளக்கிய அரபிகளுடன் பாரிய வர்த்தக தொடர்புகளை இலங்கை கொண்டிருந்தது. அதே போன்று விவசாய உற்பத்திகள் அதிகளவில் நடைபெற்றது. ஏற்றுமதி துறையில் இலங்கை முன்னிலை வகித்தது. ஒரு மழை துளியையும் பயன்படாமல் கடலை சென்றடைய விட மாட்டேன் என்ற மன்னர் பராக்கிரமபாகுவின் வாசகங்களை படிக்கும் போது இன்றும் மை சிலிர்க்கின்றது.

ஆனால் ….
இன்றைய நிலை…?
இன்றும் இலங்கை விவசாய நாடுதான். ஆனால் அரிசியை இந்தியாவிடமிருந்தும் சீனாவிடம் இருந்தும் இறக்குமதி செய்கின்றது. இலங்கை நாலாபுறமும் நீரால் வடிவமைக்கப்பட்ட ஒரு தீவு. ஆனால் டின் மீன்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கின்றது.

ஏன் இந்த நிலை…? இலங்கையில் நடந்த காலணித்துவ ஆதிக்கம் எம்மை பலவீனப்படுத்தி விட்டது. எமது வளங்கள் சுரண்டப்பட்டு எமது முன்னேற்றம் முடக்கப்பட்டது.

நாம் சமகாலத்தில் எமது கண்களால் பார்த்த சம்பவம்தான் உலகில் பிணங்களை பணம் கொடுத்து வாங்கும் ஒரு நாடு இருந்தால் அது ஈராக்தான். 2003ம் ஆண்டு அதன் மீது தொடுக்கப்பட்ட ஆக்கிரமிப்பு பினங்களை அந்த நாட்டில் கொத்து கொத்தாய் குவித்தது. பணக்கார நாடான ஈராக்கின் இன்றைய நிலையை பார்க்கும் போது எமது நாட்டின் அன்றைய நிலை மனக்கண் முன் திரையோடுகின்றது.

உலகின் மிக சிறந்த பொருளாதார வளமிக்க இலங்கை அதனுடைய பாரம்பரியம், முன்னேற்றம் எல்லாம் காலணித்துவவாதிகளால் சின்னாபின்னமாக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளாக இலங்கையில் தொடர்ந்த காலணித்துவம் மக்கள் எழுச்சியூடாக அதற்கெதிரான போராட்டங்களினூடாக வெளியேற்றப்பட்டது. காலணித்துவத்தை இலங்கையிலிருந்து துடைத்தெரித்து விட்டோம், இலங்கை சுதந்திரமடைந்து விட்டது என்று தம்பட்டம் அடித்தோம். ஆனால் இன்று வரை விடுபடாத காலணித்துவம் ஏராளம் இருக்கின்றது. இந்த கோணத்தில் தான் ஜனநாயகத்தையும் பார்க்க வேண்டி இருக்கின்றது.

காலணித்துவத்திற்கு முற்பட்ட காலத்தில் எமது நாட்டில் பல இனங்கள், மதங்கள் காணப்பட்டன. ஆயினும் எங்காவது இனக்கலவரத்தால், மதக்கலவரங்கள் மூண்டதனை வரலாற்றில் காண முடிகின்றதா? இலங்கையிலுள்ள பாவாதமலை ஆதிகாலம் தொட்டு பல மதத்தவர்களாலும் தரிசிக்கப்படுகின்ற ஒரு இடமாக இருந்து வருகின்றது. பல மதத்தவர்களும் அதில் உரிமை கோருவதால் என்றாவது கலவரங்கள் வெடித்த நிகழ்வுகளை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆங்கிலேயர்களால் துரத்தி வரப்பட்ட எமது நாட்டு சிங்கள மன்னனை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய ஒரு முஸ்லிம் பெண். அதே போன்று இன்று பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும் பிரதேசம் சிங்கள மன்னர்களால் அன்பளிப்பு செய்யப்பட்டது. இவைகள் மதங்களிற்கு இடையிலும் இனங்களிற்கு இடையிலும் ஒற்றுமையை எடுத்துக் காட்டுகின்றது. அன்று மதங்களின் பெயராலும், இனங்களின் பெயராலும் மனங்கள் பிரியவில்லை. ஒற்றுமையாக சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்தார்கள். ஏன் தெரியுமா? இன்று இருக்கும் அரசியல், ஆட்சி முறை அன்று இருக்கவில்லை.
துர நோக்குடன் சிந்திக்கின்ற பக்குவமும் எமது நாட்டு மக்களிடம் இன்னும் வளரவில்லை.

ஒரு நாட்டின் அபிவிருத்தி, வளர்ச்சி, நாட்டு மக்களிற்கிடையான ஒற்றுமை, மதங்களிற்கிடையான சக வாழ்வு என்பதனை கட்டியெழுப்புவதில் அரசாங்கத்தின் பங்கு மகத்தானது. ஒரு நாட்டின் வெற்றியின் பெரும் பங்கு அந்த நாட்டு அரசாங்கத்தின் செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது.

இலங்கையில் மதம் இனம் மொழி என்பவற்றிற்கு அப்பால் நாட்டின் அபிவிருத்தியை இலக்காய் கொண்டு நாம் அனைவரும் ஒரே நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் ஒன்றுபட வேண்டிய தேவை உள்ளது. அது எப்பொழுது சாத்தியம்? இனங்களிற்கு இடையிலும் மதங்களிற்கு இடையிலும் பிரிவினையை ஏற்படுத்தி நாட்டு மக்களை கூறு போடுகின்ற அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

நாம் அனைவரும் கற்பனை பண்ண வேண்டிய இலங்கை காலணித்துவத்திற்கு முன்னால் இருந்த இலங்கையையே. அன்று மதங்களிற்கு இடையில் சகவாழ்வு இருந்து. இனங்களிற்கு இடையில் ஒற்றுமை இருந்தது. சகோதரத்துவ வாஞ்சை இருந்தது. பொருளாதாரத்தில் அபிவிருத்தி அடைந்த நாடாக இருந்தது. நாட்டு வளங்கள் முறையாக பயன்படுத்தப்பட்டு உச்ச பயன் பெறப்பட்டது.

ஆகவே வளமான இலங்கையை கட்டியெழுப்புவதில் எமது முன்னோர்களின் வழிமுறையை கண்டறிந்து பின்பற்றுவது அவசியமாக இருக்கின்றது.

அரசாங்கம் நாட்டின் அபிவிருத்திக்கும் கல்வி முன்னேற்றத்திற்கும் பல கோடி ரூபாக்களை செலவளிக்கின்றது. ஆனால் பயணிக்கும் பாதை மாயமாய் இருக்கின்றது.

இன்று எமது நாட்டில் தலை சிறந்த அறிஞர்கள், மட்டன்கள், சமூக ஆர்வளர்கள் என்று மிகப் பெரிய வளங்களை கொண்டிருக்கின்றோம். இவர்களினூடாக தூர நோக்குடன் கூடிய புதியதோர் இலங்கையை கட்டியெழுப்ப முனையலாம்.
ஆகவே நாங்கள் தொடர்ந்தும் காலனித்துவத்துவ சிந்தனையில் இருக்காமல் இன மத ஐக்கியத்துடன் இந்த நாட்டுக்கு பொருத்தமான ஒரு ஆட்சி முறையை கட்டியேழுப்ப முனையவேண்டும். அதனூடாகவே சிறந்ததொரு அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கி புதியதொரு இலங்கையை படைக்கலாம்

About Thinappuyal News