படையினருக்கு பெரும் நிதி: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஒன்றுமில்லை – டக்ளஸ் தேவானந்தா எம்.பி

 

படையினருக்கு பெரும் நிதி: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஒன்றுமில்லை – டக்ளஸ் தேவானந்தா எம்.பி.

நல்லாட்சி அரசாங்கம் என்று கூறிய ஆட்சியாளர்களும், இந்த அரசாங்கத்தை தாமே ஆட்சிக்குக் கொண்டுவந்தவர்கள் என்றும், தாமே தற்போதும் ஆட்சியை முண்டு கொடுத்து பாதுகாத்துக் கொண்டிருக்கின்றோம் என்றும், தமது ஆலோசனைகளின் அடிப்படையிலேயே அமைச்சரவைத் தீர்மானங்களும், வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளும் தீர்மானிக்கப் படுவதாகக் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் 2019 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் படையினருக்கும், அவர்களின் சேம நலன்களுக்குமே பெருந்தொகைப் பணத்தை ஒதுக்கீடு செய்திருக்கின்றார்கள் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது, யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும், சமூகத்தில் பல துயரங்களைச் சுமந்து வாழும் அனைத்து முன்னாள் தமிழ் போராளிகளுக்கும் இந்த வரவு செலவுத்திட்டத்தில் எவ்விதமான உதவிகளும் முன்மொழியப்படவில்லை.

படையினரின் நலன்களுக்கும் அவர்களின் குழந்தைகளின் எதிர்காலம் என்றெல்லாம் சிந்தித்த அரசாங்கமும், அதற்கு முண்டு கொடுப்பவர்களும் யுத்தப் பாதிப்புகளுக்கு முகம் கொடுத்து வடக்கு, கிழக்கில் வாழும் அங்கவீனமானவர்களையும், அநாதரவானவர்களையும், கைம்பெண்களை சிந்தித்துப் பார்க்கவில்லை.

இவ்வாறு தமிழ் மக்களை தோற்கடிக்கப்பட்டவர்களாகவும், இரண்டாந்தரப் பிரஜைகளாகவும் நடத்தும் அரசுகளால் எவ்வாறு இனங்களுக்கிடையே உண்மையான தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்?

அரசின் வெற்றுக்கோஷமான தேசிய நல்லிணக்கத்தை ஏற்றுக்கொள்ளவோ, தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை காட்டிக்கொடுத்து சுயலாப அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை மன்னிப்பதற்கோ தமிழ் மக்கள் இனியும் தயாராக இல்லை என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Thinappuyal News