ஐ.பி.எல் முக்கிய பங்கு வகிக்கும் – கிரிக்கெட் வாரியம்

உலக கோப்பை தேர்வில் ஐ.பி.எல் முக்கிய பங்கு வகிக்கும் - கிரிக்கெட் வாரியம் தகவல்

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே மாதம் 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதிவரை இங்கிலாந்தில் நடக்கிறது.

இந்தப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை ஏப்ரல் 20-ந்தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும். 15-ந்தேதி முதல் 20-ந்தேதிக்குள் வீரர்களை தேர்வு செய்ய கிரிக்கெட் வாரியமும், தேர்வு குழுவும் தீவிரமாக இருக்கிறது.

உலக கோப்பை போட்டிக்கு முன்பு ஐ.பி.எல். ஆட்டங்கள் வருகிற 23-ந்தேதி தொடங்கி மே 2-வது வாரம் வரை நடைபெறும்.

இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை சொந்த மண்ணில் 2-3 என்ற கணக்கில் இழந்தது. அப்போது கேப்டன் விராட் கோலி கூறும் போது “ஐ.பி.எல். போட்டியில் வீரர்களின் செயல்பாடு உலக கோப்பை அணி தேர்வில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கூறி இருந்தார்.

ஆனால் இதற்கு மாறாக ஐ.பி.எல். போட்டி உலக கோப்பை தேர்வில் முக்கிய பங்கு வகிக்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4-வது நிலை பேட்ஸ்மேன், 2-வது விக்கெட் கீப்பர் இடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்படுத்தி உள்ளது.

4-வது வரிசை பேட்ஸ்மேன் இடத்துக்கு ரகானே, அம்பதி ராயுடு, ஷிரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் ஆகியோர் போட்டியில் உள்ளனர். ஐ.பி.எல்.லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர் 4-வது வரிசைக்கு தேர்வு செய்யபடுவார்.

ஆஸ்திரேலிய தொடரிலும் இந்த வரிசையை நிரப்ப முடியவில்லை.

தமிழகத்தை சேர்ந்த ஆல் ரவுண்டர் விஜய்சங்கரை உலக கோப்பையில் 4-வது வீரர் வரிசைக்கு பயன்படுத்தும் திட்டத்தையும் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்ய இருக்கிறது. ஐ.பி.எல்.லில் முதல் 3 வாரம் நடைபெறும் போட்டியின் முடிவில் இது குறித்து தீர்மானிக்கப்படும்.

டோனிக்கு அடுத்து 2-வது விக்கெட் கீப்பருக்கான போட்டியில் ரி‌ஷப்பந்த், தினேஷ் கார்த்திக் உள்ளனர்.

தினேஷ்கார்த்தி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் நீக்கப்பட்டார். இதனால் அவருக்கான வாய்ப்பு குறைவே. ரிசப்பந்த் உலக கோப்பையில் தேர்வு செய்யப்படுவார். அவரை உலக கோப்பை 4-வது வீரர் வரிசையில் களம் இறக்கலாம் என்று கங்குலி, ரிக்கி பாண்டிங் ஆகியோர் யோசனை தெரிவித்துள்ளனர்.

About Thinappuyal News