சொந்த ஊரில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியை பதம்பார்த்த டில்லி கெபிட்டல்ஸ் அணி

சொந்த ஊரில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியை பதம்பார்த்த டில்லி கெபிட்டல்ஸ் அணி, தவானின் சிறப்பான துடுப்பாட்டத்தின் உதவியுடன் 7 பந்துகள் மீதமிருக்க 7 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றது.

கொல்கொத்தா அணியின் கோட்டையான கொல்கொத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் முதலாவது வரலாற்று வெற்றியை டில்லி கெபிட்டல்ஸ் அணி பதிவுசெய்தது.

இவ்விரு அணிகளுக்கிடையே கடந்த 30 ஆம் திகதி டில்லியில் இடம்பெற்ற போட்டியில் டில்லி அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றிருந்தது.

இந் நிலையில் இன்றைய தினம் தனது செந்த ஊரில் பழி தீர்க்க வேண்டும் என்ற முனைப்புடன் கொல்காத்தா அணி களமிறங்கியது.

6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 2 தோல்விகளை சந்தித்துள்ள கொல்கத்தா அணி, இதற்கு முதல் இடம்பெற்ற போட்டியில் சென்னைக்கு எதிராக வெறும் 108 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

டில்லி கெப்பிட்டல்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி  3 வெற்றி, 3 தோல்வி என்று இதுவரை 6 புள்ளிகளைப் பெற்று ஆறாவது இடத்தில் உள்ளது.

கடந்த ஆட்டத்தில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வெற்றிகொண்டிருந்தது டில்லி கெப்பிட்டல்ன்ஸ் அணி.

இவ்விரு அணிகளும் இதுவரை 22 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா அணி 13 போட்டிகளிலும் டில்லி அணி 8 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதுடன், ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்திருந்தது.

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 26 ஆவது லீக் போட்டி இன்றிரவு (12.04.2019) 8.00 மணிக்கு கொல்கொத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் ஆரம்பமாகியது.

இதில் டினேஸ் கார்த்திக் தலைமையிலான கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டில்லி கெபிட்டலஸ் அணியும் மோதின.

இன்றைய போட்டியில் தனது சொந்த ஊரில் விளையாடிய கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி போட்டியில் வெற்றிபெறுமென பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற டில்லி கெபிட்டல்ஸ் அணியின் தலைவர் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் கொல்கொத்தா நைட்ரைடர்ஸ் அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார்.

அதன்படி முதலாவதாக துடுப்பெடுத்தாடிய கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களை குவித்தது.

இரு அணிகளுக்குமிடையிலான இப் போட்டி இறுதிவரை பரபரப்பாக நகர்ந்தது.

கொல்கொத்தா அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய சுகுப்மன் ஜில் 64 ஓட்டங்களையும் அன்று ரசல் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் டில்லி கெபிட்டல்ஸ் அணி சார்பாக கிறிஸ் மொறிஸ், ரபடா மற்றும் போல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 179 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டில்லி கெபிட்டல்ஸ் அணி 7 பந்துகள் மீதமிருக்க 3 விக்கெட்டுகளை மாத்திரமிழந்து 7 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றது.

டில்லி கெபிட்டல்ஸ் அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய சிகர் தவான் இறுதிவரை ஆட்டமிழக்காது 97 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். அத்துடன் டில்லி அணியின் பன்ட் 46 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் கொல்கொத்தா அணி சார்பாக கிருஷ்ணா, ரசல் மற்றும் ரனா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக டில்லி கெபிட்டல்ஸ் அணியின் சிகர் தவான் தெரிவுசெய்யப்பட்டார்.

About User2