ஒரு இனத்தை முழுமையாக நாங்கள் தீவிரவாதியாகப் பார்ப்பது தவறான ஒரு விடயம் – சிறி ரெலோ கட்சிஉதயராசா

34

இன மத பேதம் இன்றி அனைவரும் ஒன்றினைந்து இந்த தீவிரவாதிகளை அடையாளம் கண்டு அழிக்கவேண்டிய நிலைமைக்கு இலங்கை வாழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதை அரசியல் வாதிகளும் அரசியல் இலாபம் தேடாது இந்த நாட்டின் இறையான்மையைச் சிந்தித்து இந்த நாடு இருக்கக் கூடிய நிலைமையில் எவ்வாறு இந்த மக்களை நாங்கள் பாதுகாப்பான வாழ்க்கையை நோக்கிச் செல்லக்கூடிய ஒரு ஊகமான நிலமையை உருவாக்குவது சம்பந்தமாகச் சிந்திப்பது அவசியம் இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு சரியான விதத்தில் இலங்கையில் இருக்கக் கூடிய பாடசாலைகள் பெரும்பாலானவை இயங்காத நிலையில் இருக்கின்றது. இந்த நிலைமை மாறவேண்டும். அணைத்து இன மக்களும் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு முதல் இலங்கையில் இருந்த பாதுகாப்பான வாழ்க்கை உருவாகவேண்டும். இதனை அனைத்து அரசியல் வாதிகளும் உணர்ந்து தங்களின் இனங்களுக்கு சார்பாகக் கதைப்பதாக நினைத்து தீவிரவாதிகளுக்கு ஆதரவான பேச்சுக்களை மக்கள் பிரதிநிதிகளாக இருக்கின்ற நீங்கள் இவ்வாறான அரசியலை முதலில் தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்பது இந்த சிறி ரெலோ கட்சியின் சார்பாக செயலாளர் ஆகிய நான் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

அண்மையில் பாராளுமன்றத்தில் காணக்கூடியதாக இருந்தது. பல அரசியலில் இலங்கையில் இருக்கக் கூடிய ஒட்டுமொத்த முஸ்லீம்களையும் தீவிரவாதி என்ற நிலைப்பாட்டிலும், ஒரு சிலர் எல்லா முஸ்லீம்களும் தீவிரவாதிகள் இல்லை என்ற நிலைப்பாட்டிலும் இனங்களுக்கான ஒரு முறுகல் நிலை உருவாகிக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. உண்மையில் அதைத் தான் நான் எனது கட்சி சார்பாகக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். எந்த இனங்களாக இருந்தாலும் கெட்டவர்கள் நல்லவர்கள் என்ற அடிப்படையில் வாழ்வது என்பது யதார்த்தமான உண்மை. எந்த இனத்தையும் ஒட்டு மொத்தமாக ஒரு தவறான இனமாக சித்திகரிப்பது, அல்லது இந்த தாக்குதல் சம்பவத்தை உதாரணத்துக்கு எடுத்து ஒரு இனத்தை முழுமையாக நாங்கள் தீவிரவாதியாகப் பார்ப்பது உண்மையில் தவறான ஒரு விடயம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் 2019 ஏப்பிரல் மாதம் 21ம் திகதி நடைபெற்ற இந்த தீவிரவாதத் தாக்குதல் இலங்கையில் இருக்கக் கூடிய படையினர் அல்லது காவல்துறையினர் இங்கு சரியான விசாரணைகளை நடாத்தியிருப்பார்களாக இருந்தால். 2018ம் ஆண்டு இந்த மாவீரர் தினங்கள் அண்மித்திருந்த காலப்பகுதியில் கிழக்குப் பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு என்கின்ற பிரதேசத்தில் இரண்டு இலங்கை காவல்துறையைச் சார்ந்த பொலிசார் இருவர் கொலை செய்யப்பட்டிருந்தார்கள். அந்த கொலை சம்பந்தமாக பரபரப்பான நிலைமை இருந்த காலகட்டத்தில் முன்னாள் போராளிகள், முன்னால் விடுதலைப்புலிகள் சார்ந்த போராளிகள் கைது செய்யப்பட்டு அந்த பொலிசார் சம்பந்தப்பட்ட கொலைகள் அப்படியே மூடி மறைக்கப்பட்டது. உண்மையில் அந்த விசாரணை சரியாக பொலிசாரினால் நடாத்தப்பட்டிருக்குமாக இருந்தால் 21ம் திகதி நடந்த தீவிரவாதத் தாக்குதலை நாங்கள் தடுத்து நிறுத்தியிருக்கலாம், உண்மையான குற்றவாளி கைது செய்யப்பட்டிருப்பாராக இருந்தால். இப்படியான நிலைமைகளைப் பார்க்கின்ற பொழுது இன்று தமிழ் அரசியல் கைதிகள் எவ்வாறான அடிப்படைத் தேவைகளில் கைது செய்யப்பட்டிருப்பார்கள் எவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு இன்றும் சிறைகளில் இருக்கின்றார்கள் என்பது தெட்டத் தெளிவாக இன்று மக்கள் மத்தியில் உணரக்கூடியதான ஒரு சந்தர்ப்பத்தை இந்த தீவிரவாதத் தாக்குதல் ஒட்டு மொத்த தமிழினத்திற்கும் கற்றுத் தந்திருக்கின்றது.

ஆகவே தொடர்ந்து பல குற்றச்சாட்டுக்களை தமிழர் மீது சுமத்தி அப்பாவிகளாக இன்று நீண்டகாலம் சிறையில் வாடிக்கொண்டிருக்கக் கூடிய தமிழ் மக்களுக்கு அல்லது அந்தப் போராளிகளுக்கு நீண்டகாலமாக காணாமல் ஆக்கப்பட்ட அந்த உறவுகளைத் தேடி அலைந்து இன்று வருடக்கணக்கில் அந்த காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் இன்று நீண்டகாலமாக தங்களின் போராட்டங்களை நடாத்திக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களுக்கான விசாரணை இன்று வரையும் இந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகாவது அனைத்து இன மக்களையும் நாங்கள் மதித்து அவர்களுக்கான சிறப்புரிமைகளை நாங்கள் வழங்கவேண்டும் என்ற அடிப்படையில் இன்றைய இந்த நாட்டின் அதி மேதகு ஜனாதிபதியாக இருந்தாலும் சரி அல்லது பிரதம மந்திரியாக இருந்தாலும் சரி இனியாவது மறைக்காமல் மக்களுக்கு உண்மையைக் கொண்டு வந்து அவர்களுக்கான பாதுகாப்பை வழங்கவேண்டும் என்ற அடிப்படையில் இந்த காணாமல் ஆக்கப்பட்ட அனைத்து உறவினர்களுக்கும் ஒரு சரியான முடிவை இந்த அரசாங்கம் பெற்றுக் கொடுக்கவேண்டும். உண்மையான விசாரணைகளைச் செய்யவேண்டும். அதனூடாகத் தான் மக்களுக்கு ஒரு இந்த நாட்டின் பாதுகாப்பையும், அல்லது பாதுகாப்பு பிரிவினர் மீதும் நம்பிக்கைக் கொள்ளக் கூடிய நிலமை உருவாகும் என்பது எனது கருத்து.

கேள்வி: வடக்கில் இராணுவக் கெடுபிடிகள் அதிகரித்து வடக்குத் தமிழ் மக்களை இலக்குவைத்து அவசரகாலச் சட்டம் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக உங்களுடைய கருத்து என்ன?

பதில்:- உண்மையில் குறிப்பாக வடகிழக்கில் கூடுதலான பாதுகாப்பு அழுத்தங்கள் அதாவது நான்கு ஐந்து கிலோமீற்றருக்கு இடையில் பேரூந்தில் பயணிக்கின்றவர்களை இறக்கி இன்று காலையில் கூட நாங்கள் செட்டிகுளம் செல்கின்ற பொழுது பம்பைமடு இராணுவ முகாமிற்கு முன்னால் கிட்டத்தட்ட நூறுமீற்றறுக்கு இடைவெளியில் அவர்களை இறக்கி நடக்கவிட்டிருக்கின்றார்கள். இப்படியான நிலைமைகள் இந்த அவசரகாலச் சட்டத்தை பயங்கரவாதச் சட்டத்தை மீண்டும் கொண்டு வந்த காரணத்தினால் பாதுகாப்பு சம்பந்தமாக கருத்து தெரிவிக்கவேண்டாம் என்ற நிலைப்பாட்டை அரசதரப்பினர்கள் முன்வைத்துள்ளார்கள். அன்று இந்த தீவிரவாத தாக்குதல்களின் பின் பாதுகாப்புக் கெடுபிடிகள் இருந்தாலும் நிறைய தீவிரவாத அமைப்பைச் சார்ந்த அல்லது அவர்களுக்கு ஆதரவாக இயங்கிய தளங்கள் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்ட முகாம்கள் அவர்கள் பிடித்து வைத்திருந்த வெடிபொருள்கள், துப்பாக்கிகள், கத்திகள், வாள்கள் என பல பொருட்கள் உண்மையிலே கண்டெடுக்கப்பட்டிருக்கின்றது. அதனால் உண்மையில் எங்களுக்கு இந்த பாதுகாப்பை நீக்குங்கள் அல்லது பாதுகாப்பு சம்பந்தமான அழுத்தங்களைக் கொடுப்பதென்பது எனக்கு ஒரு கடினமான விடயம் என்று நான் கருதுகின்றேன். ஏன் என்று சொன்னால் இதை வைத்து உண்மையிலே எந்தவிதமான கைதுகளும் நடைபெறாமல் அல்லது எந்தவிதமான வெடிபொருட்களும் கைப்பற்றாமல் இருந்திருந்தால் நாங்கள் உண்மையிலே அதைச் சொல்லலாம் எங்கள் மிது அழுத்தங்களை ஏற்படுத்துகின்றார்கள் என்று.

பரவலாக  வடகிழக்கு உற்பட தென்பகுதியில் எல்லா இடங்களிலும் போதுமான அளவான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் மதத் தளங்களிலும் கூட பெருமளவான கத்திகள், வாள்கள் என கைப்பற்றப்பட்டிருக்கின்றது. அதேபோல கிளிநொச்சியில் ஒரு சில பகுதியில் கைப்பற்றியிருக்கின்றார்கள். யாழ்ப்பாணத்தில் பதுங்கு குழிகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. அங்கு வெடிபொருட்கள் கண்டுபிடித்திருக்கின்றார்கள். கொழும்பில் அண்மையில் மாலிகாவத்தையில் கண்டு பிடித்திருக்கின்றார்கள். இந்த பயங்கரவாதச் சட்டம் என்று சொல்லி கொண்டு வரப்பட்டது தொடர்ச்சியாக நீடிப்பதற்கான சட்டமில்லை. இந் தீவிரவாதிகளை முற்று முழுதாக அழிப்பதற்கான ஒரு சட்டமாகத் தான் தற்காழிகமாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆகவே உரிய காலத்தில் இந்தக் கைது நடவடிக்கைகள் முடிந்த பின்பு ஒரு சாதாரண வாழ்க்கையை வாழக் கூடியதாக இருக்கும். ஏனெனில் தொடர்ந்து இதனை இப்படி வைத்திருக்க முடியாது ஏன் என்று சொன்னால் இந்த நாட்டின் பொருளாதார மையமாக இருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை முற்று முழுதாக தடைசெய்யப்பட்டிருக்கின்றது. ஆகவே இந்த சுற்றுலா விடுதிகளை வைத்திருக்கின்ற முதலாலிமார்கள் பெரியதொரு வீழ்ச்சியில் பின் தள்ளப்பட்டுள்ளார்கள். இலங்கை அரசாங்கமும் பெரியதொரு பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. தனிப்பட்ட வடகிழக்கில் மட்டுமென்று இல்லை கூடுதலாக வடகிழக்கில் தமிழ் மக்கள் பிரதேசத்தில் கெடுபிடி என்ற கருத்தை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.

கேள்வி:- அமைச்சர் ரிஷhட் பதியூன் அவர்களுக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும், ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கும் ஐஎஸ்.ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும், தொடர்பு இருக்கின்றதா? இல்லையா? என்கின்ற கேள்வியைக் கேட்டால் உங்களுடைய பதில் எவ்வாறு இருக்கும்?

பதில்:- அமைச்சர் ரிஷhட் பதியூதின் அவர்கள் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கா? இல்லையா? என்பது பற்றி உண்மையில் எனக்கு ஆணித்தரமாகக் கூறமுடியாது ஏனென்று சொன்னால் அவர் வாய் உற்பட அல்லது அவரது வாயால் அப்படியான வார்த்தைகள் சொன்ன பதிவுகளை நான் இன்னமும் பார்க்கவில்லை. அதனால் அவருக்கு அதில் தொடர்பு இருக்கின்றதா? இல்லையா? என்ற விடயம் உண்மையில் எனக்குத் தெரியாது. ஆனால் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தனது வாயால் சில வார்த்தைகள் கூறியிருக்கின்றார். அண்மையில் சில ஊடகங்களில் பார்த்திருந்தேன் விடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் இஸ்லாமியப் படையினரைப் பாதுகாப்பதுக்காக ஆயுதப்பயிற்சிகள் வழங்கப்பட்டு தானே நின்று அந்த ஆயுதத் தளங்களை அமைத்து பயிற்சி பெற்று அந்த பாதுகாப்பு வலயங்களை உருவாக்கி இரவு பகலாக தானும் வந்து நின்று தனது முஸ்லிம் இளைஞர்களுக்கு பலருக்கு ஆயுதங்களைப் பெற்றுக் கொடுத்து தான் இந்த இஸ்லாமிய மக்களைக் காப்பாற்றுகின்றேன் என்று பலருக்கு தனது வாக்குமூலமாக குரல் பதிவுகளை (voice cut) பல மீடியாக்கள் போட்டிருக்கின்றது. அதனை ஒப்பிட்டு பார்க்கும் போது ஐஎஸ்.ஐஎஸ்க்கும் அவருக்கும் தொடர்பு இருக்கின்றதா? இல்லையா? என்பதற்க்கு அப்பால் இங்கிருக்கக் கூடிய இப்படியான தீவிரவாதிகள், பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கின்றது என்பது தெட்டத் தெளிவாக அவரே கூறியிருக்கின்றார். அது விடுதலைப்புலிகள் இருந்த காலகட்டமாக இருந்தாலும் சரி அவருக்கு அந்த ஆயுதத்தை வைத்திருப்பதற்கான அனுமதியைக் கொடுத்தது யார்? அவர் யாருடைய அனுமதியைப் பெற்று எந்தவிதமான அச்சமும் இல்லாமல் பகிரங்கமாக அந்த ஊடகங்களுக்கு கதைக்கக் கூடிய அந்த அதிகாரத்தைக் கொடுத்தது அது அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட சட்டரீதியான ஆயுதமா? அல்லது அவரால் கொள்வனவு செய்யப்பட்ட பயங்கரவாதத்துக்கான ஆயுதமா? என்கின்ற கேள்விக்கு இன்னும் அரசாங்கமும் பதில் சொல்லவில்லை? அவரும் பதில் சொல்லவில்லை. எல்லோரும் தப்பிக் கொள்கின்ற நிலைப்பாட்டில் தான் இன்றைய கருத்தைக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

கேள்வி:- முஸ்லிம்கள் வந்து புர்க்கா அணிந்து செல்வது தடைசெய்யப்படவேண்டும் என்ற கருத்துக்கு உங்களுடைய நிலைப்பாடு என்ன?

பதில்:- உண்மையில் அந்த நிலைப்பாட்டை வேற மதங்களைச் சார்த்தவர்களை விட இஸ்லாமிய சகோதரர்களே முழு பேரும் முன் வந்து இந்த பயங்கரவாதத்தை அடியோடு துடைப்பதற்காக இதை தற்காலிகமாக அணியாதீர்கள் என்று சில முஸ்லீம் அமைச்சர்கள் உட்பட அனைவரும் ஏற்றுக் கொண்ட ஒரு விடயமாகும். இது இலங்கையில் இன்று வரையும் எந்தவித ஒரு முஸ்லிம் அமைப்புக்களோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களோ அமைச்சர்களோ எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பது எனக்குத் தெரியும்.

கேள்வி:- ஹாதர் மஸ்தான் அவர்கள் கைது செய்யப்பட்ட இந்த முஸ்லீம் சகோதரர்களை உடனடியாக பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவேண்டும் என்று கூறி கோரிக்கை விடுத்திருக்கின்றார் அந்த வகையில் தமிழ் மக்கள் வந்து இன்றும் காணாமல் ஆக்கப்பட்டோர், தமிழ் அரசியல் கைதிகள் என்று இன்னும் சிறையில் இருக்கின்ற நிலையிலே வந்து இவர் இதுவரை காலமும் இந்தக் கருத்தைக் கூறாத இவர் தற்சமயம் இந்தக் கருத்தைக் கூறியிருப்பதன் மூலம் நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?

பதில்:- உண்மையில் இந்த வருடம் ஏப்பிரல் மாதம் 21ம் திகதி அதாவது கிறிஸ்தவ யேசு பெருமானின் உயிர்த்த ஞாயிறு என்கின்ற அன்றைய தினம் தீவிரவாதக் குண்டுத் தாக்குதலில் பல தமிழர்கள் கூடுதலாக கொல்லப்பட்டிருக்கின்றது யாரும் அறிந்த உண்மை. குறிப்பாக மட்டக்களப்பில் நடந்த கிறிஸ்த்தவ தேவாலய குண்டு வெடிப்பில் ஒட்டுமொத்தமாக கொல்லப்பட்டவர்கள், காயப்பட்டவர்கள் தமிழர்கள். அதே போன்று நான் நினைக்கின்றேன் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலனவர்கள் தமிழர்கள். அதே போன்று நீர்கொழும்பு தேவாலயத்திலும் கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள், சிங்களவர்கள் என குறிப்பாக கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாகக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே இந்த நிலமையில் இன்னும் தீவிரவாதம் முற்று முழுதாக ஒழிக்கப்படவில்லை. இந்தத் தீவிரவாதத் தாக்குதலில் யார்? யார்? தொடர்புபட்டிருக்கின்றார்கள். எந்தெந்த அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருக்கின்றது என்பதனை இன்னும் உறுதியாகவில்லை. ஜனாதிபதி கூறியிருக்கின்றார் மிக விரைவில் நாங்கள் அனைவரையும் கைது செய்வோம். அதனுடைய கருத்து என்ன சொல்லப்படுகின்றது என்று சொன்னால் கைது செய்யப்பட்டவர்கள் தீவிரவாதிகளா? இல்லையா? என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆகவே இந்த நேரத்தில் அவர்களை விடுதலை செய்யவேண்டும். இஸ்லாமிய சகோதரர்கள் என்றால் அந்த சகோதரர்களின் வழிநடத்துனரா இந்த ஹாதர் மஸ்த்தான் அவர்கள் என்பது தான் என்னுடைய நிலைப்பாடு. அந்தத் தீவிரவாதிகள் தீவிரவாதிகள் என்று இன்னும் பொலிசாரால் நீதிமன்றத்தால் இவர்கள் நிரபராதியா? குற்றவாளியா? தீவிரவாதியா? என்று நிரூபிப்பதற்க்கு முன்பு அவர்களின் விடுதலையைப் பற்றி இன்று உண்மையில் பல முஸ்லீம் கட்சிகள்; சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், அல்லது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அமைச்சர் ரிஷhட் பதியூதின் கட்சியைச் சார்ந்தவர்கள், முஸ்லீம் பிரதிநிதிகள் கூட இன்று அவர்களின் விடுதலையைப் பற்றி; நேற்றும் ஒரு பத்திரிகை மாநாட்டில் அனைத்து முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றினைந்து இதை அடியோடு ஒழிக்கவேண்டும் என்று தெளிவாகக் கூறியிருந்தார்கள். இதற்கு முதலும் கூறியது அது தான் உண்மையில் ஒட்டுமொத்த இலங்கைவாழ் முஸ்லிம்களாக இருந்தாலும் சரி அல்லது உலக வாழ் முஸ்லிம்களாக இருந்தாலும் சரி அனைவரும் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு உடந்தையோ ஆதரவோ என்பதை இனி யாருமே ஏற்றுக் கொள்ளமுடியாது. ஒரு சில தீவிரவாதிகள் முஸ்லிம் அல்லது இஸ்லாமியர்கள் சார்ந்த தீவிரவாதிகள் இந்தக் கொடுமையான தாக்குதலை எந்த நிபந்தனைகளும் அற்று நடத்தியுள்ளார்கள்.¬

SHARE