“வன்முறை சம்பவங்களின் பின்னணியில் சில அரசியல்வாதிகள்”

வன்முறை சம்பவங்களின் பின்னணியில் சில அரசியல்வாதிகளும், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளார்கள் என்ற தகவல்கள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. இதுபோன்ற அரசியல் தலைவர்களே அந்தந்த பிரதேச சபை உறுப்பினர்களை வன்முறைகளில் ஈடுப்படுமாறு தவறான முறையில் வழிநடத்துகின்றனர் என  பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் இத்தே பானே தம்மாலங்கார தேரர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது. சந்திப்பின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

எதிர்வரும் தினங்களில் கொண்டாடப்படவுள்ள முஸ்லிம் மக்களின் பண்டிகையான ரமலான் மற்றும் பௌத்த மக்கள் கொண்டாடும் வெசக் பண்டிகை ஆகியவற்றை அந்த மக்களை நிம்மதியாக கொண்டாடுவதற்கு இடமளிக்கப்பட வேண்டும்.

அத்தோடு இவ்வாறு சிலரால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகளால் கலவரமடையாது பொறுமையுடன் செயற்படுமாறு இஸ்லாம் மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறு பிரிவினையுடன் செயற்படாமல் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையை வெளிப்படுத்துவதோடு , நாட்டை வெகுவிரைவில் மீளவும் சாதாரண நிலைமைக்கு கொண்டுவர வேண்டும் என்பதும் எமது கோரிக்கையாகும்.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும் மாணவர்களின் வருகை மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. இந்த நிலைமையை உருவாக்கிய அரசியல் தலைவர்களே அவற்றை சரி செய்ய வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

About Thinappuyal News