உங்களுக்குத் தெரியுமா? ஈராக்கிய அல்கைதாவான ISIS இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் பாக்தாதி, சில வருடங்களுக்கு முன்னர் தான், அமெரிக்கர்களால் சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டிருந்தார்.

16

 

அமெரிக்கா வரும் பின்னே, அல்கைதா வரும் முன்னே!

உங்களுக்குத் தெரியுமா? ஈராக்கிய அல்கைதாவான ISIS இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் பாக்தாதி, சில வருடங்களுக்கு முன்னர் தான், அமெரிக்கர்களால் சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டிருந்தார். கடும்போக்கு இஸ்லாமியவாதிகளை, “விடுதலைப் போராளிகள்” என்று அங்கீகரித்திருந்த அமெரிக்கா, ஜோர்டானில் இராணுவப் பயிற்சி வழங்கியது.
ஈராக்கில் பல பிரதேசங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ISIS எனும் கடும்போக்கு இஸ்லாமியவாத இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கை எடுக்கப் போவதாக ஒபாமா அறிவித்துள்ளார். ஈராக்கிய அல்கைதா என்று அழைக்கப் படும் ISIS இயக்கத்தின் தலைவர் யார்? அபு பக்கர் அல் பாக்தாதி என்பது அவரது இயக்கப் பெயர். நிஜப் பெயர் : இப்ராஹீம் அவ்வத் அலி பத்ரி அல் சமாரி. இசிஸ் போராளிகள் மத்தியில் அவர் “அல் பாக்தாதி” என்றே அழைக்கப் படுகிறார்.
அமெரிக்க படையெடுப்புகளினால் சதாம் ஆட்சி கவிழ்க்கப் பட்ட பின்னர் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்தி, ஈராக்கில் அல்கைதா என்றொரு ஆயுதக் குழு ஒன்று இயங்கி வந்தது. அமெரிக்கப் படைகளுடனான மோதலில் அதன் தலைவர்கள் கொல்லப் பட்டனர். அப்போது அமெரிக்கப் படைகளினால் சிறைப் பிடிக்கப் பட்ட போராளிகளில் ஒருவர் தான் அல் பாக்தாதி.
2005 முதல், Camp Bucca எனும் அமெரிக்க தடுப்பு முகாமில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த அல் பாக்தாதி, 2009 ம் ஆண்டு திடீரென விடுதலை செய்யப் பட்டார். அப்போது, “உங்களை நியூ யோர்க்கில் சந்திக்கிறேன்!” என்று சிறைக் காவலர்களிடம் கூறி விட்டுச் சென்றுள்ளார். விடுதலையான பின்னர் எஞ்சியிருந்த போராளிகளை ஒன்று திரட்டி இயக்கம் கட்டியுள்ளார்.
2011ம் ஆண்டு, அல் பாக்தாதி, அமெரிக்கர்களால் “தேடப்படும் பயங்கரவாதி” என்று அறிவிக்கப் பட்டார். அவரது தலைக்கு விலையாக பத்து மில்லியன் டாலர் சன்மானம் வைக்கப் பட்டது.  அந்தக் காலகட்டத்தில் சிரியா உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகி விட்டது. அல் பாக்தாதி குழுவினர், சிரியாவில், அரச படைகளை எதிர்த்து சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள்.
அப்போது சிரியாவில், இன்னொரு இஸ்லாமிய கடும்போக்கு இயக்கமான அல் நுஸ்ரா இயங்கிக் கொண்டிருந்தது. அல் பாக்தாதி குழுவினர், அல் நுஸ்ராவுடன் கூட்டுச் சேர்ந்து, “ஈராக், சிரியாவுக்கான இஸ்லாமிய அரசு” (ISIS) என்ற பெயரில் ஒரு புதிய இயக்கத்தை உருவாக்கினார்கள். இரண்டு வருடங்களுக்குப் பின்னர், இரண்டு இயக்கமும் ஒரு சகோதர யுத்தத்தில் ஈடுபட்டனர். இஸ்லாமிய தனி அரசுக்காக ஐக்கிய முன்னணி அமைத்தவர்கள், எதிரிகளாக தமக்குள் மோதிக் கொண்டார்கள். அது வேறு விடயம்.
அல் நுஸ்ரா, சிரியாவில் ஆசாத் அரசை கவிழ்ப்பதை மட்டும் நோக்கமாக கொண்டிருந்தது. ISIS, லெபனான் முதல் ஈராக் வரை, ஒரு இஸ்லாமிய அரசு அமைப்பதை நோக்கமாக கொண்டிருந்தது. அதனால் அது ஒரு சர்வதேச அமைப்பாக பரிணமித்தது. மேற்கு ஐரோப்பாவிலும், பிற அரபு நாடுகளிலும் இருந்து, ஜிகாத் மீது பற்றுக் கொண்ட புதிய உறுப்பினர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
அல் நுஸ்ரா, ISIS ஆகிய இயக்கங்களுக்கு தேவையான நிதியுதவி, கட்டார், சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து தாராளமாக கிடைத்து வந்தது. அவர்களுக்கு ஆயுத விநியோகம் செய்த நாடு எது? வேறு யார், அமெரிக்கா தான்! இசிஸ் போராளிகளுக்கு, ஜோர்டானில் வைத்து அமெரிக்க இராணுவத்தினால் பயிற்சியளிக்கப் பட்டது. சண்டையில் காயமடைந்த போராளிகளுக்கு, துருக்கியிலும், இஸ்ரேலிலும் மருத்துவ சிகிச்சை அளிக்கப் பட்டது.
அல் நுஸ்ரா, இசிஸ் ஆகிய இயக்கங்கள், சவூதி நிதியும், அமெரிக்க ஆயுதங்களும் பெற்று, பலமான இயக்கங்களாக வளர்ந்து, சிரியாவின் வடக்குப் பகுதியில் தமக்கென கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை வைத்திருந்தார்கள். அந்தப் பகுதிகளில் ஷரியா சட்டத்தை அமுல்படுத்தினார்கள். முன்னர் ஆப்கானிஸ்தானில் தாலிபான் நடத்தியது போன்றதொரு ஆட்சியை அமைத்தார்கள்.
இசிஸ் அமைப்பின் செயற்பாடுகள், ஒரு வணிக நிறுவனம் போன்று அமைந்திருந்தன. சிரிய அரச படைகளுக்கு எதிரான தாக்குதல்களை ஆவணப் படுத்தினார்கள். மாவீரர்களான போராளிகளின் பெயர்களை பதிவு செய்து வைத்தனர். வெளிநாடுகளில் பரப்புரை செய்வதற்கு உதவியாக, ஊடக தொடர்புகளை விரிபு படுத்தினார்கள். இசிஸ் போராளிகள் சிலர், வீடியோ படப் பிடிப்பாளர்களாக களப் பயிற்சி பெற்றனர். அவர்கள் இணையத்தில், சமூக வலைத் தளங்களிலும் இயங்கினார்கள்.
யுத்த களங்களில், சிரிய இராணுவத்தை எதிர்த்துப் போரிடும் காட்சிகளை வீடியோ படமாக்கி, இணையத் தளங்களில் பரப்பினார்கள். மேற்கத்திய ஊடகங்கள் அவற்றை எடுத்து ஒளிபரப்பின. வீடியோ போராளிகள் போர்க்கள காட்சிகளை மட்டும் படம் பிடிக்கவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட சிரிய மக்கள் படும் துன்பங்களை, வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டார்கள். அந்த வீடியோக்கள், வெளிநாடுகளில் “விடுதலைப் போராட்டத்திற்கு” ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்கு பெரிதும் உதவின. அந்தக் காலங்களில், மேற்குலகில் இசிஸ் ஒரு “விடுதலை இயக்கமாக” கருதப் பட்டது.
இசிஸ் இயக்கம், திடீரென ஒரு சில நாட்களுக்குள் ஈராக்கின் பல நகரங்களை கைப்பற்றி தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தமை, பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. “இஸ்ரேலை யாராலும் வெல்ல முடியாது” என்பது போன்ற மாயை, இசிஸ் இயக்கத்தை சுற்றியும் பின்னப் பட்டது. உண்மையில், அமெரிக்காவின் உதவியின்றி, இசிஸ் மட்டுமல்ல இஸ்ரேல் கூட, ஒரு திடீர் யுத்தத்தில் வெற்றி மேல் வெற்றியை குவித்திருக்க முடியாது. தற்போது, ஈராக்கிய நலன்களை பாதுகாப்பதற்காக, “இசிஸ் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்” அமெரிக்கா குதித்துள்ளது. அதுவும் ஒரு கண்துடைப்பு நாடகம் தான்.
ஏற்கனவே, இசிஸ் இயக்கத்தினர் எண்ணைக் கிணறுகளை கொண்ட மொசுல் நகரை கைப்பற்றிய நாளில் இருந்து, சர்வதேச சந்தையில் எண்ணையின் விலை உயர்ந்துள்ளது. இதனால், சவூதி அரேபியாவுக்கும், அமெரிக்காவுக்கும் மேலதிக வருமானம் கிடைக்கின்றது. அது அவர்களது பொருளாதாரத்திற்கு நல்லது. மேலும், ஈராக்கில் பிரச்சினை இருப்பதாகவும், அமெரிக்காவை தவிர வேறு யாரும் அதனை தீர்த்து வைக்க முடியாதென்றும் “நிரூபிப்பதன்” மூலம், ஈராக்கை தொடர்ந்தும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முடியும்.
SHARE