பௌத்த காவிகளினால் இலங்கைக்கு ஆபத்து – தமிழினத்துடன் முஸ்லீம்கள் ஒன்றுபடுதலுக்கான இறுதிச் சந்தர்ப்பம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் அசாதாரண நிலையைப் பார்க்கின்றபோது சம்பந்தப்படாத விடயங்கள் ஒன்றையொன்று சந்திக்கின்ற நிலைப்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளது தாக்குதல் இலங்கையில் இடம்பெற்றதையடுத்து ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் பதவி விலகவேண்டும் என்கிற கோரிக்கையினை முன்வைத்து உண்ணாவிரதமிருக்கும் அத்துரலிய ரத்ன தேரர் உட்பட்ட சிங்களப் பேரினவாதிகளும் இவர்களுடன் இணைந்து இவர்களுக்கு ஆதரவாக செயற்படும் சில தமிழர்களையும் நினைக்கும்போது உண்மையில் தமிழினம் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் பதவி விலகுவதால் இலங்கையிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதத்தை முற்றாக ஒழித்துவிட முடியாது. மாறாக முஸ்லீம் அடிப்படை தீவிரவாதிகளது வளர்ச்சியும், இஸ்லாமிய அரசியல்வாதிகளுடைய வளர்ச்சியும் முன்னேறிச் செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
குறிப்பாக இலங்கையில் தேர்தல் நடைபெற்றால் அதில் 22 இலட்சம் வாக்குகள் முஸ்லீம் கட்சிகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கிறது. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதத் தாக்குதல்கள் பல்வேறான நாடுகளில் இடம்பெற்றிருக்கிறது. இந்த நாடுகளில் எல்லாம் எந்தவொரு அரச தலைவர்களோ அல்லது பொலிஸ் தலைமை அதிகாரிகள், அமைச்சர்கள் பதவி விலகவுமில்லை அல்லது விலக்கிவைக்கப்படவுமில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது. இது ஒரு உள்நாட்டு அரச பழிவாங்கல் ஆகும்.

முஸ்லீம் மக்களைப் பொறுத்தவரை அவர்களது ஆரம்ப நாட்களைப் பார்க்கின்றபோது அவர்களும் தேசியம், சுயநிர்ணய உரிமைக்கானப் போராட்டங்களில் பங்கெடுத்தார்கள். 450இற்கும் மேற்பட்ட முஸ்லீம் போராளிகள் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர்கள். விடுதலைப்புலிகளில் இம்ரான் பாண்டியன் படையணி என்பது சிறந்த படையணியாகும். இம்ரான் என்பது முஸ்லீம் பெயர். இப்பெயரையே தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் இப்படையணிக்குப் பயன்படுத்தினார். அது மட்டுமன்றி ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலிகளின் ஆயுத வழங்கலில் ஈடுபட்டிருந்த பல போராளிகள் நான்காம் மாடி, மெகசின் போன்ற சிறைச்சாலைகளில் இன்னமும் அடைபட்டு கைதியாக்கப்பட்டுள்ளனர். இவர்களுடைய குறிக்கோள்கள் என்ன? தேசியம், சுயநிர்ணய உரிமையினை வென்றெடுப்பதேயாகும். இன்றைய காலகட்டத்தில் தமிழ் பேசும் மக்களாக முஸ்லீம் மக்கள் ஒன்றிணைந்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். குறிப்பாகப் பார்க்கின்றபோது பயங்கரவாத தடைச்சட்டம், அவசரகால தடைச்சட்டம் இரண்டும் அமுலில் இருக்கின்றபோது எந்தவொரு ஆர்ப்பாட்டங்களையும் செய்ய முடியாது. மீறிச் செய்தால் அரசு கட்டுப்படுத்த இயலும்.

தமிழ் மக்கள் ஒரு ஆர்ப்பாட்டத்தை செய்தால் அதனை தடுத்து நிறுத்த ஆட்கள் இருக்கிறார்கள். இது எவ்வகையில் நியாயம். சிறுபான்மையினத்திற்கு எதிராக அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப் பட்டிருக்கிறது என்றுதான் கூறலாம். அரச பயங்கரவாதம் என்பது ஒரு நாட்டிற்குள் தன்னிச்சையாக செயற்பட முடியாமல் ஒரு இனத்தை அடிமைத்தனப்படுத்துவது ஆகும். அதனைத்தான் கடந்த 30 வருட காலமாக சிங்கள பேரினவாத அரசு தொடர்ச்சியாகச் செய்து வருகின்றது. பௌத்தர்கள் இந்து சமயத்தில் இருந்து தான் வந்தவர்கள் என்பது வரலாறு. நிலைமைகள் இவ்வாறிருக்க இன்று பௌத்த பிக்குகளின் ஆட்சியே இங்கு நடக்கிறது. இவர்கள் கூறுவதைத்தான் சிங்கள ஆட்சியாளர்கள் செயற்படுத்துகிறார்கள். முஸ்லீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்கிற கண்ணோட்டம் தவறானது. இதில் ஒரு விடயத்தை முஸ்லீம்கள் சிந்திக்கவேண்டும். தமிழினத்தை சிங்கள பேரினவாத அரசு அழித்தொழித்தபோதெல்லாம் சிங்களவர்களுடன் இணைந்து பாற்சோறு பொங்கி கொண்டாடி வந்தனர். அப்பாவி பொது மக்கள் கொலை செய்யப்பட்ட போது எந்த முஸ்லீம் பிரதிநிதி குரல்கொடுத்தார்.

ஆனால் 2019 ஈஸ்டரின் போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வேலையை முஸ்லீம் பிரதிநிதிகள் செய்தார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் தமது சுயலாப அரசியலுக்காகவே அஞ்சலியைத் செலுத்தியுள்ளனர். இனியாவது முஸ்லீம் அரசியல்வாதிகள் மற்றும் முஸ்லீம் மக்கள் தமிழினத்துடன் இணைந்து ஆட்சியமைக்கவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளவே;ணடும். அல்லாதுபோனால் தொடர்ந்தும் சிறுபான்மை இனம் அரச பயங்கரவாதிகளினால் நசுக்கப்படும். இனியாவது அரசாங்கத்திற்கு வக்காளத்து வாங்குகின்ற அரசியலிலிருந்து முஸ்லீம் அரசியல்வாதிகள் ஒதுங்கிக்கொள்ளவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒரு உடன்பாட்டிற்கு வரும்போது தான் தமிழ் பேசும் மக்களாக இந்நாட்டிலிருந்து செயற்பட முடியும். வடகிழக்கு இணைப்பு சாத்தியப்படுமாகவிருந்தால் வடகிழக்கில் வாழும் முஸ்லீம் மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும்.

மறைந்த முஸ்லீம் காங்கிரசின் தலைவர் அஷ்ரப்பினுடைய அரசியல் நடவடிக்கைகளைப் பார்த்தாவது இவர்கள் திருந்திக்கொள்ள வேண்டும். முஸ்லீம் அரசியல்வாதிகளை இராஜினாமா செய்யக் கோருகின்ற அதேவேளை நாட்டின் பொருளாதாரம் பற்றியும் அரசாங்கம் சிந்திக்கவேண்டும். மத்திய கிழக்கு நாடுகள் குறிப்பாக இலங்கையின் மீது பலதரப்பட்ட கட்டுப்பாடுகளை இந்த பதவி விலகலின் ஊடாக விதிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதம் என்பது அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளினால் இயக்கப்படும் ஒரு பயங்கரவாத அமைப்பு. இவர்களிடம் உலகில் எங்குமில்லாதளவிற்குப் பணப் புழக்கம் இருக்கிறது. ஆகவே அமெரிக்க தூதரகத்தை இலங்கையிலிருந்து வெளியேற்றுவதன் ஊடாக அல்லது அரபு நாடுகளின் தூதரகங்களை இந்நாட்டில் இருந்து அகற்றுவதன் ஊடாக தீவிரவாதத்தை ஒழிக்க முடியும். பௌத்த தேரர்கள் இந்நாட்டில் தமது மதம் மாத்திரம் வாழவேண்டும் என நினைக்கிறார்கள். இது தவறாகும்.

அந்தந்த நாடுகளின் இறைமைக்கேற்ப மதம், கலை, கலாச்சாரங்கள் மதிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனாலும் பௌத்த துறவிகளைப் பொறுத்தவரை அரசியல் ரீதியான களவரங்களில் ஈடுபடுவது இவர்களது காலங்காலமான செயற்பாடாக இருந்து வருகிறது. கடந்த காலங்களில் இந்து சமய பூசகர் ஒருவரை எரியும் டயரில் வீசிக் கொலை செய்ததன் விளைவே தொடர் வன்முறைகள் தமிழினத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டது. ஈழப்பேரின் இறுதிக்கட்டத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் சிங்களப் பேரினவாதிகளால் கொலை செய்யப்பட்டனர். இவ்வாறான நிலைமைகள் இந்நாட்டில் மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றது.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை தொடர்புபடுத்தி மற்றொரு அழிவினை இந்நாட்டில் ஏற்படுத்த சதித்திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இன்றுடன் இந்தப் பிரச்சினைகள் நின்றுவிடப் போவதில்லை. இத்தீவிரவாதிகளை கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட இயலாமையினாலேயே முஸ்லீம் அரசியல்வாதிகளை பதவி விலக்கியாவது பௌத்த தேரரின் கோரிக்கையினை நிறைவேற்றிக் காட்டியிருக்கிறது அரசு. அரசின் இச் செயற்பாடானது சிறுபான்மை சமுதாயத்தை வேறு திசைக்கு இட்டுச்செல்கிறது. தமிழினம் கொத்துக்கொத்தாக கொலை செய்யப்படும்போது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களோ அல்லது அரசியல்வாதிகளோ, பொதுமக்களோ சாகும் வரையான உண்ணாவிரதத்தில் ஈடுபடவில்லை. இதேவேளை பௌத்த துறவிகளுக்கு ஆதரவாக சில தமிழர்கள் இணைந்து செயற்படுவதென்பது தமிழினத்திற்கு இவர்களின் துரோகத்தினையே வெளிப்படுத்தி நிற்கிறது.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் இலங்கையில் இனப்படுகொலை நடந்ததை மூடிமறைப்பதற்காக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகைகளை வழங்கியது அரசு. தொடர்ந்தும் காலக்கெடு. இக்காலக்கெடுக்கள் அனைத்தும் போர்க்குற்ற விசாரணைகளை பிற்போடவைக்கும் செயல்வடிவங்களாகும். ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் கொலை செய்யப்பட்டவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது சாட்சிகள் மற்றும் பதிவுகள் இருக்கின்றபோதிலும் அதனை மூடிமறைப்பதற்காக வடக்கில் ஒரு ஆட்சி, கிழக்கில் ஒரு ஆட்சி நடக்கிறது. தமிழர்களுக்கு பதவிகள், கம்பெரலிய திட்டத்தின் கீழ் சலுகைகள் போன்றன வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே சிறுபான்மை இனத்தை எவ்வாறெல்லாம் சிங்களப் பேரினவாதிகள் அடக்கியாள முடியுமோ அந்தளவிற்கு மிகக் கச்சிதமாக அவர்கள் செயற்பட்டு வருகிறார்கள். ஒற்றுமையே பலம் என்பதற்கேற்ப இனியாவது தமிழர்களும், முஸ்லீம்களும் ஒரு குடையின் கீழ் தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது என்பதை இந்த பௌத்த காவிகளின் அடாவடித்தனங்கள் எடுத்துக்காட்டுகிறது.

– இரணியன் –

About Thinappuyal News